மடப்புரம் அஜித்குமார் போலீஸ் காவலில் கொலை: உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை!

சிவகங்கை
21.07.2025

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 28) த/பெ. பாலகுரு (மறைவு) என்பவரைத் திருப்புவனம் காவல்நிலையக் குற்றப்பிரிவுத் தனிப்படைப் போலீசார் (Special Team) போலீஸ் காவலில் அடித்துக் கொலை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில் கீழ்க்காணும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

குழு உறுப்பினர்கள்:

1) திரு. கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு – புதுச்சேரி.
2) பேராசிரியர் சே.கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம், தமிழ்நாடு – புதுச்சேரி.
3) பேராசிரியர் செ.அமலநாதன், புரட்சிகர இளைஞர் முன்னணி, காரைக்குடி.
4) திரு. அ.சிம்சன், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.
5) பேராசிரியர் முனைவர் அரச முருகுபாண்டியன், செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), சிவகங்கை மாவட்டம்.

இக்குழு 18.07.2025 அன்று சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு. செந்தில்நாதன், பி.எஸ்சி.பி.எல்., 19.07.2025 அன்று கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயார் மாலதி, அவரது தம்பி காளீஸ்வரன், அவரது தங்கை சாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. அய்யம்பாண்டி, மதுரை மருத்துவக் கல்லூரித் துணை முதல்வர் மருத்துவர் சி.மல்லிகா, தடய அறிவியல் துறை உதவிப் பேராசிரியரும், அஜித்குமார் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் குழுவைச் சேர்ந்தவருமான மருத்துவர் எஸ்.ஏஞ்சல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கப் பாடுபட்டு வரும் வழக்கறிஞர் ஹென்றி திபேன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து, சட்ட உதவிகள் செய்து வரும் வழக்கறிஞர் கணேஷ் குமார் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசியது.

அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்விடமான மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்குப் பின்புறமுள்ள மாட்டுக் கொட்டகையை இக்குழு பார்வையிட்டது.

அஜித்குமார் கொலை வழக்கின் புலன் விசாரணையில் சிபிஐ போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதால் அவர்களை சந்திக்க இயலவில்லை.

சம்பவத்தின் சுருக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் என்ற ஊரில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழே உள்ளது. அஜித்குமார் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக (Security) கடந்த இரண்டு மாத காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.

27.06.2025 அன்று திண்டுக்கல் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் மேற்கண்ட கோயிலுக்கு வந்துள்ளனர். காரை நிகிதா ஓட்டி வந்துள்ளார். நடக்கமுடியாத நிலையிலிருந்த தனது தாயாரைக் கோயிலுக்குள் கூட்டிப் போய் வர சக்கர நாற்காலியை கொண்டு வருமாறு அஜித்குமாரிடம் நிகிதா கேட்டுள்ளார். அவரது தாயாரைக் கோயிலுக்குச் சக்கர நாற்காலியில் அஜித்குமார் தள்ளிக் கொண்டு போய் வருவதற்குப் பணம் கேட்ட வகையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நிகிதா தனது காரை வாகனம் நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு வருமாறு கூறி, அதன் திறவுகோலை அஜித்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அஜீத்குமார் தனக்குக் கார் ஓட்ட தெரியாது என்று நிகிதாவிடம் சொல்லியுள்ளார். அதற்கு நிகிதா வேறு யாரையாவது வைத்துக் காரை நிறுத்தும்படி வற்புறுத்தியுள்ளார். அதன்பின்பு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநரான அருண்குமாரிடம் திறவுகோலைக் கொடுத்து, காரை வாகனம் நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு வருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். காரை நிறுத்திவிட்டு, காரின் திறவுகோலை நிகிதாவிடம் கொடுத்துள்ளார். நிகிதாவும், அவரது தாயாரும் கோவிலுக்குச் சென்று வழிபாட்டை முடித்துவிட்டுக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

