Archive for the ‘வழக்குகள்’

தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பின்பற்றி காவல்நிலையங்களில் பதியப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுகொள்கிறோம்.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று தலைமைச் செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடந்த 06.12.2010 அன்று தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுகிறோம்.

1)குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 207-ல் கூறப்பட்டுள்ள காலவரம்பிற்கு முன்னரே முதல் தகவல் அறிக்கைப் பெறலாம்.

2)குற்றம்சாட்டப்பட்டவர் தான் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரா அல்லது அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள அவரோ,அவருடைய பிரதிநிதியோ சான்றிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலைக் கேட்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமோ அல்லது காவல் கண்காணிப்பாளரிடமோ விண்ணப்பிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று நீதிமன்றத்தில் செலுத்தக் கூடிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை நகல் அளிக்க வேண்டும்.

3)பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளை அது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய வழக்கினுடையது அல்லாமல் இருந்தால், அவற்றை பதிவுச் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் டில்லி காவல்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனை குற்றம்சாட்டப்பட்டவரோ அல்லது தொடர்புடைய எவரும் நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுக் காணலாம்.

4)முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி காவல்துறை பிப்ரவரி 1, 2011 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பு நகலை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை!

No Comments →

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன், தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் பெ. கிருஷ்ணமூர்த்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கடலூர் பொறுப்பாளர் இரா. பாபு, மக்கள் கண்காணிப்பகம் பொறுப்பாளர் ஆ. ஜெயராமன் ஆகியோர் 03.09.2010 அன்று காலை 10.30 மணிக்கு கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பவத்தோடு தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து, உடனடியாக அனைவரையும் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

நடந்த சம்பவத்தின் சுருக்கம்:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், தாண்டவன்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி (வயது: 38), த/பெ. கலியன் என்பவரை, கடந்த 16.08.2010 அன்று இரவு 1.00 மணியளவில், கடலூர் மாவட்ட போலீசார் சுமார் 7 பேர், அவரை அடித்து உதைத்து, ஒரு டாடா சுமோ காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த அவருடைய மனைவி கஸ்தூரி (வயது: 30) எதற்காக என் கணவரை இழுத்துச் செல்கிறீர்கள் எனக் போலீசாரிடம் கேட்டதற்கு அவரை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டியதோடு, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கலியையும், மேலும் பீரோவில் இருந்த நகைகள், பன்றி விற்று வைத்திருந்த ரூ. 40 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனர். போலீசார் அனைவரும் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளனர். மேலும், மேற்சொன்ன ரவியை எங்குக் கொண்டு செல்கிறோம் என்பதைப் பற்றிய தகவல் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், 17.08.2010 அன்று இரவு சுமார் 1.00 மணியளவில், தாண்டவன்குப்பத்தில் உள்ள ரவியின் வீட்டிற்கு சுமார் 7 போலீசார் சென்றுள்ளனர். அதில் ஒரு போலீஸ்காரர் தவிர அனைவரும் சீருடை இல்லாமல் இருந்துள்ளனர். அங்கு இருந்த ரவியின் மனைவி கஸ்தூரியிடம் உன் வீட்டுக்காரரை ஒப்படைக்க வேண்டும், இந்த தாளில் கையெழுத்துப் போடு என்று கேட்டு மிரட்டுயுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரை தகாத வார்த்தைகள் கூறி முதுகில் குத்தியுள்ளனர். போலீசுக்குப் பயந்துக் கொண்டு கஸ்தூரி அந்த தாளில் கையெழுத்துப் போட்டுள்ளார். மேலும், அந்த போலீசார் கஸ்தூரியிடம் மறுநாள் காலை கடலூருக்கு வந்து அவரது கணவர் பாடியைப் பெற்றுக் கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர், கஸ்தூரி 19.08.2010 அன்று சென்னை சென்று தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தினர் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட ஆலோசனை செய்துவிட்டு கடலூர் திரும்பியுள்ளார்.

20.08.2010 அன்று கடலூர் அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, தன் கணவரது உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்வதற்கு முன்னர் தன் கணவரது உடலைப் பார்ப்பதற்குக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர், அன்றைய தினம் மாலையே தனது கணவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பரிந்தல் என்ற கிராமத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இதனிடையே, 18.08.2010 அன்று மாலை 3.30 மணியளவில், சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள முந்திரிதோப்பில் போலீஸ் காவலில் இருந்து மேற்சொன்ன ரவி தப்பி ஓடும் போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார் என காடாம்புலியூர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றை போலீசார் பதிவுச் செய்துள்ளனர். குற்ற எண். 351/10 குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176 (1-A). பாதிக்கப்பட்ட ரவியின் மனைவி தன் கணவரைப் போலீசார் அடித்துக் கொலை செய்துவிட்டனர் எனப் புகார் அளித்துள்ளார். தற்போது பண்ரூட்டி நீதித்துறை நடுவர் எண். 2-ன் நீதிபதி ஈஸ்வரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

