புதுச்சேரி பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (10.12.2018) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

இந்திய அரசியல் சட்டத்திலும், பிற சட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம். பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அவ்வப்போது வழங்கின்ற முக்கிய தீர்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

புதுச்சேரியில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஹோப் நிறுவனம் சார்பில் மனித உரிமைக் கல்விக்கானப் பாடப் புத்தகங்கள் துறை வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டன. அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கும் பட்சத்தில் பாடப் புத்தகங்கள் அச்சிட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என நான்கு பிரிவுப் பள்ளிகளிலும் மனித உரிமைக் கல்வியை முதல் கட்டமாக அறிமுகப்படுத்த வேண்டும். பின்னர் கல்லூரி அளவிலும் பட்டப்படிப்பு தொடங்கலாம்.

புதுச்சேரியில் தமிழ்நாடு கல்வி வாரியத்தின்கீழ் தமிழ்நாடு பாடத் திட்டத்தைப் பின்பற்றுவதால் தனியே ஒரு பாடமாக சேர்த்துக் கற்பிப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது. இதற்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புத்தகங்களைத் தேவைப்பட்டால் கல்வியாளர்களைக் கொண்டு மேலும் செழுமைப்படுத்திக் கொள்ளலாம்.

டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையில் மனித உரிமைக் கல்வியை பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதல்வர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை செயலர், கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*