சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் – பன் மாநிலக் கருத்தரங்கம்


Drawing Courtesy: Brydie Cromarty.

வேறெப்போதையும் விட சிவில் மற்றும் மனித உரிமைகள் பறிக்கப்படக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயம், தடையற்ற முதலீட்டுக் கொள்கைகள் ஆகியவற்றின் விளைவாக மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படும் நிலை இன்று உச்சமடைந்துள்ளது. கனிமவளம், நீர்வளம் மிக்க பொதுச் சொத்துக்களையும் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களையும் கார்ப்பரேட்டுகள் சொந்தமாக்கிக்கொள்ளும் கருவிகளாகப் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக, பாதிக்கப்படும் மக்களும் மக்கள் இயக்கங்களும் போராடும்போது அரசுகள் மிகுந்த வன்மத்துடன் கடும் அடக்குமுறையை ஏவுகின்றன. சொந்த குடிமக்கள்மீதே போர்த் தொடுக்க அவை அஞ்சுவதில்லை. இதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள வன் தாக்குதல்களில் பயிற்சி பெற்ற துணை இராணுவப் படைகளைக் கொண்டு அப்பாவி மக்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசு நிதியிலிருந்து ஊதியம் வழங்கி, சட்டவிரோதமான கூலிப்படைகளையும் அரசே முன்னின்று செயல்படுத்தும் நிலையும் இன்று மிகுந்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்படும் மக்களையே இரு எதிரெதிர்க் கூறுகளாக்கி ஒருவரோடொருவர் மோத வைக்கப்படுகின்றனர். இத்தகைய தாக்குதல்களினூடாக பெரிய அளவில் பழங்குடியினரும் இதர அடித்தள மக்களும் இடம் பெயர்க்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அப்பட்டமான போலி மோதல் படுகொலைகள், சட்டவிரோதக் கைதுகள், பாலியல் அத்துமீறல்கள், ஆட்கள் காணமாலடிக்கப்படுதல் ஆகியன இன்று போராட்டப்  பகுதிகளில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இத்தகைய தீவிரப் போராட்டங்கள் நடைபெறாத மாநிலங்களிலும் கூட பேச்சுச் சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை,  அறைக் கூட்டங்கள் நடத்துதல், ஆர்ப்பாட்டங்கள் செய்தல் முதலான உரிமைகள் இன்று பெரிய நெருக்கடிக்குள்ளாகியிருப்பதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளோம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கத்தக்க அளவில் பல கருப்புச் சட்டங்கள் இன்று மத்திய அளவிலும் மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘பொடா’ சட்டம் நீக்கப்பட்டப் போதும், அதன் பிரிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ‘உலாபா’ (ULAPA) சட்டம் இன்று நடைமுறையில் உள்ளது. அரசியல் சட்ட அடிப்படைகளைத் தகர்க்கும் இத்தகைய சட்ட விரோதச் சட்டங்களுக்கு நீதிமன்றங்களும் ஏற்பு வழங்கிவிடுகின்றன.

இத்தகைய சூழல்களால் இன்று மனித மற்றும் சிவில் உரிமை அமைப்புகளின்  தேவையும் பணிகளும் அதிகமாகியுள்ளன. குறைந்தபட்சம் அரசியல் சட்ட ஆளுகைக்காகவே கூட (constitutional governance)  நாம் போராட வேண்டியுள்ளது. மனித உரிமைப் போராளிகள் மற்றும் களப் பணியாளர்களின் மீதான தாக்குதல்களும் இன்று அதிகமாகியுள்ளன. கனிம மற்றும் நீர்வளம் அதிகமான பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறும்போது மனித உரிமைப் போராளிகளின் மீது தாக்குதல்கள் அதிகமாகின்றன என ஐ.நா அளவில் சிறப்பு அறிக்கையாளர் ஹினா ஜிலானி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் துணைக் கண்டத்திலும் தமிழகத்திலும் நெருக்கடி மிக்க பல தருணங்களில் மனித உரிமை இயக்கங்களின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில்  அமைந்துள்ளன. போலி மோதல் கொலைகள், நெருக்கடி நிலை அத்துமீறல்கள், பட்டினிச் சாவுகள் ஆகியவற்றிற்கெதிராகவும் கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் அவை பெரும்பங்காற்றியுள்ளன.

