புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.08.2015) விடுத்துள்ள அறிக்கை:

புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி போலியான சான்றிதழ்கள் அளித்தும், எவ்வித தகுதி இல்லாமலும் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பலரது புத்தங்களைக் காப்பியடித்து புத்தகம் வெளியிட்டுள்ளது குறித்து யு.ஜி.சி விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் மீதான பல்வேறு முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவின்பேரில் விசாரித்த தமிழக முன்னாள் டிஜிபி பாலச்சந்திரன் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் பல உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தர் சந்திரா கிருஷ்னமூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அடக்குமுறையை ஏவி வருகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி அரசு உடனே நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

போராட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மீது போலீசார் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்யும் முயற்சியில் உள்ளனர். புதுச்சேரி அரசு இத்தகைய முயற்சியை கைவிட்டு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

பல்கலைக்கழக உடற்கல்வி துறை பேராசிரியர் பிரவீன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவரைப் பார்த்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றமிழைத்த பேராசிரியரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

போராட்டத்தில் கலந்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவர் முகமது சகாப் என்பவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். ஆபத்தான நிலையில் அவர் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். போலீசார் உடனடியாக மாணவரை தாக்கிய மர்ம நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

ரவுடிகளை வைத்து மாணவர்களை மிரட்டி போராட்டத்தைத் தடுக்கும் வேலையில் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆதரவு அளிக்கிறது. இதுகுறித்து கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*