கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (1) – மு. சிவகுருநாதன்

(ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள் “பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அதன் அனுபவப் பகிர்வு இது.)

தமிழ்ச்சமூகத்தில் தமிழ், சமூக அறிவியல் பாடங்களுக்கு இருக்கும் வரவேற்பு உலகறிந்த ஒன்று. இந்நிலையில் நற்பண்புகளை இணைக்க இவ்விரண்டு பாடங்களையும் தேர்வு செய்துள்ளனர். அறிவியல் போன்ற இதர பாடங்களில் நற்பண்புகளை வளர்க்க முடியாது என்பது மூட நம்பிக்கையா, அல்லது அவற்றில் மூட நம்பிக்கைகளை இணைக்க வழியில்லையா என்பது தனியே ஆய்வுக்குட்படுத்த வேண்டிய செய்தி.

வாரத்தில் சமூக அறிவியல் பாடவேளை 5 மட்டுமே. இதில் தேசியப் பங்கு மாற்றகம் (NSE) வெளியிட்டுள்ள பொருளியல் நூலையும் கற்பிக்க வேண்டும். அரசுப்பாடநூலில் உள்ள பொருளியல் பகுதியைவிட இது சிறப்பாக இருப்பதை இங்கு குறிப்பிடுவது நலம். பாடப்பகுதிக்கு மாற்றாக இதை இணைப்பது நல்லது. ஆனால் நடக்குமா? முதல் வகுப்பு முதல் மெட்ரிக் (?!) பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் பாடநூற்களைக் கற்கும் சுமை இருக்கிறதே! அதை அரசு கண்டு கொண்டதா என்ன? இங்கு மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

நீதிபோதனை வகுப்புகள் குறித்து முன்பு எழுதிய கட்டுரை ஒன்றின் இணைப்பை இங்கு தருகிறேன். http://musivagurunathan.blogspot.in/2015/10/41-45-41-45.html
தேவைப்படின் சொடுக்கி வாசிக்கவும். பயிற்சியில் கூறப்பட்ட, ஆசிரியர்களால் பகிரப்பட்ட சில செய்திகளையும் அது தொடர்பான கருத்துகளை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

ஒன்று:

மணலும் மணல் சார்ந்த பகுதி பாலை. குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் திரிவது பாலை, என்றுதான் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை இவ்வாறு எளிமைப்படுத்துவது பொருத்தமாக இருக்காது. தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. உலகின் வெப்ப மற்றும் குளிர் பாலைகள் உள்ளன. ரஷ்யாவில் அமுதார்யா, சிர்தார்யா ஆகிய இரு நதிகளால் உருவான ஏரல் கடல் (ஏரி) வறண்டு போயுள்ளது. அண்டார்ட்டிகாவின் பெரும்பகுதி பாலைவனமே. பாலையாதல் (Desertification) இன்றுள்ள மிக முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களும் பாலையாகும் வாய்ப்புண்டு.

இரண்டு:

சுவாமி விவேகானந்தர் ஒரு நாளில் 10,000 பக்கங்கள் வாசித்தார்!
ஆதாரம்? புலவர் இரா.இளங்குமரன் சொன்னாராம்! இது சிலரால் மட்டுமே முடியக்கூடிய செயலாம்! ‘டிஸ்கவரி’ சேனலில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பினார்களாம்! அவர்கள் ஒரு பக்கத்தை பார்த்த மாத்திரமே அதை முற்றாக உள்வாங்கும் தன்மை உடையவர்களாக இருப்பர் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. எனக்கு ‘எந்திரன்’ பட சிட்டி ரோபோ தான் நினைவுக்கு வந்தது. இயந்திரத்தைக் கொண்டு ஸ்கேன் செய்யவே சில மணிநேரம் பிடிக்கும் செயலிது. கடவுள் நம்பிக்கைகளைவிட மிக மோசமானது, இம்மாதிரியான நம்பிக்கைகள். “பகுத்தறிவு’ என்று ஒன்று கிடையாது. இது தமிழர்களை ஏமாற்றிய ஒன்று”, என்றும் சொல்லப்பட்டது. இதில் பெரியார் மீதான காழ்ப்பைத் தவிர வேறில்லை.

மூன்று:

எல்லோருக்கும், எல்லா காலங்களுக்குமான ‘ரோல் மாடலாக’ அப்துல் கலாமை முன்னிறுத்தும் போக்கு.

