Archive for the ‘செய்திகள்’

அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?” நூல் வெளிவந்துவிட்டது

No Comments →

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?” நூல் வெளிவந்துவிட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் மொத்தம் 200 பக்கங்கள். விலை ரூ. 100.

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவில் காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்து அவற்றை தொகுத்து அளித்துள்ளார் அ.மார்க்ஸ்.

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.

‘காஷ்மீர் பிரச்சினை’ என்பது உண்மையில் “காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை” என்பதன் சுருக்கமே.

காஷ்மீர் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் அ.மார்க்ஸ்.

2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றை சொல்லும் நூலாசிரியர் புதிய சூழலில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல் முன்வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல தென் ஆசியாவில் நடைபெற்று வரும் இதர விடுதலைப் போராட்டங்களுக்கும் பொறுத்தமானவையே.

நூல் கிடைக்குமிடம்:

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
செல்: 97898 64555, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க தேசிய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்தல்!

No Comments →

தில்லி சென்ற புதுச்சேரி அரசியல் கட்சி, இயக்கத் தலைவர்கள் பல்வேறு தேசிய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் யூ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் தில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்கள், தேசிய கட்சித் தலைவர்களை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 16.12.2008 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், 15.12.2008 அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நேரில் பேசுவதாக’ கூறினார்.

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ‘தங்கள் கட்சி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக’ உறுதியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் ‘தான் விரைவில் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக’ உறுதிபட கூறினார்.

மேலும், புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 15.12.2008 அன்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.