தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.11.2017) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த செந்தில் லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டையைச் சேர்ந்த முரளி என்பவர் கொலை வழக்கில் கடந்த 9 மாதக் காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். செந்திலை சென்ற 4ம் தேதியன்று மதுரையில் தமிழகப் போலீசார் உதவியுடன் புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

செந்தில் கைது செய்யப்பட்டது குறித்து நேற்றைய முன்தினம் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) ராஜீவ் ரஞ்சன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செந்திலை தரையில் முட்டிப் போட வைத்திருந்த காட்சி ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்தியாக வெளிவந்துள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய செந்தில் மீது சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், காவல்துறை உயரதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட செந்திலை முட்டிப் போட வைத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.

வாழ்கிற உரிமையை (Right to Life) உறுதி செய்துள்ள இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21ன்படி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளில் அரசோ அல்லது அதனைச் சார்ந்த நிறுவனங்களோ தனி மனித கெளரவத்திற்குப் பங்கம் விளைவிப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறியுள்ளது.

மேலும், செந்தில் கைது செய்யப்பட்ட போது டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கடைபிடிக்கப்பட வேண்டிய 11 கட்டளைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

எனவே, செந்திலை முட்டிப் போட வைத்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும். இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஊடகங்களில் வெளி வந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அளிக்க உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*