தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மீது மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டித்தும், வன்முறையாளர்களைக் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் இன்று (04.10.2013) சென்னையில் விடுத்துள்ள அறிக்கை!

கடந்த செப்டம்பர் 28 அன்று விருதாச்சலத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல மாணவர் மாநாட்டிற்குச் சென்ற தி.க.தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை காவிக் கொடி ஏந்திய வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. ’தேசிய யாதவர் மகாசபை’ என்னும் அமைப்புடன் இந்து முன்னணி முதலான இந்துத்துவ அமைப்புகள் இதில் பங்குபெற்றுள்ளன.

தாக்கியவர்களை ஒன்றும் செய்யாத காவல்துறையினர், ஆசிரியரைக் காப்பாற்ற ஓடி வந்த தி.க தொண்டர்களைத் தாக்கியுள்ளனர். எனினும் அமைதியாக இருக்குமாறு வீரமணி அவர்கள் வேண்டிக் கொண்டதை ஒட்டி மாநாடு சிறப்புற நடந்துள்ளது.

வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை மதவெறியர்கள் தாக்கியது, காப்பாற்ற ஒடி வந்த தொண்டர்களை காவல்துறை தாக்கியது என இரு புகார்கள் கொடுக்கப்பட்டும் காவல்துறை முதல் புகாரை மட்டுமே பதிவு செய்துள்ளதாக அறிகிறோம். அந்தப் புகாரின் அடிப்படையிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

காவல்துறையின் ஒப்புதலுடனேயே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்கிற ஐயம் உள்ளது. முன்னதாக அப்பகுதி டி.எஸ்.பி வெங்கடேசன் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளார். எனினும் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

விருதாச்சலம் என்பது ஒரு சிறிய ஊர். தாக்குதல் நடத்திய கும்பலைக் கண்டு கைது செய்வது மிக எளிதான ஒன்று. ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த ஆண்டு ‘கிருஷ்ண ஜெயந்தி’க்கு அரசியல் தலைவர்கள் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்தபோது வீரமணி அவர்கள் மட்டும் “வருணாசிரமத்தையும் வருண அடிபடையிலான தொழில் மற்றும் ஏற்றத் தாழ்வுகளையும் நியாயப்படுத்திய கிருஷ்ணனின் பிறந்த நாளை ஏன் தமிழக மக்கள் கொண்டாட வேண்டும்” என்கிற பொருள்பட வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையே தாக்குதலின் உடனடிக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது. இந்த அறிக்கையைக் கண்டித்துக் கடுமையாக ஒரு சிலர் தொலைகாட்சியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியும் உள்ளனர்.

தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக வருணாசிரம எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஆகியவற்றை உலக அளவில் ஒரு முன்னுதாரணமாகச் செய்து வருகிறது. எந்நாளும் அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்ததாக வரலாறே கிடையாது. எனினும் ஆணித்தரமான அவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்படியான வன்முறைகளைப் தந்தை பெரியாரின் காலந் தொட்டே மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர் மாநாடு நடத்துவது, கருத்துக்களைப் பிர்ச்சாரம் செய்வது என்பதெல்லாம் நமது அடிப்படை உரிமைகள். மதவெறிக் கும்பல்கள் இவ்வாறு கருத்துப் பிரச்சாரங்களுக்கு எதிராக வன்முறை விளைவிப்பதும் அதற்குக் காவல்துறை துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வன்முறையாளர்களைக் கைது செய்ய வேண்டும். வன்முறையாளர்களுக்கு ஆதரவாக மெத்தனம் காட்டும் காவல்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கையெழுத்திட்டோர்:

 • பிரபஞ்சன், மூத்த எழுத்தாளர்,
 • சென்னை, அறிஞர் எஸ்.வி. இராசதுரை,
 • மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி,
 • பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,
 • சென்னை, கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
 • பேரா. பிரபா.கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்,
 • வழக்குரைஞர் பொ.இரத்தினம், உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்,
 • மதுரை வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை,
 • வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி,
 • வழக்குரைஞர் மனோகரன், மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை,
 • வழக்குரைஞர் கி. நடராசன், மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை,
 • கல்வியாளர் முனைவர் ப.சிவகுமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை,
 • கல்வியாளர் பேரா.மு. திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை,
 • சுகுணா திவாகர், பத்திரிக்கையாளர், சென்னை,
 • பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி,
 • விடுதலை வீரன், அமைப்புச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை, மதுரை.

1 Comment

 1. இப்ப தான் ரங்கராஜ் பாண்டே நிகழ்ச்சியில் ” பிராமணர் பூணலை அறுத்தது” பற்றி கேட்டபோது

  அது உணர்ச்சி பட்ட தி.க.வினர் செய்திருப்பார்கள்…

  வன்முறையில்லாத பாச புரிதல்…

Leave a Reply

Your email address will not be published.


*