மழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

உண்மை அறியும் குழு அறிக்கை:

புதுச்சேரி, திருபுவனையில் உள்ள சிலோன் குடியிருப்பில், அடாது பெய்த மழையின் காரணமாக, கடந்த 09.11.2009 அன்று, காலை 7.30 மணியளவில், வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து 55 வயதான பிலோமினா மேரி என்ற பெண் இறந்துப் போனார்.

இதுகுறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், அமைப்புக் குழு உறுப்பினர் பா.மார்கண்டன், கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணைத் தலைவர், கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், பெரியார் திராவிடர் கழகப் பொருளாளர் வீரமோகன், சமூக ஆர்வலர் இரா.சீனுவாசன் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த 09.11.2009 அன்று பாதிக்கப்பட்ட பகுதியையும், அங்கு வாழும் மக்களையும் சந்தித்து விசாரித்தது.

பார்வைகள்:

திருபுவனையில் உள்ள சிலோன் குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலைப் பார்த்து வந்தவர்கள். கடந்த 1964-ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஸ்ரீறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தாயகம் திரும்பியவர்கள். 1984-ஆம் ஆண்டு டிசம்பரில் 7 குடும்பமும், 1985 ஜனவரியில் 14 குடும்பமும் சேர்த்து மொத்தம் 21 குடும்பத்தினர் இந்த சிலோன் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு 57 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 225 சதுர அடி அளவுடைய வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடமும் வீடும் ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலைக்குச் சொந்தமானது. அதாவது மாதம் ரூபாய் 22 செலுத்தி வந்தால் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இடமும் வீடும் குடியிருப்பவர்களுக்கு சொந்தமாக்கப்படும் என்று உறுதிமொழி கூறி இந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுநாள் வரையில் அங்குள்ள மக்களிடம் இருந்து எவ்வித பணமும் வசூலிக்கப்படவில்லை.

இந்த குடியிருப்பில் உள்ள வீடுகள் சிதிலமடைந்து மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளன. பல வீடுகள் மிகுந்த சேதமடைந்து எந்த நேரத்திலும் விழுந்து விடும் நிலையில் உள்ளன. இதுகுறித்து அங்கு வசிக்கும் மக்கள் அரசுக்கும், கூட்டுறவு மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சருக்கும் பல ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது பெய்த மழையின் போதும் அப்பகுதி மக்கள் அரசுக்கு தகவல் தெரிவித்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இப்போது ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண்மணியின் இறப்புக்கு அரசின் மெத்தனப் போக்குதான் காரணம் என்பதோடு இதற்கு அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

தற்போது இறந்துப் போன பிலோமினா மேரிக்கு மரிய வியானி (31), சகாய மேரி (26), வினேஸ் மேரி (24) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் மனநிலை சரியில்லாதவர். மற்றவர்கள் படித்துவிட்டு எவ்வித வேலையும் இல்லாமல் உள்ளனர். மேலும், தாயை இழந்து வாடும் இந்த குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த குடியிருப்பில் இருக்கும் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், இவர்களுக்கு அரசு ‘தாழ்த்தப்பட்டோர்’ என சாதிச் சான்றிதழ் வழங்குவதில்லை. இதனால், இவர்களின் பிள்ளைகள் மேல் படிப்பு படிக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தாழ்த்தப்பட்டோருக்கு உண்டான இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் எதனையும் இவர்கள் அனுபவிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த குடியிருப்பு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் காணப்படுகிறது. குடி நீர், சாலை, வாய்க்கால், கழிப்பறை போன்ற எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வாய்க்கால் அமைக்க 6 மாதத்திற்கு முன்னர் பூமி பூஜை நடந்துள்ளது. ஆனால், இதுவரையில் அந்த வாய்க்கால் போடப்படவில்லை.

கோரிக்கைகள்:

1) திருபுவனையில் உள்ள சிலோன் குடியிருப்பில் மழையின் காரணமாக வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்து இறந்த பிலோமினா மேரியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலையும் அரசு வழங்க வேண்டும்.

2) சிலோன் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு உடனடியாக இலவச மனைப் பட்டாவும், புதிய வீடுகளும் கட்டிக் கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) இந்த குடியிருப்பில் வாழும் மக்களுக்கு உடனடியாக தாழ்த்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இந்த குடியிருப்பிற்கு அனைத்து அடிப்படை வசதியும் செய்துக் கொடுக்க புதுச்சேரி அரசு போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) எவ்வித ஆதரவும் இல்லாமல் வாழும் அம்மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உரிய வாழ்வாதாரங்கள் ஏற்படுத்திக் கொடுக்க அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

உண்மை அறியும் குழு அறிக்கை உரிய நடவடிக்கைக்காக புதுச்சேரி துணை ஆளுநர், முதல்வர், கூட்டுறவு மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர், தலைமைச் செயலர், கூட்டுறவு துறை செயலர், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.