சமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை – மு.சிவகுருநாதன்

முதலாளித்துவ அச்சு மற்றும் காட்சியூடகங்கள் அனைத்தும் ஆளும் கட்சி, இந்த்துத்துவம், கார்ப்பரேட் ஆகியவற்றுக்குக் காவடி தூக்குவது நெடுங்காலமாகத் தொடர்வது. Paid news பெருமை இவர்களுக்கு உண்டு.

நவீன தொழில்நுட்ப விளைச்சலான முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களை இந்துத்துவ வெறியர்கள் மிக நன்றாகப் (?!) பயன்படுத்தி வருகின்றனர். பெரியார் பிறந்த மண் என்று பெருமை பேசித் திரிவதை மட்டும் பலர் இன்னும் விடுவதில்லை.

தமிழ், சைவம், இலக்கியம், நல்லவை, கலாச்சாரம், பண்பாடு, மரபு என்று எக்குழு தொடங்கினாலும் அதில் இந்துத்துவப் பரப்புரை மிக எளிதாகச் செய்யப்படுகிறது. ‘பகிர்தல்’ வெறியர்களுக்கான வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போன்ற இந்து வெறியூட்டும் கட்டுரைகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. போதைப்பொருளைப் போல இவற்றிற்கு பலர் அடிமையாகின்றனர்.

இதை எதிர்த்து வினா எழுப்பினால் இவர்களது ஆழ்மனதில் உள்ள இந்துத்துவ மனநிலை நன்கு வெளிப்படுகிறது.

ஒரு எடுத்துக்காடு. சில மாதங்களுக்கு ‘திருவாசகம் முற்றோதல்’ என்னும் குழுவில் யாரோ முகம் தெரியாதவர்கள் என்னை இணைத்தனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போமே என்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். பிறகு ‘திருவாசகத் தேனீ’’ என்று குழுவின் பெயர் மாற்றப்பட்டது. இவற்றில் அப்பட்டமான இந்து வெறிப் பாசிசச் சொல்லாடல்களால் நிரம்பி வழிந்தது; மேலும் வழக்கமான குப்பைகள்.

வேதப்பெருமைகள் (ஆரிய வேதங்கள்), வருணப்பெருமைகள் பற்றியக் கட்டுரைகள் வெளியாயின. எதிர்த்துக் கேள்வி கேட்டது அவர்களால் தாங்க முடியவில்லை. திருக்குறள் பற்றிய விவாதம் வந்தது. சிலை வைப்பது இனத்தின் பெருமை என்றனர். இறுதியில் குழுவிலிருந்து என்னை நீக்கிவிட்டனர். எனது பெயரைப் பார்த்து ஏமாந்துவிட்டனர் போலும்!

குழு நிர்வாகிக்கு தனிப்பட்ட செய்தியாக கீழ்க்கண்ட பதிலை அனுப்பினேன். அவர்களிடமிருந்து எந்தப்பதிலும் இல்லை.

“முதலில் என்னை இக்குழுவிலிருந்து நீக்கியதற்கு பெரும் நன்றிகள்.

எனக்கு இன்னும் அய்யமிருக்கிறது, ஏன் என்னைக் இக்குழுவில் இணைத்தீர்கள் என்று.

நாள்தோறும் பல்வேறு குப்பைகளைக் கொண்டுவந்து சேர்த்த என் அலைபேசி இனி தப்பிக்கும். இதற்காகவேணும் தனியே நன்றி சொல்லவேண்டும்.

‘திருவாசகம் முற்றோதல்’ அல்லது ‘திருவாசகத் தேனீ’ என்று பெயர் வைத்துக்கொண்டு ஏதோ சைவப் பெருமை பேசினாவது பரவாயில்லை.

இங்கு நடந்தது என்ன? வேத/வருணப் பெருமை பேசப்பட்டது. அதைக் கேள்விகேட்ட என்னை குழுவிலிருந்து தூக்கிவிட்டீர்கள்! திருவாசகம் என்ற பெயரில் வேதப்பெருமை பேச முடியும் உங்களால் எப்படி திருக்குறளை விளங்கிக்கொள்ள முடியும்?

திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுவது அதன் கருத்துச் செறிவினால். நீங்கள் நினைப்பது போல் சிலைகளால் அல்ல.

புத்தரையும் மகாவீரரையும் இந்துத்துவம் விழுங்கியது போன்று திருவள்ளுவரையும் திருக்குறளையும் இந்துத்துவம் விழுங்கத் துடிக்கிறது.

உங்களைப் போன்ற சைவப்பெருமை பேசுவோர் தருண் விஜய் போன்ற இந்துத்துவ சங்பாரிவார் வெறிக்கும்பலுக்குக் காவடித் தூக்கும் வேலைகளைச் செய்கிறீர்கள். இது நியாயமல்ல; அறமுமல்ல.

உங்களது சைவ, இந்துப் பெருமைகளைப் பரப்புரை செய்வதற்குக் குறுக்கே நாங்கள் நிற்க விரும்பவில்லை.

ஆனால் உங்களது சைவ, இந்துத்துவ மதவெறிக் கருத்தியலுக்குள் வள்ளுவத்திற்கு இடமில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*