பின்னர் நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்திற்குச் சென்று தனது காரில் ஒரு கைப்பையில் வைத்திருந்த 9.5 பவுன் தங்க நகையும், ரூபாய் 2500 ரொக்கமும் திருடு போய்விட்டதாகப் பணியிலிருந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் என்பவரிடம் மதியம் 3.00 மணி அளவில் வாய்மொழியாக புகார் தெரிவித்திருக்கிறார். காவல் நிலையத்திலேயே ஊடகவியலாளர்களை அழைத்து நகைத் திருட்டு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார். அப்புறம் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். பின்னர் திருப்புவனம் போலீசார் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலரிடம் நகைத் திருட்டு தொடர்பாக அஜித்குமாரை விசாரிக்கக் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். கோயில் செயல் அலுவலர் அஜித்குமாருடன் பிளம்பர் கண்ணனையும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். நகை, பணம் திருட்டு தொடர்பாகக் காவல் நிலையத்தில் விசாரித்த போலீசார் அஜித்குமாரை பின்னர் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவருடன் வந்த பிளம்பர் கண்ணனைத் திருப்பி அனுப்பிவிட்டனர். தனிப்படை போலீசார் அஜித்குமார், அவரது தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோரை ஒரு டெம்போ டிராவலர் வண்டியில் ஏற்றிக்கொண்டு திருப்புவனம் நெடுஞ்சாலையைத் தாண்டி டி.புதூரில் உள்ள கால்நடை மருத்துவமனை, சீச்சாகளம், மடப்புரம் விலக்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, அயோத்தி தோப்பு, மடப்புரம் பேருந்து நிலையம், வண்டிகோட்டை கண்மாய் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்து விசாரித்துள்ளனர். கடைசியாக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலின் அறநிலையத் துறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அஜித்குமாரை அங்கு வைத்துத் தனிப்படை போலீசார் பிளாஸ்டிக் லத்தி, மரத்தடி, இரும்புக் கம்பி, இரும்புக் குழாய் போன்றவற்றால் கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். அஜித்குமார் வலி தாங்க முடியாமல் தாகம் ஏற்பட்டு, குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது தனிப்படை போலீசார் மிளகாய்ப் பொடியை ஒருவர் மூலம் வாங்கிக் கொண்டுவந்து அவரது முகம் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றில் தடவியுள்ளனர். அஜித்குமாரை உள்ளங்கால், தலை, முகம், மார்பு, முதுகு, கைகள், கால்கள், தொடை ஆகியவற்றில் போலீசார் கடுமையாகத் தாக்கிக் காயங்கள் ஏற்படுத்தி உள்ளனர். அஜித்குமார் உடலின் மேல் ஏறி நின்று லத்தியால் விலாவில் குத்தியுள்ளனர். இப்படியான மூன்றாம் தரச் (Third Degree Methods) சித்திரவதையால் அஜித்குமார் 28.06.2025 அன்று மாலை 5.30 மணியளவில் மாட்டுக் கொட்டகையிலேயே இறந்து போயுள்ளார். மாட்டுக் கொட்டகையில் அஜித்குமாருக்குத் தண்ணீர் கொடுத்தவர் அஜித்குமாருக்கு மலசலம் போவதைப் பார்த்து, அவரைச் சோதித்துவிட்டு அஜித்குமார் இறந்துபோனதாகக் கூறியுள்ளார்.

அஜித்குமாரை கோயில் மாட்டுக் கொட்டகையில் அடித்துத் துன்புறுத்தியதைக் கோயில் ஊழியர்கள் சிலரும், பிற இடங்களில் அடித்ததைப் பொதுமக்களும் கடை வணிகர்களும் பார்த்துள்ளனர். அஜித்குமாரை அடித்ததை அவருடைய தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோரும் பார்த்துள்ளனர். மேலும், நவீன்குமார் ஊரில் இல்லாத போதும் அழைத்துப் போலீசார் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.
அஜித்குமாரை திருப்புவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அருகே உள்ள மருத்துவர் பாஸ்கரன் கிளினிக்கிற்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர் சிகிச்சை அளிக்க மறுத்ததால் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பணியில் இருந்த மருத்துவர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர் (brought dead). அஜித்குமார் உடலை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்குள்ள பிணவறையில் வைத்துள்ளனர்.