எமது விசாரணையில் தெரிய வந்த உண்மைகள் / பார்வைகள்:

விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விழுப்புரம் – கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு போலீஸ் விசாரணைக் குழு ஒன்றை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசானமுத்து அமைத்துள்ளார். இக்குழுவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட பல போலீசார் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் உள்ள மேற்சொன்ன போலீசார் தான் மேற்சொன்ன ரவியை அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்று நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கிச் சித்த்ரவதைச் செய்துள்ளனர். சித்தரவதைத் தாங்க முடியாமல் மேற்சொன்ன ரவி காவல் நிலையத்திலேயே இறந்துப் போய் உள்ளார். மேலும், ரவியின் உடம்பில் பல் இடங்களில் காயம் இருந்துள்ளதை அவரது உறவினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் பார்த்துள்ளனர்.

மேற்சொன்ன கொள்ளை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ரவியின் தம்பி 1) கெடிலத்தைச் சேர்ந்த ரமேஷ் (32), த/பெ. கலியன், அவரது உறவினர்களான 2) சுந்தரமூர்த்தி (30), த/பெ. கலியபெருமாள், 3) வடக்கு இருப்பைச் சேர்ந்த ஜெயராமன் (35) த/பெ. முனுசாமி, 4) பாலா (25) த/பெ. முனுசாமி, 5) காட்டுக்கூடலூரைச் சேர்ந்த கொளஞ்சி (30) த/பெ. மாயவன், 6) நெய்வேலி 1-ஆம் பிளாக்கைச் சேர்ந்த விஜயக்குமார் (23), த/பெ. ராமலிங்கம், 7) ராமலிங்கம் (60) த/பெ. குப்பன், 8) புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த ஆனந்தஓளி (24) த/பெ. மாயவன் ஆகியோரையும் மேற்சொன்ன போலீசார் பிடித்துச் சென்று நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்துள்ளனர். ரவியை போலீஸ் காவல் வைத்து அடித்துச் சித்தரவதைச் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்சொன்ன அனைவருமே நேரடியாக பார்த்துள்ளனர். இந்த காவல்நிலைய மரணத்திற்கு மேற்சொன்ன இவர்கள் அனைவருமே கண்ணுற்ற சாட்சிகள் ஆவர். தற்போது இந்த 8 பேர் மீதும் போலீசார் பொய் வழக்குப் போட்டு அனைவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ரவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளில் ஒன்றைக்கூட போலீசார் பின்பற்றவில்லை.

மேற்சொன்னவற்றின் அடிப்படையில் பார்த்தால் பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம்  உள்ளிட்ட 10 போலீசார் தான் இந்த காவல் நிலைய கொலைக்குக் காரணமானவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.

குற்றமிழைத்த போலீசார் தங்கள் மீதான சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 22.08.2010 அன்று இளவனாசூர் கோட்டையைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவி திலகவதியின் கணவர் சேனாதிபதி மூலம் போலீசார் பரிந்தலில் உள்ள கொல்லப்பட்ட ரவியின் அண்ணன் தண்டபாணியிடம் ரூ. 2 லட்சம் கொடுத்துவிடுகிறோம், இத்தோடு இந்த பிரச்சனையை விட்டுவிடுங்கள் எனக் கூறி பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையின் போது தண்டபாணி புகார் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாது, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையை சீர்குலைக்கும் வேலையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரிக்கு பண்ரூட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து 25.08.2010 அன்று மதியம் 3.00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை வந்துள்ளது. இந்நிலையில், 24.08.2010 அன்று இரவு காடாம்புலியூர் போலீசார் ஒருவர் மேற்சொன்ன கஸ்தூரியை தொலைபேசியில் அழைத்து பண்ரூட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை. விசாரணை வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், 28.08.2010 அன்று மேற்சொன்ன இளவனாசூர் கோட்டையை சேர்ந்த சேனாதிபதியுடன் இரண்டு போலீசார் பரிந்தலில் உள்ள ரவியின் அண்ணன் தண்டபாணியின் வீட்டிற்குச் சென்று ரூ. 2 லட்சம் தருவதாக மீண்டும் அவரிடம் பேரம் பேசியுள்ளனர்.

மேலும், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகளில் ஒருவரான கொல்லப்பட்ட ரவியின் தம்பி ரமேஷை போலீசார் சிறையில் மனு எதுவும் போடாமல் சட்டவிரோதமாக சந்தித்து, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது, நீதிபதி முன்பு சாட்சியம் அளிக்கக் கூடாது என  மிரட்டியுள்ளனர்.

ரவியை காவல்நிலையத்தில் அடித்து சித்தரவதை செய்துக் கொலை செய்த போலீசார் மீது எந்த ஒரு சிறு நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுக்காததுதான் குற்றமிழைத்த போலீசார் இதுபோன்று சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்படுவதற்குக் காரணம்.

