சட்டவிரோதமாக பேனர், சிலைகள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், தமிழர் களம் தலைவர் கோ.பிரகாசு, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழகப் பொதுச்செயலாளர் இரா.முருகானந்தம் ஆகியோர் இன்று (27.09.2013), காலை 11 மணிக்கு, செய்தியாளர் மன்றத்தில் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி எல்லைக் கிராமங்களில் நடைபெற்று வரும் சாதி ரீதியிலான மோதல்களை நாங்கள் மிகுந்த கவலையுடன் பார்க்கின்றோம். கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக குழு மோதல்கள் இருந்து வந்த நிலை மாறி, தற்போது சாதி மோதல்கள் நடைபெற்று வருவது ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவருக்கும் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

நெட்டப்பாக்கம் கொம்யூன் பண்டசோழநல்லூர் கிராமத்தில் கடந்த 24.09.2013 அன்று அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக பா.ம.க. – விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் வெடித்தது. அப்போது இருதரப்பினரும் கையில் ஆயுதங்களுடன் மோதிக் கொள்ள தயாராக இருந்த நிலையில், காவல்துறை உரிய நேரத்தில் தலையிட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் மோதலைத் தடுத்துள்ளது. மேற்சொன்ன மோதல் சம்பவத்திற்கு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களே காரணமாகும். புதுச்சேரி அரசு இந்த மோதலில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொண்டு வந்த பொது இடங்களில் பேனர், கட்-அவுட் வைக்க தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினரே இச்சட்டத்தை மீறி பேனர், கட்-அவுட்களை வைக்கின்றனர். குறிப்பாக கிராமங்களில் வைக்கப்படுகிற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பேனர்களை காவல்துறை, வருவாய் துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் திட்டமிட்ட வகையில் கண்டும் காணாமல் இருப்பதுதான் இதுபோன்ற மோதல்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த மோதல் சம்பவங்களுக்கு மேற்சொன்ன துறை அதிகாரிகளே முழுப் பொறுப்பாவார்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுச்சேரியில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் தலைவர்களின் சிலைகளால் பெரும்பான்மையாக உள்ள இரு சமூக மக்களிடையே பதட்டம், மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபட்ட இராமசாமி படையாட்சியார் ஆகியோரது சிலைகள் மேற்சொன்னவாறு சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்படுகின்றன. சமூகத்திற்கு உழைத்த தலைவர்களின் சிலைகளை முறையாக அனுமதிப் பெற்று வைக்காமல், சட்டத்திற்குப் புறம்பாக வைப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு வைப்பது சமூகத் தலைவர்களையும், அவர்களது உயரிய லட்சியங்களையும், தொண்டினையும் கொச்சைப்படுத்தும் செயலாகும். தலைவர்களின் சிலைகளை அனுமதியின்றி யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?

சிலைகள் வைக்க வேண்டுமென்றால் அரசிடம் முறையாக அனுமதிப் பெற்று வைக்க வேண்டும். ஒருவேளை அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால், ஜனநாயக வழிமுறையில் போராடி அனுமதிப் பெறுவதே சரியான அனுகுமுறையாக இருக்கும். மேலும், இதுபோன்று சட்டவிரோதமாக வைக்கப்படும் சிலைகள் சேதப்படுத்தப்படுவதும், அவமதிக்கப்படுவதும் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி, மோதல்களுக்கு வழிவகுக்கிறது. இந்த மோதல்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமாக அமைகின்றன. புதுச்சேரி அரசு தனது மென்மையான அனுகுமுறையை கைவிட்டு, சட்டத்திற்குப் புறம்பாக சிலை வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

இனிவரும் காலங்களில் சாதி ரீதியிலான மோதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த புதுச்சேரி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாக சிலைகள், பேனர், கட்-அவுட்கள் வைப்பதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*