28.06.2025 இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் அவரது உறவினர்கள், வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆகியோர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்துள்ளனர். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடமும் காவலர்களிடமும் ‘நீங்கள் கூட்டிச் சென்ற அஜித்குமார் எங்கே?’ என்று கேட்டுள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷீஷ் ராவத் அஜித்குமாரின் தாயார், தம்பி மற்றும் உறவினர்களிடம் அஜித்குமார் இறந்து விட்டதாகவும், அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

29.06.2025 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக எழுத்து வடிவிலான புகார் ஒன்றை அங்கிருந்த காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாரிடம் அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆகியோர் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு (CSR) இதுவரை அளிக்கப்படவில்லை. அஜித்குமார் போலீஸ் பிடியில் சிக்கி 24 மணி நேரத்திற்கு மேலாகியும், அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் அவரது குடும்பத்திற்கு எதையும் தெரிவிக்கவில்லை. மறுநாள் 29.06.2025 காலை திருப்புவனம் காவல் நிலையம் அருகே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் ஏராளமானவர்கள் கூடியுள்ளனர். அப்போது அஜித்குமாரின் வீட்டுக்கு அருகே உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சண்முகசுந்தரம் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன், நாடார் சங்கத் தலைவர் அயோத்தி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் தருவதாகவும், நவீன்குமாருக்கு அரசு பணி வழங்குவதாகவும் சமரசப் பேச்சு நடத்தி உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதை ஏற்கவில்லை என்றாலும், அஜித்குமாரின் உடற்கூறாய்வுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு. செந்தில்நாதன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி மதுரைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

29.6.2025 அன்று நள்ளிரவு 1.00 மணிக்குக் கொடுத்த புகாரைப் பதிவு செய்து, ஒப்புகைச் சீட்டு வழங்காமல் பழையனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் கண்ணன் என்பவரிடம் 29.06.2025 அதிகாலை 2.00 மணிக்குப் புகார் பெற்று அஜித்குமார் மரணம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் (முதல் தகவல் அறிக்கை (FIR), குற்ற எண் 303/2025, பிரிவு 196(2)(a) பி.என்.என்.எஸ், 2023). பின்னர், வழக்கை விசாரிக்க திருப்புவனம் நீதித்துறை நடுவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணைக்கு வருவதை அறிந்தவுடன் தனிப்படைக் காவலர்கள் சித்திரவதை நடத்தியதை மெய்ப்பிக்கும் சான்றுப் பொருட்களை மறைக்கும் நோக்கத்தோடு காவல் சித்திரவதை நடந்த கோயில் மாட்டுக் கொட்டகையில் கிடந்த பிளாஸ்டிக் தடி மற்றும் இரும்புத் தடி, குழாய் ஆகியவற்றை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன் ஒரு சாக்குப் பையில் அள்ளிச் சென்றுள்ளார். வழக்கறிஞர் ஹென்றி திபேன் கூறியதைப் போல இது குப்பை பொறுக்குபவனின் செயலை ஒத்தது.

மேற்சொன்ன காவல் மரண வழக்கின் அடிப்படையில் திருப்புவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு. ஆர்.வெங்கடேஷ் பிரசாந்த் விசாரணை மேற்கொண்டார். மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் உடற்கூறாய்வு தடய அறிவியல் துறைப் பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.சதாசிவம், மருத்துவர் எஸ்.ஏஞ்சல் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவினரால் செய்யப்பட்டது. உடற்கூறாய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இச்சட்ட விதிகளுக்கு மாறாக 29.06.2025 அன்று மாலை 5.49 மணி முதல் இரவு 9.20 மணி வரை உடற்கூறாய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கையில் அஜித்குமார் தலை, முகம், மார்பு, முதுகு, கைகள், கால்கள்,தொடை, வயிறு, பாதங்கள் என உடல் முழுவதும் 44 காயங்கள் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உடற்கூறாய்வு செய்த மருத்துவர் எஸ்.ஏஞ்சல் ‘இறப்புக்கான காரணம் காயங்களும், அதனால் ஏற்பட்ட இரத்தப் போக்கு மற்றும் அதிர்ச்சியே. ஸ்வாப் டெஸ்ட் எடுக்க தேவையில்லை. சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை வழக்கின் தீர்ப்பு உள்ளது’ என்று இக்குழுவிடம் கூறினார். காவல் மரணங்களில் உடற்கூறாய்வு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைத் தீர்ப்பு முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. உடற்கூறாய்வு நடந்து முடிந்த போது, வழக்கறிஞர்கள் மேற்சொன்ன தீர்ப்பின்படி உடற்கூறாய்வு அறிக்கை நகல், வீடியோ பதிவு கேட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்படவில்லை. மேலும், மறு உடற்கூறாய்வுத் தேவைப்படுமாயின் அதற்காகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, காவலில் இறந்தவர் உடலை 48 மணி நேரம் பிணவறையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் பேசிய போதும் அவ்வாறு செயல்படுத்தப்படவில்லை. வழக்கறிஞர் நீதித்துறை நடுவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தெரியாமல் அஜித்குமாரின் தாயார் மாலதி, அவருடைய இளைய மகன் நவீன்குமார் மற்றும் உறவினர்களை அவசர அவசரமாகக் காவல்துறை வாகனத்தில் ஏற்றி இறந்தவர் உடலை எடுத்துக் கொண்டு கூட்டிச் சென்றுள்ளனர்.

