வில்லியனூர் காவல் நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

IMG-20150903-WA0042மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.09.2015) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வில்லியனூர் காவல்நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

வில்லியனூர் அருகே உள்ள முத்துப்பிள்ளைப்பாளையம் நடராஜன் நகரில் வசித்து வந்த தலித் இளைஞர் முத்துக்குமரன் (வயது 36) என்பவரை கடந்த மாதம் 27ம் தேதி வில்லியனூர் போலீசார் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் கடந்த 1ம் தேதியன்று அவர் காவல்நிலையத்திற்குள் தன் கைலியால் தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக போலீசார் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனையில் குழு மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அனைத்தும் விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிக் கிடைக்கும் வரையில் உடலைப் பெற மாட்டோம் எனக் கூறிவிட்டதால் தற்போது உடல் ஜிப்மர் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர் போலீசார் முத்துக்குமரனை 5 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து கடும் சித்தரவதைச் செய்துள்ளனர். இதனால்தான் அவர் மரணமடைந்துள்ளார். அவரது முதுகுப் பகுதியில் போலீசார் அடித்த காயத் தழும்புகள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். போலீசார் அவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்ததாக கூறுவது நம்பும்படி இல்லை.

திருட்டு வழக்குகளில் திருடுப் போன நகை, பணம் போன்றவற்றைக் கைப்பற்ற போலீசார் குற்றவாளிகளிடம் மூன்றாம் தர சித்தரவதை விசாரணை முறைகளைக் கையாள்வது வழக்கம். காவல்நிலைய மரணங்களில் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர். போலீசார் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இதுபோன்ற கட்டுக் கதையைக் கூறுகின்றனர்.

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார் வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பணம் கொடுத்து சமரசம் செய்ய முயற்சித்து வருகின்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார் அனைவரையும் புதுச்சேரியை விட்டு வேறு மாவட்டத்தில் தங்கி இருக்க அரசு உத்தரவிட வேண்டும்.

காவல்நிலைய மரணம் எனப் பதியப்பட்ட வழக்கை உடனே கொலை வழக்காகப் பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இக்குற்றத்தில் போலீசார் சம்பந்தப்பட்டு உள்ளதால் வழக்கை புதுச்சேரி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

மரணமடைந்த முத்துக்குமாருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவரது மனைவி கடந்த ஆண்டு இறந்துள்ளார். தாய், தந்தையை இழந்து ஆதரவற்று நிற்கும் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். மூன்று பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*