காலாப்பட்டு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.09.2023) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அரசையும், காவல்துறையையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி கங்கையம்மன் வீதியைச் சேர்ந்த மீனவர் சந்திரன் என்பவரின் மனைவி கலைச்செல்வி (வயது 37). சந்திரன் – கலைச்செல்வி ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 இலட்சம் கடன் கொடுத்துள்ளனர். கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதுபற்றி காவல்நிலையத்தில் போலீசார் இருதரப்பினரையும் நேற்று அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது போலீசார் கடன் வாங்கியவருக்குச் சார்பாக ஒருதலைப்பட்சமாக நடந்துள்ளனர். மேலும், கடன் வாங்கியவரை இருக்கையில் அமரச் செய்துவிட்டு, கடன் கொடுத்தவர்களைக் காவல்நிலையத்தை விட்டு வெளியே போகச் சொல்லியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த மேற்சொன்ன கலைச்செல்வி காவல்நிலையத்தில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் 95 சதவீத தீக்காயங்களுடன தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். பெண் தற்கொலைக்குக் காலாப்பட்டு காவல்துறையினர்தான் முழுப் பொறுப்பு.

எனவே, புதுச்சேரி அரசும் காவல்துறைத் தலைமையும் இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இத்தற்கொலைச் சம்பவத்திற்குக் காரணமான போலீஸ் அதிகாரிகள், போலீசார் மீது உரிய கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும். அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*