காலாப்பட்டு ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2023) விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த 4.11.2023 அன்று இரவு காலாப்பட்டில் உள்ள ‘சோலாரா ஆக்டிவ் பார்மா (Solara Active Pharma)’ என்ற தனியார் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து தீ பிடித்ததில் 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 11 பேர் சென்னை தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேற்சொன்ன ரசாயன ஆலை சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஆலையின் கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல்நீர் மாசுப்பட்டு மீன்வளம் பாதிக்கப்படுகிறது. ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மாசை ஏற்படுத்தி மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறது. மேலும், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிரைத் தொடர்ந்துப் பறித்து வருகிறது. மொத்தத்தில் தொழிலாளர்கள், பொதுமக்கள் உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

1991ஆம் ஆண்டு அங்குள்ள கழிவு நீர் தொட்டியைத் தூய்மைப்படுத்தும் போது மேலாளர் உட்பட 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அப்போதே இந்த ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட கோரி தொடர் போராட்டம் நடத்தினோம்.

சென்ற ஜூலை மாதம்கூட இரண்டு தொழிலாளர்கள் இந்த ரசாயன ஆலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இது மூடிமறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் தொடர்ந்துப் பலியாகி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் இந்த ரசாயன ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து போராடியதில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்தது. பின்னர் ரசாயன ஆலை விரிவாக்கம் கைவிடப்பட்டது.

தற்போது இந்த ரசாயன ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டு, பாயிலர் வெடிப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசாயன ஆலை நிர்வாகம் உண்மையை மூடி மறைத்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விசாரணை நிலுவையில் இருக்கும்போது இவ்வாறு அறிக்கை வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது.

காலாப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்புக்கு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிரைப் பறிக்கும் ஆபத்தான இந்த ரசாயன ஆலையின் முதலாளி உள்ளிட்ட ஆலையின் முக்கிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும், இந்த ரசாயன ஆலையை அவ்வப்போழுது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய புதுச்சேரி அரசின் தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன் ஆய்வக அதிகாரிகள் மீதும் உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, புதுச்சேரி அரசு காலாப்பட்டு ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குப் பணிபுரியும் தோழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து விரிவான புகாரினை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*