புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க எதிர்ப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டு துறை செயலராக இருக்கும் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனை மத்திய அரசும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் தேச தலைவர் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியைப் பழித்தும் பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எவ்வித காரணமும் கூறாமல் மேத்யூ சாமுவேல் ரத்து செய்துள்ளார்.

இதனைக் கண்டித்தும், மேத்யூ சாமுவேல், போஸ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் கடந்த 10.10.2011 அன்று அனைத்து அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

மேலும், இப்படிப்பட்ட அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிக்க புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது தேச தலைவர்களையும், தமிழ் மொழியையும் கேவலப்படுத்தியதை ஆதரிப்பதாகும். இந்த பரிந்துரையை புதுச்சேரி அரசு உடனடியாக திருப்ப பெற வேண்டும்.

மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வலியுறுத்தி  டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*