மேற்சொன்ன தீர்ப்பின்படி உடற்கூறாய்வின் போது முழு உடலையும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க வேண்டும். இதுகுறித்து மதுரை மருத்துவக் கல்லூரித் துணை முதல்வரிடம் விசாரித்தபோது தடய அறிவியல் துறையில் கைப்பேசியில் கேட்டு எக்ஸ்ரே மட்டும் எடுக்கப்பட்டதாகக் கூறினார். இவ்வழக்கில் உடற்கூறாய்வு அறிக்கை ஓர் உயிர்நாடியான (Vital) சான்று ஆவணம் என்றாலும்கூட, சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை என்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் சில பின்பற்றப்படவில்லை. போலீசார் மற்றும் ஆளுங்கட்சி ஆட்களின் வற்புறுத்தலால் அஜித்குமார் உடல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் காவல் மரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் நீதித்துறை நடுவர் திரு. ஆர்.வெங்கடேஷ் பிரசாந்த் காவல்துறையின் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்ற போதும்கூட சீருடையில் போலீசார் சூழ்ந்துகொண்டு மறைமுக அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர். இதனால் சாட்சியம் அளித்தவர்கள் அஜித்குமாரை அடித்துக் கொன்ற தனிப்படை போலீசாரின் பெயர்களைக்கூடச் சொல்ல அச்சப்பட்டு பெயரைச் சொல்லாமலேயே வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டபோது அன்றைக்கு நீதித்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பெடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அஜித்குமாரை அடித்துக் கொன்ற கொலைக் குற்றவாளிகளான தனிப்படை போலீசாரை காப்பாற்ற காவல்துறையும் அரசும் முழுவீச்சில் செயல்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் தலையீடு!

அஜித்குமார் காவல் மரணத்தைக் கண்டித்தும் அதைக் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டுமென்றும் அஇஅதிமுக, இ.பொ.க. (மார்க்சிஸ்ட்), இ.பொ.க., இ.பொ.க. (மா-லெ), பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். மடப்புரத்திலும் திருப்புவனத்திலும் மேற்படி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம், சுவரொட்டி இயக்கம் நடைபெற்றன. சென்னையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

அனைத்திந்திய அளவில் செயல்பட்டு வரும் மக்கள் சிவில் உரிமைக் கழக மதுரை மாவட்டக் கிளை விசாரித்து அறிக்கை வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் ஹென்றி திபேன் தலைமையிலான காவல் சித்தரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிடப்பட்டது. காவல்துறை வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் சார்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு, தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

ஊடகங்களின் பங்கு!

காவல் மரண வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும், சமூக ஊடகங்களிலும் காவல் மரணம் குறித்துப் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுவே அரசுக்கும் காவல்துறை தலைமைக்கும் இக்காவல் மரண வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் தலையீடு!

