புதுச்சேரியில் நீதிபதி கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா குழு அமைக்கப்பட்டது

மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திபேன் இன்று (27.05.2016) ஆனந்தா இன் ஓட்டலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது

உலக அளவில் புகழ்ப் பெற்ற மனித உரிமைப் போராளியும், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் இந்த ஆண்டு முழுவதும் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.

நீதிபதி கிருஷ்ணய்யர் புகழைப் போற்றும் வகையில் உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதிகள், அகில இந்திய அளவில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்கும் கருத்தரங்கங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள், ஆவணப்படம் தயாரித்தல், நீதிபதி கிருஷ்ணய்யர் பெயரில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விருது வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைவராகவும், பேராசிரியர் நா.இளங்கோ, இரா.சுகுமாரன், பொறியாளர் இரா.தேவதாசு, தமிழறிஞர் பெ.பராங்குசம், ஓவியர் இராஜராஜன், திரட்டி வெங்கடேஷ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்து செயல்படுவர். நீதிபதி கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கொ.அ.ஜெகன்நாதன், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், தமிழர் களம் தலைவர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் இராம்குமார், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பெ.சந்திரசேகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சு.பஷீர் அகமது, லோக் ஜனசக்தி தலைவர் சி.எம்,.புரட்சிவேந்தன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளர் எம்.ஏ.அஷ்ரப், பெரியார் அறிவியல் மன்ற தலைவர் தூ.சடகோபன்,, மக்கள் தலைவர் வ.சுப்பையா மக்கள் இயக்கப் பொதுச்செயலாளர் பா.ஆனந்து, தலித் சேனா செயலாளர் சுந்தர், பாரத மக்கள் சாசன உரிமை இயக்கத் தலைவர் ஜெயகாந்தன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இந்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓவியர் மருது வரைந்த நீதிபதி கிருஷ்ணய்யர் கோட்டோவியம் வெளியிடப்பட்டது. இந்த ஓவியம் நீதிபதி கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா முழுவதும் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு ஹென்றி திபேன் கூறினார்.

முடிவில் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை விருதுப் பெற்ற ஹென்றி திபேன் அவர்களுக்கு புதுச்சேரி சமூக அமைப்புகள் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*