கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமூதின், மனித உரிமைக் காப்பாளர் இரா. பாபு, தமிழ்நாடு ஊரக நுகர்வோர் சங்கச் செயலாளர் கே.திருநாவுக்கரசு ஆகியோர் இன்று (06.09.2016) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (22) என்பவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 27 அன்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்றைய தினம் மேற்சொன்ன கைதி மணிகண்டன் கடலூர் மத்திய சிறையில் உள்ள குண்டர் தடுப்புச் சட்ட கைதிகள் அடைக்கும் பிரிவின் கழிவறையில் லுங்கியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீதிமன்ற உத்திரவின் பேரில் பலத்தப் பாதுகாப்புடைய மத்திய சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதோடு, இது கடும் கண்டனத்திற்குரியது.

தற்கொலை செய்து கொண்ட கைதியின் சட்டைப் பையில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றிய தற்கொலைக் குறிப்பில் ’திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் நான்கு பேர் சேர்ந்து என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நான் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன். எனவே, அந்த நான்கு போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார்.

கைதி தற்கொலை சம்பவத்திற்குக் கடலூர் மத்திய சிறைத்துறையினரும் திருவெண்ணைநல்லூர் காவல்துறையினரும் தான் காரணம். இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட சிறைத்துறையினர், காவல்துறையினர் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்ற காவலில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு அரசும் சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் பாதிக்கப்பட்ட கைதியின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் உடனே வழங்க வேண்டும்.
கடலூர் மத்திய சிறையில் கடந்த ஆறு மாதங்களில் கைதிகள் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் கைதிகள் 3 பேர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஏராளமான கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என பலமுறை மாவட்ட நிவாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, கடலூர் மத்திய சிறையில் கைதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

கடலூர் மத்திய சிறையைக் கண்காணிக்க மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இக்குழுவிற்குச் சிறைக் கைதிகளை சந்தித்தும், சிறைச் சாலையை பார்வையிட்டும் அரசுக்கு உரிய பரிந்துரைகள் அளிக்கும் வகையில் அதிகாரம் வழங்க வேண்டும்.

சிறைகளில் தற்கொலைகள் தடுப்பது குறித்து கடந்த 2014ல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள 15 அம்ச வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைச்சாலைகள் சிறைக் கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையை (Right to Life) பறிக்கும் இடமாக திகழக் கூடாது.

சிறைச் சீர்திருத்தம் குறித்து நீதிபதி முல்லா அளித்துள்ள பரிந்துரையின்படி தேசிய சிறைக் கொள்கை (National Prison Policy), தேசிய சிறை ஆணையம் (National Commission for Prison) ஆகியவற்றை மத்திய அரசு உடனே உருவாக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*