
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.05.2025) விடுத்துள்ள அறிக்கை:
கடந்த ஏழு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனே புதுப்பித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆணையம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. ஆறாவதாக அமைக்கப்பட்ட புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலம் 2018ஆம் ஆண்டு மே மாதத்தோடு முடிவடைந்தது. அதன் பிறகு, நன்றாக செயல்பட்டு வந்த பிற்படுத்தப்படோர் ஆணையம் ஏழு ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படவில்லை.
கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்வதில் தாமதம் செய்து வந்ததால் புதுப்பிக்கப்படவில்லை. ஏழு ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால், பல பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கோப்புகளைக் காலத்தோடு அனுப்பியும், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் அலுவலகத்தில் நான்கு ஆண்டுகளாக இக்கோப்பு தூங்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு காலத்தோடு சம்பளம் வழங்காததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சாதிச் சங்கங்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதுப்பிக்கப்பட்டால்தான், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும்.
பிற்படுத்தப்பட்ட பிரிவில் சாதிகளைச் சேர்த்தல், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள விடுபட்ட சாதிகளை மத்திய அரசுப் பட்டியலில் சேர்த்தல், பிற்படுத்தப்பட்ட பழங்குடியின பிரிவிற்கு வெட்டறு தேதி (Cut off date) நிர்ணயம் செய்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்து மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC), மிக மிக பிற்படுத்தப்பட்ட மீனவர் (EBC), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM), பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் (BT) சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அளவினை மாற்றியமைத்தல் போன்ற முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
எனவே, புதுச்சேரி அரசு உடனே தலைவர், அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைப் புதுப்பித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.
Leave a Reply