அஇஅதிமுக வழக்கறிஞர் எம்.மாரிஸ் குமார், வழக்கறிஞர் கார்த்திக் ராஜா, டி.பாண்டித்துரை, பி.பாண்டி, தீரன் திருமுருகன், வி.மகாராசன் ஆகியோர் தனித்தனி ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் அனைத்திலும் அஜித்குமாரைக் கொன்ற 6 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், வழக்குப் புலன்விசாரணயை சிபிஐ அல்லது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உடனேயே அஜித்குமார் காவல் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு (தலைமைக் காவலர்கள்), ராஜா, ஆனந்து, சங்கர மணிகண்டன் (காவலர்கள்) ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் வேன் ஓட்டுநர் இன்னமும் சிக்கவில்லை.

சென்ற 01.07.2025 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் திரு. எஸ்.எம்.சுப்பிரமணியம், திருமதி. ஏ.டி.மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி திபேன் சம்பவம் முழுவதையும் எடுத்துக்கூறி, வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக வாதிட்டுள்ளார். மேலும், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் மாட்டுக் கொட்டையில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, நீதிபதிகளைப் பார்க்க வைத்துள்ளார். நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த, வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் என்பவரை நீதிபதிகள் கூறியபடி அவர்கள் முன்னே நிறுத்தி உள்ளார். திருப்புவனம் நீதித்துறை நடுவர் அன்றைக்குப் பிற்பகல் 3.00 மணிக்கு இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென ஆணையிடப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், கண்ணுற்ற சாட்சியும், கோவிலில் நடந்த சித்திரவதையை வீடியோவில் பதிவு செய்தவருமான சத்தீஷ்வரனை பிற்பகல் 3.00 மணிக்கு நீதிமன்றத்தில் முன் நிறுத்துமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை பிற்பகல் 3.00 மணிக்கு உடற்கூறாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டனர்.

பிற்பகல் 3.00 மணிக்கு விசாரணை தொடங்கியபோது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் (Additional Advocate General) வழக்கறிஞர் அஜ்மல் கான் முதல் தகவல் அறிக்கையில் பிரிவு 103 பி.என்.எஸ் (கொலை) சேர்க்கப்பட்டு தனிப்படைக் காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் புலன்விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கின் குறைபாடுகளுக்கும், கவனக் குறைவுக்கும் காரணமான போலீஸ் உயரதிகாரிகள் மீதும் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் அரசின் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை; உயரதிகாரிகள் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கின்றனர்; 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கண்துடைப்பானது; காவல் மரணத்தை மூடி மறைக்க முயல்கின்றனர்; அதனால் பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை என வாதிட்டனர். மேலும், மாவட்ட காவல்துறை சம்பவத்தை மூடி மறைக்கவும், காவல் மரணத்தை ‘புதைக்கவும்’ முயற்சிப்பதால் நீதிமன்றம் தலையிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வாதிட்டனர். நீதிமன்றத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் உடற்கூறாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

திருப்புவனம் நீதித்துறை நடுவர் தனது அறிக்கையையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பதற்றமான சூழல் நிலவுவதால் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும், விசாரணை செய்யவும் முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் சிசிடிவி காட்சிகள் அடங்கிய DVR, Hard Disk போன்றவற்றை ராமச்சந்திரன் என்ற காவல் உதவி ஆய்வாளர் கைப்பற்றி வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதியான திரு. எஸ்.ஜான் சுந்தர்லால் சுரேஷ் இச்சம்பவம் குறித்து விசாரித்து 08.07.2025-க்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய ஆணையிட்டனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறியபடி காவல் மரணத்திற்குப் பொறுப்பேற்று விளக்கம், காரணம் கூற வேண்டிய நிலையில் உள்ள காவல் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அதனை 08.07.2025-க்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.

காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், புலன்விசாரணை அதிகாரி ஆகியோர் வழக்கின் ஆவணங்கள், காவல் தனிப்படை உறுப்பினர்கள், உயரதிகாரிகள் ஆகியோர் யார் யாரோடு பேசினார்கள் என்ற விவரங்கள் (Call Details Record), சிசிடிவி வீடியோ காட்சிகள் அனைத்தையும் மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் அளிக்குமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர். நீதிபதி இந்த ஆதாரங்கள் அனைத்தையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வைத்திருக்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர். இவ்வழக்கின் கண்ணுற்ற சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

08.07.2025-இல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் நிலைத் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலன்விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அஜித்குமாரின் தாயாருக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது, அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், நீதிபதிகள் நிகிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஆணையிடப்பட வேண்டுமெனவும் ஆணையிட்டனர் .மேலும், இக்காவல் மரண வழக்கில் வரும் 20.08.2025-க்குள் குற்ற அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் சிபிஐக்கு ஆணையிட்டனர்.
இப்போது சிபிஐ போலீசார் தீவிரமாக புலன்விசாரணையை செய்து வருகின்றனர். இதனிடையே சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் (ஆனால், இப்போது மீண்டும் அவர் வேறு பணியில் சேர்ந்துள்ளார்). மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இக்காவல் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் திரு. எஸ்.எம்.சுப்பிரமணியம், திருமதி. ஏ.டி.மரியா கிளாட் ஆகியோரின் தலையிடும், ஆணைகளும் மனித உரிமைகளைக் காக்கும் வகையிலும் அமைந்துள்ளன. குற்றமிழைத்த போலீசார் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் அமைந்துள்ளன. இதனை இக்குழு மனதாரப் பாராட்டுகிறது.
நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் நீதிமன்றத்தின் முன்பு உண்மைகளைத் தொகுத்து அளித்து திறம்பட வாதிட்டு, இந்த ஆணைகள் பெற காரணமான வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் இக்குழு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

பார்வைகள்:

1) நிகிதா 9.5 பவுன் தங்க நகை, பணம் காணாமல் போனதாக வாய்மொழியாகக் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியாமலேயே அஜித்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஆகியோரைப் பிடித்து வந்து, தனிப்படைக் காவலர்களை வைத்து அடித்துத் துன்புறுத்தியது முழுதும் சட்டத்துக்குப் புறம்பானது. அஜித்குமார் கொல்லப்பட்டதைப் பற்றி அஜித்குமாரின் தாயார் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா 29.06.2025 அன்று நள்ளிரவு 1.00 மணிக்குப் புகார் கொடுத்த பிறகுதான் ஒரு வழக்கறிஞரிடம் இருந்து புகார் பெற்று நிகிதாவின் நகைத் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது (குற்ற எண் 302/2025).

2) திருப்புவனம் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிகிதா தமிழக அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஓர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் அளித்துள்ளார். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்திய பின்னர், தன் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்படை போலீசாரிடம் அஜித்குமாரை நன்றாக கவனித்து விசாரிக்குமாறு ஆணையிடப்பட்டதாகப் பரவலாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையிலேயே தனிப்படை போலீசார் அஜித்குமார் உள்ளிட்டோரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தி அஜித்குமாரைச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

3) தனிப்படை போலீசார் பிளாஸ்டிக் தடி, இரும்புத் தடி, இரும்புக் குழாய், ஆகியவற்றால் அடித்தும், மிளகாய்ப் பொடியை முகத்திலும், மர்ம உறுப்பிலும் தடவியும் கடுமையாகச் சித்திரவதை செய்ததால்தான் அஜித்குமார் இறந்துள்ளார். இது அப்பட்டமான காவல் கொலை என்பது உறுதியாகிறது. உயர்நீதிமன்றத் தலையீட்டால் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேன் ஓட்டுநர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

4) திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டபோது போலீசாரின் தலையீடும், மாவட்டக் காவல்துறையின் தலையீடும் இருந்துள்ளன. பதட்டமான சூழல் இருந்ததால் அவரால் விசாரணையை முழுமையாகச் செய்ய முடியவில்லை என்று நீதித்துறை நடுவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளார். காவல்துறை அழுத்தத்தின் காரணமாகவே நீதித்துறை நடுவர் விசாரணையின்போது உடன் இல்லாமல் நீதித்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்துள்ளனர். நீதித்துறை நடுவர் விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இது சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு எதிரானது; காவல்துறையும் நீதிமன்ற ஊழியர்களும் கடமையிலிருந்து தவறிய குற்றமாகும்.

