அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்

தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கோவை வெடிகுண்டு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத்தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளார்.

மதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்திவரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும்கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமகும்.

மக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

கையெழுத்திட்டோர்:

பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், டாக்டர்.ப.சிவகுமார், பொ.இரத்தினம், சி.நீலகண்டன், சுகிர்தராணி, வெளி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, சுகுணா திவாகர், ஆ.இரமேசு, வசுமித்ரா, புனித பாண்டியன், வீராசாமி, கே.எம்.வேணுகோபால், ஜெ.ஹாஜா கனி, இன்குலாப், கவிக்கோ அப்துர் ரகுமான், வ.கீதா, சே.கோச்சடை, கோணங்கி, குட்டி ரேவதி, மதிவண்ணன், ச.பாலமுருகன், கடற்கரய், இரத்தின கரிகாலன், சு.தமிழ்ச்செல்வி, அழகிய பெரியவன், விடியல் சிவா, லட்சுமி மணிவண்ணன், தளவாய் சுந்தரம், கவிதாசரண், ஜெயந்தன், யூமா வாசுகி, சி.மோகன், கண்மணி, ஓடை துரைஅரசன், சுதாகர் கத்தக், கண்ணன்.எம்., சிவகுமார், வெ.கோவிந்தசாமி, பெரம்பூர் கந்தன்.

தமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*