புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 7500 வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கொரோனா நோய் பாதிப்பிலிருந்து புதுச்சேரி மக்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் நாராயணசாமி இடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் ஆகியோர் நேரில் சென்று கடிதம் வழங்கினார்கள்.

அக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சிறிய மாநிலமான புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிப்பு மிக வேகமாக பரவி உள்ளது. ஜூன் 15-ஆம் தேதி வரை 131 பேர் மட்டுமே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது வேகமாக அதிகரித்து ஜூலை 30-இல் 2678 ஆக அதிகரித்தது. அப்போதே அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா நோய் பரவலின் அபாயத்தை அரசு முழுமையாக கணக்கில் கொள்ளாத காரணத்தால், துரித நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவாக அடுத்த 10 நாட்களில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்தகைய பாதிப்பு நமது மாநில மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவிலேயே மிக மிக அதிகமான பாதிப்பாகும். நோய் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 5 சதவீதம் பேருக்கு நோய் பாதிப்பு இருந்தாலே ‘பேண்டமிக்’ (Pandemic) பேரிடர் கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஆகஸ்ட் 12-இல் 1123 பேர் பரிசோதனை செய்யப்பட்டதில் 481 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது 30 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். இந்த அபாயமான நிலைமையை அரசு கணக்கில் எடுக்க வேண்டும். எப்போதும் போல் சாதாரணமாக செயல்படுவதை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலையோடு சுட்டிக்காட்டுகிறது. எனவே கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

1) நோய்த்தடுப்புப் பணிகளை விரைவாக செயல்படுத்த அரசு ஊழியர்களோடு தன்னார்வளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். மாநிலத்திலுள்ள 23 ஐ.ஏ.எஸ். மற்றும் உயர்நிலை அதிகாரிகளுக்குப் பகுதி அளவில் பொறுப்பு தீர்மானித்து, சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் செயலையும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உண்மையாக வீட்டில் உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தவும், அவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2) நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்.

3) நோய் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவமனைக்கு வரக்கூடிய பொதுமக்களைத் தங்குதடையின்றி பரிசோதனை செய்ய வேண்டும்.

4) அறிகுறி இல்லாத நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களைக் கட்டாயம் மருத்துவமனையில் தங்க வைத்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

5) அரசு மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் இல்லாத நிலையில் தனியார் மருத்துவமனைகள், மாணவர் விடுதிகள், திருமண மண்டபங்களை அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.

6) வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மூலம் ஏற்படும் பாதுகாப்பற்ற தன்மையை கணக்கில்கொண்டு மேற்சொன்ன இடங்களில் தனிமைப்படுத்தபட்டவர்களைச் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடமில்லை என்று கூறுவது நோயாளியின் உரிமைப் பறிப்பு செயலாகும். இதனைக் கணக்கில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்கு என்று தனியான ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். இதர நோயாளிகளை அழைத்து வர தனி வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதற்கு போதுமான ஆம்புலன்ஸ்களை கொள்முதல் செய்ய வேண்டும். அதுவரையில் அரசு துறை வாகனங்களை இப்பணியில் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உயர்மருத்துவக் கருவிகளைச் சிறப்பாக கையாளப் பயிற்சி அளித்தல் வேண்டும்.

10) கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகாத இதர நோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகளுக்குத் தங்குதடையின்றி சிகிச்சை அளிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11) கொரோனா பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி ஊட்டச்சத்தான உணவு வழங்க வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்கள் மேற்பார்வையில் மதிய உணவு கூடங்கள் மூலம் வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

12) கமிட்டிகள் அமைத்தல் நோயினால் ஏற்படும் மரணங்களை குறைத்திட மரணங்கள் பற்றிய ஆய்வுக்குத் தனியாக மருத்துவர்களைக் கொண்ட குழுவை ஏற்படுத்தி ஆய்வு நடவடிக்கைகளை செய்திடல் வேண்டும்.

13) நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க, சிகிச்சை முறைகளை மேம்படுத்த, ஆய்வு செய்வதற்கு மருத்துவர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்.

14) பெருந்தொற்று காலத்தில் பொது சுகாதாரத்தைப் பலப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

15) தன்னலம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட உயர்மருத்துவச் சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

16) கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பகுதி உழைப்பாளி மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். எனவே அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 7500 நிவாரணமும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.