5) காவல் மரண வழக்குப் பதிவு செய்த பின்னர் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொள்வதில் காவல்துறைக்கு எவ்வித பங்குமில்லை. காவல்துறை விசாரணைக்கு எவ்வித இடையூறும் வராமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மட்டுமே அவர்களது பணியாகும். திருப்புவனம் போலீசாரும், சிவகங்கை மாவட்ட காவல்துறையும் ஆளும் கட்சி பிரமுகரை துணைக்கு வைத்துக்கொண்டு நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு இடையூறாகவும், பாதிக்கப்பட்ட குடும்பம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும் நெருக்கடிகள் கொடுத்துள்ளனர்.

6) பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டின் அருகே உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி பிரமுகரும் திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன், சாதிச் சங்கத் தலைவர் அயோத்தி உள்ளிட்டோர் ரூபாய் 50 இலட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இச்சமரச கூட்டத்தைப் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். இச்சமரச முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வீடியோ எடுத்த மக்களைப் போலீசார் தாக்கிய வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அந்த நேரத்தில் அங்கே சென்ற சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் திரு. செந்தில்நாதன் மண்டபத்தில் நடந்த சமரசப் பேச்சு வார்த்தையை நேரில் பார்த்ததாக இக்குழுவினரிடம் கூறினார்.

7) காவல் மரண வழக்குகளில் இறந்தவர்களின் உடற்கூறாய்வின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை (2020) வழக்குத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி ஸ்வாப் டெஸ்ட் (Swap Test), ஸ்கேன் (Scan) எடுப்பது போன்ற ஒரு சில அம்சங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குச் சட்ட ரீதியான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

8) ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய 11 கட்டளைகள் (டி.கே.பாசு எதிர் மேற்குவங்க அரசு என்ற வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு) எதையுமே திருப்புவனம் காவல் நிலையப் போலீசார் பின்பற்றவில்லை. அதைப்போலவே சித்திரவதையைத் தடை செய்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டபோதும் அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

9) தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். சட்டத்தை மீறி எந்தவித அச்சமும் இல்லாமல் போலீசார் இக்கொலையைச் செய்திருப்பது சட்டப்படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் போலீசாரிடம் துளியும் இல்லை என்பதையே காட்டுகிறது. இது காவல்துறையின் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் சீர்குலைப்பதுடன் பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறைக்குப் பலியாவதைத் தடுக்க முடியாது என்பதையே காட்டுகிறது. இது ஆபத்தான போக்கு என்பதுடன், சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது.
10) அஜித்குமார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் திருப்புவனம் காவல் நிலையம் தொடங்கி மாவட்ட காவல்துறை வரையில் இக்காவல் கொலையை மூடி மறைக்க முயன்றதை நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசும் காவல்துறைத் தலைமையும் எதிர்காலத்தில் இது போல நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11) தமிழகத்தில் தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு 31 காவல் மரணங்கள் நடந்துள்ளன. இது அளவுக்கு மீறியதாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இச்சம்பவங்களில் 2 வழக்குகளில் மட்டுமே குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டும், அவற்றில்கூட இன்னமும் வழக்கு விசாரணை முடியவில்லை. பிறவற்றில் நீதித்துறை நடுவர் விசாரணை முடியாமல் உள்ளது என்பதும், காவல்துறை புலன் விசாரணையை முடித்து, குற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை. காவல் மரணங்களில் தமிழக அரசும் காவல்துறை தலைமையும் இவ்வளவு பொறுப்பற்று நடந்து கொள்வது காவல் மரணங்கள் தொடர்வதற்கு வழிவகுக்கின்றன.

12) இந்திய அளவில் 2017 – 2022 வரை நடந்த காவல் மரணங்கள் குறித்து 345 நீதித்துறை நடுவர்/நீதி விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 123 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 79 வழக்குகளில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போலீஸ்காரர்கூட தண்டிக்கப்படவில்லை. அதேபோல், இந்திய அளவில் 2017 – 2022 வரையில் சட்டவிரோதக் காவல், காவலில் சித்தரவதைகள், காயங்கள் ஏற்படுத்துதல் மொத்தம் 74 வழக்குகள் பதிவாகி உள்ளன. 41 போலீசார் மீது குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 3 போலீசார் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2016 – 2017 மற்றும் 2021 – 2022 ஆண்டுகளில் மொத்தம் 490 காவல் மரணங்கள், காவலில் காயமுற்றதும் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் 31.12.2022 கணக்குப்படி போலீஸ் காவலில் வைக்கப்பட்டவர்கள் மொத்தம் 2129 ஆகும். இதில் 38.5 விழுக்காடு தலித்துகள் என்பது கவலைக்குரியது (தகவல்: The Hindu 03.07.2025).

