புதுச்சேரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி 12.02.2010 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறையில் தூய்மையான குடிநீர், போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, பார்வையாளர் அறையில் உறவினர்களுடன் நெருங்கிப் பேச வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பரோல் வழங்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன் தொடக்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பாளர் சி.மூர்த்தி, அகில இந்திய பார்வட் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் புரட்சிவேந்தன், மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் இர.அபிமன்னன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அ.அப்துல் ரசாக் கான், துணைத் தலைவர் அபுபக்கர், மார்க்சிய – பெரியாரிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சதீஷ் (எ) சாமிநாதன், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உட்பட பல்வேறு கட்சி, அமைப்பினர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறைக் கைதிகளின் குடும்பத்தினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.