காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை கோரி மாசுக் கட்டுபாட்டுக் குழு அலுவலகம் முற்றுகை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (02.05.2018 புதன்கிழமை), காலை 10 மணியளவில், புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1. புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இயங்கி வரும் மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு கையாளப்படுவதால் காரைக்கால் டி.ஆர்.பட்டினம், கீழவாஞ்சியூர், வாஞ்சியூர் குப்பம், வடக்கு வாஞ்சியூர், நாகை மாவட்டம் நாகூர், அதன் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலக்கரி துகல்கள் காற்றில் கலந்து சுற்றுச்சூழல் முற்றிலும் சீரழிந்து வருவதோடு, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள், புற்று நோய் போன்ற பல்வேறு நோய்கள் தாக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் இறந்துப் போயுள்ளனர்.

மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி காரைக்கால் மற்றும் நாகூர் மக்களும், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர்ந்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாகூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு நிலக்கரி கையாள்வதில் துறைமுக நிர்வாகம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்படுகளைச் செய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

சென்ற ஜூலை 2017-ல் பெங்களூரில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் மார்க் துறைமுகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வது குறித்து அதிருப்தி அடைந்ததோடு, 30.04.2018 அன்றைக்குள் முழுவதும் மூட்டப்பட்ட கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கையாளப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர், இல்லாவிட்டால், துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வது தடை செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2010-ம் ஆண்டு முதல் 2017 வரையில் மார்க் துறைமுகத்திற்குத் தொடர்ந்துப் பல்வேறு கடிதங்கள் மூலம் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதற்கு முழுவதும் மூடப்பட்ட கன்வேயர் பெல்ட் முறை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஆனால், புதுச்சேரி அரசும், மாசுக் கட்டிப்பாட்டு வாரியமும் மார்க் துறைமுக நிர்வாகம் மீது கடும் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. மாறாக மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய நீட்டிப்பு செய்து புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 15.05.2018 அன்று, காலை 10 மணியளவில், மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தி புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்துவது.

2. இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுற்றுச்சூழல்துறைச் செயலர், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு விரிவான மனு அளிப்பது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*