அப்சலின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

உலக அளவில் இதுவரையில் 127 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. அண்மையில்கூட பிலிப்பைன்ஸ் மரண தண்டனையைக் கைவிட்டுள்ளது. இந்தியா மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் பலகாலமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சலுக்கு மரண தண்டனையை உறுதி செய்திருப்பதன் மூலம் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளைக் காப்பதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது.

அப்சல் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கீழ்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முறையாக விசாரிக்கவில்லை என அவரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ள கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். “ஒட்டுமொத்த வழக்கும் தவறான சாட்சியங்கள், திரிக்கப்பட்ட கதைகள் நிறைந்தது” என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை வழங்குவதனால் குற்றங்கள் குறைகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும், குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது. மரண தண்டனை மனித உரிமைகளுக்கு எதிரானது.

இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் 50-க்கும் மேற்பட்டவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நிலுவையில் உள்ளதாக அறிகிறோம். நிலுவையில் உள்ள அனைவரின் கருணை மனுக்களையும் ஏற்று, மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.10.2006 அன்று தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அகிம்சையை வலியுறுத்திய காந்தி பிறந்த மண்ணில், மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன், 13.10.2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.