பரிந்துரைகள்:

1) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையின் பேரில் சிபிஐ போலீசார் வழக்கை விரைந்து புலன்விசாரணை செய்து, வரும் 20.08.2025-க்குள் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

2) நகை, பணம் திருடு போனதாக கூறப்பட்ட பொய்ப் புகாரில் அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். அதற்குக் காரணம் நிகிதா என்பதால், அவரை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்த்துக் கைது செய்ய வேண்டும்.
3) நிகிதா கேட்டுக்கொண்டபடி சிவகங்கை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் யார் என்று கண்டறிந்து, அவர்கள் மீதும் சிபிஐ போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் யார் என்று மக்களுக்குத் தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.

4) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூபாய் 7.5 இலட்சம் போதுமானது இல்லை. இது ரூபாய் 50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

5) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டா இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, யாரும் வசிக்காத, சுடுகாட்டிற்கு அருகில் உள்ளது. இது ஏற்புடையதன்று. ஏற்கனவே குற்றமிழைத்த போலீசாரால் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த இடத்தில் குடியேறுவது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பானது இல்லை. எனவே, மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

6) அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் பால் நிறுவனத்தில் வழங்கப்பட்ட வேலையை ரத்து செய்து, அவருக்கு நேரடி அரசு வேலை வழங்க வேண்டும்.

7) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், சாட்சிகள் அனைவருக்கும் ‘சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் (Witness Protection Scheme) உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
8) அஜித்குமார் கொலைக்குக் காரணமான சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத், மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

9) நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு முன்னர் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை அழித்த மானாமதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.

10) காவல் மரண வழக்குகளில் உடற்கூறாய்வு செய்யும்போது சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர், மதுரை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்த தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தொடர்புடைய துறைகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை விட வேண்டும்.

11) தமிழகத்தில் இப்போதைய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் 31 காவல் மரணங்கள் நடந்துள்ளன. இதில் 2 வழக்குகளில் மட்டுமே குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளன. பிற வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. காவல் மரண வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை முடிந்து, போலீசாருக்கு தண்டனைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தொடர் நடவடிக்கை எடுத்து, வழக்குகளை கண்காணித்து விரைந்து முடிப்பதற்காக நேர்மையும் திறமையும் உள்ள ஐ.ஜி., தகுதியிலுள்ள காவல் அதிகாரி ஒருவர் தலைமையில் ஓர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

12) காவல் மரண வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க ஏதுவாக தேவைப்படும் மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
13) டி.கே.பாசு வழக்குத் தீர்ப்பில் சட்ட ஆணையப் பரிந்துரையைக் குறிப்பிட்டு, “போலீஸ் காவலில் ஒரு நபருக்குக் காயங்கள் ஏற்படும் போது, போலீஸ் அதிகாரிகளே அதற்குக் காரணம் என்று நீதிமன்றம் கருதிடலாம் (Presumption). இதற்கு நீதிமன்றம் அந்த நபர் காவலில் இருந்த நேரம், பாதிக்கப்பட்டோர் வாக்குமூலங்கள், மருத்துவச் சான்று, நீதித்துறை நடுவர் அறிக்கை போன்றவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்று இந்திய சாட்சிய சட்டத்தில் ஒரு பிரிவைச் (Section 114(b) Indian Evidence Act) சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது. நடுவண் அரசு இதற்கான ஒர் சட்ட முன்வரவைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால், இது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. நடுவண் அரசு உடனடியாக இச்சட்ட முன்வரைவைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து, விவாதத்திற்கு உட்படுத்தி நிறைவேற்ற வேண்டும். இது காவல் மரண வழக்குகளில் போலீசாருக்குத் தண்டனை கிடைத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கப் பெருமளவில் உதவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*