என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்க வேண்டும் – கோ.சுகுமாரன் உரை

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி தில்லியில் அக்டோபர் 28, 29 ஆகிய இரண்டு நாள் தேசிய மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றது இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளரும், இக்கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கோ. சுகுமாரன் என்கவுன்டர் கொலைகள் (Extra Judicial Killings and the Judicial Responce) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை தமிழில்:

இந்தியாவில் நடந்த என்கவுன்டர் கொலை வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளைப் பார்த்தால் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது தீவிரவாதிகள் மறைவான இடத்தில் தங்கியிருப்பதாகப் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைக்கும். உடனே போலீசார் அங்குச் சென்று தீவிரவாதிகளைச் சுற்றி வளைப்பார்கள். தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி வெடிகுண்டுகளை வீசுவார்கள். வேறு வழியின்றி போலீசார் தங்களின் தற்காப்பிற்காக தீவிரவாதிகளை நோக்கிச் சுடுவார்கள். இதில் தீவிரவாதிகள் இறந்துப் போவார்கள். பிறகு இறந்தவர்களின் அடையாளங்களைப் போலீசார் வெளிப்படுத்துவார்கள். இதுதான் என்கவுன்டர் கொலைகளில் போலீசார் சொல்லும் ஒரே மாதிரியான கதை. ஆனால், உண்மையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களை அவர்களது வீடுகளில் இருந்தோ அல்லது வேறு பொது இடங்களில் இருந்தோ பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றுவிட்டு இதுபோன்ற கதைகளை முதல் தகவல் அறிக்கையாக பதிவுச் செய்து வழக்கை முடித்துவிடுவார்கள். இதுதான் என்கவுன்டர் கொலைகளில் போலீசார் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறை ஆகும்.

என்கவுன்டர் கொலைகள் இரண்டு வகைப்பட்டது. இந்தியாவில் ஆயுதம் தாங்கிப் போராடும் மாநிலங்களில் இராணுவமும் போலீசும் என்கவுன்டர் கொலைகளை நிகழ்த்தி வருகின்றன. இதற்கு மத்திய அரசு 1958ஆம் ஆண்டு கொண்டு வந்த அடக்குமுறைச் சட்டமான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (Armed Forces Special Power Act 1958) பெரிதும் பயன்படுகிறது. அரசியல் ரீதியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக அரசுகள் இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி என்கவுன்டர் கொலைகளை எளிதாக நிகழ்த்தி வருகின்றன. போராட்டம் நடந்து வரும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ஆயிரக் கணக்கானோர் என்கவுன்டர் கொலையில் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காணாமல் செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் காரணத்திற்காக அதிகாரத்தில் உள்ளவர்கள், போலீஸ் அதிகாரிகள் தங்களின் சொந்த காரணங்களுக்காக என்கவுன்டர் கொலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், குற்றப் பின்னணி உடைய அரசியல் கட்சியினர் என இந்த என்கவுன்டர் கொலைக்கு ஆளாகின்றனர்.

இப்போதெல்லாம் என்கவுன்டர் கொலைகள் நீதிமன்றக் காவலிலேயே நடக்கிறது. சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போதோ அல்லது திரும்பும் போதோ சிறைவாசிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறைவாசிகள் தப்பிக்க முயன்றனர் அல்லது வெளியில் இருந்து அவர்களை மீட்க முயற்சி நடந்தது என மிக எளிதான காரணத்தைச் சொல்லிப் போலீசார் தப்பி விடுகின்றனர். நீதிமன்றக் காவலில் நடக்கும் அன்கவுன்டர் கொலைகள் குறித்து நீதிமன்றங்கள் போதிய அக்கறை காட்டுவதில்லை. ஒரு சில வழக்குகள் தவிர்த்துப் பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதிக் கிடைப்பதில்லை.

முஸ்லிம்கள் அமைப்பாகி ஒன்றிணைந்துப் போராடும் பகுதிகளிலும் என்கவுன்டர் கொலைகள் அரங்கேறி வருகின்றன. அப்பாவி முஸ்லிம்கள் என்கவுன்டர் கொலைகளில் பலியாவது தொடர்கிறது. முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்தி எளிதில் கொன்று விடுகின்றனர். ஆந்திராவில் ஐதராபாத் அருகேயுள்ள அலர் என்ற ஊரில் வாராங்கால் சிறையில் இருந்து ஐதராபாத் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் 5 முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதுவும் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த என்கவுன்டர் கொலைகள் அரங்கேறின.

