காவல் மரணம்: மேட்டுப்பாளையம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஐ.ஜி.யிடம் மனு

மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் தாமோதரன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகன்நாதன் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வரும் தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் சார்பில் இன்று (02.5.2011) ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் துணைத் தலைவர் உத்தராடம், செயலாளர் மனோஜ், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை செயலாளர் கஸ்பர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மு.மதுரை, கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேம்பாட்டு கழகத் தலைவர் அ.மஞ்சினி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா.சரவணன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பு பொறுப்பாளர் கலைப்புலி சங்கர், சதுப்புநில காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் செல்வ.மணிகண்டன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் சு.காளிதாஸ் ஆகியோர் இன்று காலையில் ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயசங்கர் கொலை வழக்கு விசாரணைக்காக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி, சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளை குற்றமிழைத்த போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே, இந்த காவல் நிலைய கொலையோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்நாதன், அவரது குடும்பத்தினர் மீது தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் உத்தரவின் பேரில் போலீசார் இதுவரையில் 6 பொய் வழக்குகள் போட்டுள்ளனர். மேலும், கடந்த ஏப்ரல் 12ந் தேதியன்று இரவு, தேர்தலுக்கு முந்தைய நாள் எஸ்.பி. நந்தகோபால் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்நாதன் வீட்டை சுற்றி வளைத்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைத்தனர். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் எஸ்.பி. நந்தகோபால் வெளிப்படையாக ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட எஸ்.பி. நந்தகோபால் மற்றும் போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி. (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோர் அதன்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கட்சி, இயக்கத் தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், வரும் 4ந் தேதியன்று கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.