14 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.10.2018) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மொத்தம் 1 பெண் சிறைவாசி உட்பட 43 பேர் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறைவாசிகள் உள்ளனர். இதில் 17 பேர் 14 ஆண்டுகள் சிறையில் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் ஆவர்.

புதுச்சேரி அரசு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது. சென்ற ஆட்சியில் இதுபோல் ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

தற்போதைய அரசும் இதுபோன்று 14 ஆண்டுகள் முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது. ஆனால், சில அரசியல் நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டு முதல்வர் நாராயணசாமி சிறைவாசிகளை விடுவிக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது சிறைவாசிகளுக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கிற உரிமைகளை மறுக்கும் செயலாகும்.

தமிழக அரசு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது. இதேபோல் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களும் ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்து வருகின்றன.

எனவே, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இதில் தலையிட்டு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*