முன்மாதிரிகளை மாணவர்கள், இளைஞர்கள் கண்டடையவேண்டும். மேலிருந்து திணிக்கப்பட முடியாது. உலகமயச் சூழலில் பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்புகளுக்கு வரும் அதிக ஊதியம் பெறுபவர்கள் இவ்வாறு சொல்லப்படுவது மிக மோசமான ஒன்று. சுந்தர் பிச்சை, சந்திரசேகரன், நாதெள்ளா பொன்றவர்கள் இவ்வரிசையில் வருகின்றனர். அப்துல் கலாமிற்கு பின்பு குடியரசுத்தலைவர் பதவிக்கு ‘இன்போஸிஸ்’ நாராயணமூர்த்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது இங்குக் குறிப்பிடத்தகுந்தது. குடியரசுத்தலைவர் பதவி கார்ப்பரேட் சி.இ.ஓ. பதவி போன்றதல்ல. கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ.க்களும் அரசியல், கருத்தியல் புரிதல் இல்லாதவர்களும் அமரும் இருக்கையல்ல அது.

நான்கு:

ஒரு தன்னம்பிக்கைக் கதையாம். நன்கு படித்த, அதிக மதிபெண் பெற்று தேர்வுகளில் வென்ற ஒரு பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி அப்துல் கலாமைச் சந்தித்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராவதுதான் தமது கனவு. அதற்கான விதிகள் திருத்தப்படும் வரை, 35 வயது வரும்வரை காத்திருப்பேன், என்றாராம். அதற்காக அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்பையும் புறக்கணித்தாராம்!
இது என்ன கூத்து? இதில் என்ன நம்பிக்கை இருக்கிறது? மூடநம்பிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். இது போன்ற கதைகள் மாணவர்களிடம் என்ன விளைவை வெளிப்படுத்தும்? (இது குறைபாட்டிற்காக சொல்லப்படவில்லை. இதற்கு வேறு சொற்கள் தெரியவில்லை.)

அய்ந்து:

தேசியகீதம், தேசியக்கொடி போன்றவை அவமதிக்கப்படக்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் தேசியக்கொடியை மடித்து, சுருட்டி அளித்தவிதத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது தாங்க முடியவில்லை; நெஞ்சு வெடிப்பதைப் போல உணர்ந்தேன் என்று ஒருவர் சொன்னார்.
இது தொடர்பான பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இவற்றை மதிப்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இருப்பினும் மதரீதியான ஒரு மிகையுணர்ச்சியைக் கற்பிக்கும் போக்கு வருத்தமளிக்கக்கூடியது.
திரையரங்கில் தேசியகீதம் இசைப்பதை நிறுத்தியது ஒரு நல்ல நடைமுறை. திரையரங்கிற்கு வருபவர்கள் பள்ளி மாணவர்களைப் போல ஒழுங்கிற்கு ஆட்பட்டவர்கள் இல்லை. மேலும் எல்லோரும் ஒன்றாக வந்து எழுந்து செல்வார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இப்போதைய மத்திய அரசு மீண்டும் இந்த தேசிய உணர்வைக் கையில் எடுத்துள்ளது.

ஜெயலலிதா இறுதிச்சடங்கில் ராணுவ மரியாதைகளுடன் இந்திய ராணிவத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதாக கருத இடமில்லை. அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு தேசியக்கொடியை அகற்றுவது இயல்பான நடைமுறை. இதில் அவமதிப்பு எங்கே வந்தது? இம்மாதிரியான போலிப் பக்தியையும் மிகை உணர்ச்சியையும் கட்டமைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கிரிகெட் மைதானங்களில் நடைபெறும் அவமதிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? ஏனிந்த இரண்டக நிலை?

ஆறு:

தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம் மட்டுமே முதன்மையானது; உயர்வானது.
மொழிப்பெருமை, இனப்பெருமை, கலாச்சாரப் பெருமை மூலமாக நன்னெறிகளைப் போதிக்க இயலாது. மாறாக சகிப்பின்மையும் வெறுப்புணர்ச்சியும் வளரவே இது வழிவகுக்கும். ஒற்றைக் கலாச்சாரம் இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் கிடையாது. இங்கு இன்று பல்வேறு கலாச்சாரங்கள் இணைந்து மனித நேயத்தோடு வாழ்ந்து வருகின்றன. ஜல்லிக்கட்டு போன்ற ஒற்றை அடையாளம் தமிழ் கலாச்சாரம் அல்ல; இதிலிருந்து அந்நியப்பட்ட பல்வேறு பிரிவுகளும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு பெருமை பேசுவதும் உணர்வைகளைத் தூண்டுவதும் ஆசிரியர்களுடைய பணியாக இருக்க முடியாது.

ஏழு:

1330 திருக்குறள்களை தினமும் ஒன்றாகப் படித்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை அல்லது ஆத்திச்சூடியைப் படித்தாலே நன்னெறி உற்பத்தியாகிவிடும்.
திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவற்றில் நல்ல கருத்துகள் இருக்கின்றன. ஆனால் இதுவே இறுதியானது என்று வரம்பு விதிக்கக் கூடாது; முடியாது. மேலும் 1330 குறள்களும் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றதல்ல. பரிசுகளுக்காக சிறுவர்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு நிகரானது இது. வேத மந்திரங்களைப் போல மன்னம் செய்வதும் குறளைப் படிப்பதும் ஒன்றல்ல.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.