ஒதியஞ்சாலை காவல்நிலைய மரணம்: போலீசாரின் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு – வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.11.2018) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் சந்திரசேகரன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் போலீசாருக்கு வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.

கண்டாக்டர்தோட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை கடந்த 29.12.1993 அன்று விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஒதியஞ்சாலை போலீசார் அவரை காவல்நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தினர். இதனால் மயக்கமடைந்த அவர் கீழே விழுந்து காவல்நிலையத்திலேயே இறந்துப் போனார்.

ஒதியஞ்சாலை போலீசார் அவர் குடிபோதையில் இறந்ததாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரது உடலைப் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் போலீசார் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சந்திரசேகரன் குடிபோதையில் இறந்துவிட்டதாக அறிக்கை அளித்தார்.

சந்திரசேகரன் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரி அவரது உறவினர்கள் ஜிப்மர் மருத்துவமனை மார்ச்சுவரியில் உடலைப் பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் புதுச்சேரி அரசு மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டது. மறுபிரேதப் பரிசோதனை செய்த ஜிப்மர் மருத்துவர்கள் உடலில் லத்திக் காயங்கள் இருந்ததைப் பதிவு செய்து இது காவல்நிலைய மரணம் என அறிக்கை அளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட உதவி மையத்தின் சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம் இச்சம்பவத்தை விசாரித்து காவல்நிலைய மரணத்தை உறுதி செய்து அறிக்கை அளித்தார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கே.ஆர்.குருராஜன் தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை மேற்கொண்ட நீதிபதி இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

புதுச்சேரி அரசு இவ்வழக்கை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக மாற்றி புலன்விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.ஐ.டி. போலீசார் உதவி ஆய்வாளர் கோபால்சந்தர், தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கை அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன் உட்பட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராஜசூர்யா கடந்த 24.06.2002 அன்று தீர்ப்பளித்தார். உதவி ஆய்வாளர் கோபால்சந்தர் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்குக் கைவிடப்பட்டது. போலீசார் ரவிச்சந்திரன், ராமையன், ஆறுமுகம் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. போலீசார் சுந்தர்ராஜ், தேவராஜ், லட்சுமணன் மற்றும் மருத்துவர் சீனிவாசன் ஆகியோருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. போலீசார் நாராயணசாமி, தணிகாசலம், ராமு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இத்தீர்ப்பை எதிர்த்து தண்டனைப் பெற்ற போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் கடந்த 29.10.2018 அன்று தீர்ப்பு வழங்கினார். அதில் புதுச்சேரி நீதிமன்றம் போலீசாருக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மனித உரிமைகளை உயர்த்திப் பிடித்து, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்ட, துணைநின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*