எமது கோரிக்கைகள்:

1)    ரவியை அடித்துச் சித்தரவதை செய்து கொலை செய்த பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட 10 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு உடனடியாக மாற்ற வேண்டும்.

2)    குற்றமிழைத்த போலீசார் தங்கள் பதவியைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் தடுக்கப்பட உடனடியாக மேற்சொன்ன போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அனைவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

3)    பாதிக்கப்பட்ட ரவியின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது பிள்ளகளின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும்.

4)    ரவி கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். பொய் வழக்கில் சிறையில் உள்ள ரவியின் உறவினர்களான இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகள் 8 பேர் மீதான வழக்கைத் திரும்ப்ப் பெற்று, அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும்.

5)    குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு சிறையிலிருக்கும் கண்ணுற்ற சாட்சிகளைக் கொண்டு உடனடியாக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும்.

6)    திருட்டு வழக்குகளில் போலீசார் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர், குறவர் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக பாவித்து விசாரணைக்கு அழைத்துச் செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சமூகத்தையே குற்றவாளியாக கருதுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

7)    ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளைப் போலீசார் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பின் போது, கொலை செய்யப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் உடன் இருந்தனர்.

சேலத்தில் சுற்றுச்சுழல் ஆர்வலர் பியூஸ் சேத்தியா கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

No Comments →

சேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமைத் தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. வழக்குரைஞர் ப.பா. மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளர் சா.பாலமுருகன், தமிழ்நாடு மனித உரிமை இயக்கத் தலைவர் பூமொழி, டாக்டர் ஜீவானந்தம், நிலவன், மா.செந்தில், கோ.சீனிவாசன், மாயன், பிந்துசாரன், ஆனந்தராஜ், எத்திராஜ, மாதேஸ்வரன், ராமு, குமார் அம்பாயிரம், பார்த்திபன், நெப்போலியன், அசோகன்ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவும் கார்ப்பரேட்டுக்களுக்காகவும் இன்று நாடெங்கும் கனிம வளமும் நீர் வளமும் நிறைந்த நிலைகள் ஏராளமாக வாரி வழங்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி மக்களும் விவசாயிகளும் இந்நிலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர், இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்று மத்திய அரசு ‘பச்சை வேட்டை நடவடிக்கை’ என்கிற பெயரில் சுமார் 1 லட்சம் துணை ராணுவப் படைகளை பழங்குடி மக்களுக்கு எதிராக இறக்கியுள்ளது. இது தவிர தாக்குதல் பயிற்சிப் பெற்ற மாநில போலீசும் அரசே நடத்துகிற ‘சல்வா ஜுடும்’ போன்ற சட்ட விரோத கூலிப்படைகளும் இன்று பழங்குடி மக்களைத் தாக்கிக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 3 லட்சம் பழங்குடி மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் வாழ்கின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்திய அரசு இவ்வாறு தம் சொந்த மக்கள் மீதே ஒரு யுத்தம் தொடங்கியிருப்பதை எதிர்த்து இன்று ஹிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகளும், ஆனந்த பட்வர்தன் போன்ற கலைஞர்களும் நோம் சோம்ஸ்கி போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்களும் கண்டித்துள்ளனர். பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ராபி ரே, முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூக்ஷன் ஆகியோரும் இதைக் கண்டித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த எதிர்ப்புக் போராட்டத்தின் ஒரு அங்கமாக தமிழகத்தில் ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ என்கிற அமைப்பு மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதங்கள் அனுப்புவது, சைக்கிள் பிரச்சாரம் செய்வது ஆகிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டது.

சென்ற ஜனவரி 26 அன்று சேலத்தில் குடியரசு தின விழா முடிந்த பின் இது குறித்த துண்டறிக்கை விநியோகிப்பதற்காக சென்றிருந்த பியூஸ் சேத்தியாவை சேலம் மாநகர காவல்துறை கைது செய்து அடித்து இழுத்துச் சென்றது. அவர் மீது இன்று தேசத்துரோக வழக்கு உள்பட பல கடுமையான பிரிவுகளின்படி வழக்குகள் தொடரப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

அமைதியான முறையில் செயல்பட்டு வந்த ஒரு மனித உரிமைப் போராளி இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கத்தின் ஓரங்கமாகச் செயல்பட்ட ஒருவர் மீது இத்தகைய கொடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பதையும் அவருக்கு பிணை மறுக்கப்படுவதையும் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பியூஸ் சேத்தியா உடனே விடுதலை செய்யப்பட்ட வேண்டும். அவர் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். அவரை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை வற்புறுத்தியும் தொடர்ந்து மனித உரிமைப் போராளிகள் மீது பொய் வழக்குகளைப் போடும் சேலம் மாநகர காவல்துறையை கண்டித்தும் உரையாற்றியவர்கள் பேசினார்கள்.

‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோதனைப் பதிவு

No Comments →

சோதனைப் பதிவு