நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, இராதே அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக நாடக உலகில் ஜாம்பவனாக விளங்கிய தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் நாடகத் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவரது இறுதி நாட்களில் புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்தார். ஆண்டுதோறும் நவம்பர் 13-ம் நாள் புதுச்சேரி அரசு சார்பில் அவரது நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 7 அன்று அரசு சார்பில் கொண்டாடாமல் புறக்கணிப்பது தமிழ்க்கூறும் நல்லுலகங்களையும், கலை இலக்கிய ஆர்வலர்களையும் துயரடையச் செய்துள்ளது.

புதுச்சேரி வரலாற்றில் தவத்திரு சங்கரதாசு சுவாமிகளுக்கு முக்கியப் பங்குள்ளதால் அவரது பிறந்த நாளையும் கொண்டாட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இன்று (07.09.2020) திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் நினைவிடத்தில் புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, இராதே அறக்கட்டளை சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.

இராதே அறக்கட்டளைத் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார். புதுச்சேரி வரலாற்றுப் பேரவைத் தலைவர் கோ.சுகுமாரன், செயற்குழு உறுப்பினர் ஓவியர் இராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாகூர் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நா.இளங்கோ, வெற்றித் தமிழர் பேரவை அமைப்பாளர் தி.கோவிந்தராசு, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி வரலாற்றுப் பேரவை செயற்குழு உறுப்பினர் இரா.சுகன்யா ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*