1996-இல் புகழ்ப்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபால் அவர்களின் தலைமையில் ஆந்திராவில் நடந்த என்கவுன்டர் கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற உண்மை அறியும் குழுவில் நானும் இடம்பெற்று இருந்தேன். அப்போதெல்லாம் நக்சலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் என அப்பாவி இளைஞர்களைப் போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் சுட்டுக் கொன்ற காலம் அது. ஆயுதம் தாங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யுத்தக் குழுவினர் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு கான்கிரீட் தளம் கொண்ட வீட்டில் மக்கள் யுத்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்று போலீசுக்குத் தகவல் கிடைக்கிறது. உடனே போலீசார் பெரும் படையுடன் அப்பகுதியைச் சுற்றி வளைக்கின்றனர். அவ்வீட்டில் தங்கி இருப்பவர்களில் செம்மி ரெட்டி என்பவர் மக்கள் யுத்தக் குழுவின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர். இதனால், போலீசார் அவ்வீட்டில் தங்கி இருப்பவர்களை உயிரோடு பிடிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரைக்குச் சென்று துளைப் போடும் இயந்திரம் மூலம் தளத்தில் துளைகளைப் போடுகின்றனர். பின்னர் அந்தத் துளைகளின் வழியாக பெட்ரோலை ஊற்றித் தீ வைக்கின்றனர். தோழர் செம்மி ரெட்டி உள்ளிட்டவர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் போரட்டத்தினால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்கவுன்டர் கொலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிக்காட்டுதல்களை வழங்கியுள்ளது. என்கவுன்டர் கொலைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசாருக்கு ரொக்க பரிசோ, பதவி உயர்வோ, வேறு எந்த சலுகையோ அளிக்கக் கூடாது என அந்த வழிகாட்டுதலில் கூறியுள்ளது ஆனால், இதனை எந்த அரசும், காவல்துறையும் பின்பற்றுவதில்லை. தமிழ்நாட்டில் சந்தன வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது என்கவுன்டரில் ஈடுபட்ட அதிரடிப்படைப் போலீஸ் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் பதவி உயர்வு, பெருந்தொகையாக ரொக்கப் பரிசு, வீட்டு மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டன. அப்பட்டமாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிக்காட்டுதல்கள் மீறப்பட்டன.

என்கவுன்டர் கொலைகளில் இராணுவத்தினரும் போலீசாரும் துணிந்து செயல்படுவதற்கு மற்றொரு காரணம் என்கவுன்டர் கொலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவும் முக்கிய காரணமாகும். பயங்கரவாதி, தீவிரவாதி என்று முத்திரைக் குத்திவிட்டால் பொதுமக்கள் எவ்வித கேள்வியும் இல்லாமல் என்கவுன்டர் கொலையை ஆதரிக்கின்றனர். அதுவும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றனர். இதற்கு ஊடகங்கள், திரைப்படங்கள் உருவாக்கும் கருத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலைகள், பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனே குற்றவாளியைத் தூக்கிலிடுங்கள், சுட்டுத் தள்ளுங்கள் என கேட்கும் நிலை உருவாகி உள்ளது. திரப்படங்களில் குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்லும் கதாநாயகர்களின் செயல் வீரச் செயலாக கொண்டாடப்படுகிறது. என்கவுன்டர் கொலைகள் நடந்தால் அவற்றை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் என சிலர்தான் போராடி வருகிறோம். என்கவுன்டர் கொலைகளுக்கு நீதிக் கிடைக்க நீதிமன்றங்களில் போராடுவது மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராக கருத்தை உருவாக்க வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 வாழ்கிற உரிமையை (Right to life) உறுதி செய்துள்ளது. என்கவுன்டர் கொலைகள் இதனை முறியடிக்கக் கூடியவை. எனவே, என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராக தொடர்ந்துப் போராடி மனித உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம். நன்றி. வணக்கம்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*