புதுச்சேரி சிறை நிலைமையைக் கண்டறிய மனித உரிமை ஆர்வலர்கள் குழுவை அனுப்ப வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால்,  புதுச்சேரி அரசு உடனடியாக மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை சிறைக்கு அனுப்பி நிலைமைகளைக் கண்டறிய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் சுமார் 100 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசுப் பொது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலாப்பட்டு மத்திய சிறை எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. கைதிகளுக்கு நல்ல குடிநீர் வழங்கப்படவில்லை. கழிவறைகள் இருந்தும் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் துர்நாற்றம் வீசுவதால் கடும் நோய் பரவும் ஆபத்துள்ளது. கைதிகளைப் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அறையில் கைதிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிக இடைவேளி உள்ளதால் உறவினர்களுடன் பேச முடியாமலும், தங்கள் குழந்தைகளைக் கூட தொட்டுக் கொஞ்ச முடியாமலும் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனைக் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பரோல் தேவையில்லாமல் மறுக்கப்படுகிறது. தேவையான பத்திரங்கள் கொடுத்தும் சிறை விதிப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டிய பரோல் சிறை அதிகாரிகளால் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், புதுச்சேரி அரசு இதுபற்றி போதிய அக்கறை இல்லாமல் கைதிகளின் உரிமையை மறுத்து வருகிறது.

நீதிபதி முல்லா குழு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் சிறை சீர்திருத்தம் குறித்து மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிகையின் பரிந்துரைகளைச் செயல்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர புதுச்சேரி அரசு விரைந்து செயல்பட்டு கைதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.