எனினும் இன்று மனித உரிமை அமைப்புகள் நாடெங்கும் எத்தகைய ஒருங்கிணைப்புமின்றி இருப்பது ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இன்று சிவில் உரிமை இயக்கம் பலவீனப்பட்டுள்ளதற்கும் காரணமாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.

அரசு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், பெரு ஊடக வலைப்பின்னல்கள் ஆகியவற்றை எதிர்த்து, எவ்விதப் பெரிய நிதி ஆதாரங்களுமின்றி களத்தில் நிற்கிற மனித உரிமை அமைப்புகளின் ஒரே பலம் அவற்றின் நம்பகத்தன்மையே (credibility).

இந்த நம்பகத்தன்மையை அவை இருவகைகளில் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசும் ஊடகங்களும் ஆயிரம் நாவுகளால் பிரச்சாரம்  செய்தபோதும், எந்த ஒரு பிரச்சினையின் மீதும் மனித உரிமை இயக்கங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அதுவே உண்மையாக இருக்கும் என்கிற நம்பிக்கையை அவை மக்கள் மத்தியில் பெற வேண்டும்.  எந்த ஒரு குறிப்பான மக்கள் இயக்கம் அல்லது அரசியல் கட்சியின் முகப்பு அமைப்பாக அவை இல்லாததோடு, அப்படி இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையிலும்  அவை நடந்துக்கொள்வது அவசியம்.

இரண்டாவதாக அவை நிதி ஆதாரங்களில் சுயேச்சையாக  இயங்க வேண்டும். வெளியிலிருந்து எந்தவிதமான நிதி உதவியையும் அவை பெறலாகாது. பெரிய அளவில் வெளிநாட்டு நிதி உதவியுடன் ஒருவகை கார்ப்பரேட் தன்மையிலான, அரசுக்கு எதிராகத் தீவிர வசனங்களை உதிர்த்துக்கொண்டே அரசுடன் இணைந்து செயல்படுகிற தொண்டு நிறுவனத் தன்மையிலான மனித உரிமை அமைப்புகள் உருவாகியுள்ள நிலையில் நிதி ஆதாரம் குறித்த இந்தக் கவனம் முக்கியமானது.

நிபந்தனைகளை மனித உரிமை இயக்கங்கள் இன்று எந்த அளவில் பூர்த்தி செய்கின்றன என்கிற கேள்வியை எழுப்புவது காலத்தின் தேவையாகிறது. இன்று இயங்கும் பல்வேறு சிவில் உரிமை அமைப்புகளும் தாம் சுயேச்சையானவைதான் எனச் சொல்லிக் கொண்டபோதும், நடைமுறையில் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தும்படிச் செயல்படுவதில்லை. ஒரு குறிப்பான அரசியல் இயக்கம் பாதிக்கப்படும்போதும், அவர்களில் சிலர் போலி மோதல்களில் கொல்லப்படுவது அல்லது சிறையிலடைக்கப்படுவது  என்கிற நிலை உள்ளபோதும் மட்டுமே ஒரு மனித உரிமை அமைப்பு குரல் கொடுக்கும்போது அப்படியாகிவிடுகிறது. கூட்டியக்கச் செயற்பாடுகளை உருவாக்கும்போது கூடக் குறிப்பாகவே தேவைகளுக்கேற்பப் பிறரைப் பயன்படுத்திக் கொள்வது என்றாகிவிடுகிறது. எனவே உண்மையான ஒருங்கிணைப்பு ஏற்படுவதில்லை.

தாம் சார்ந்துள்ள, அல்லது தாம் ஆதரிக்கிற அரசியல் இயக்கத்திற்காக உண்மைகளை மிகைப்படுத்துவது அல்லது பாதகமான உண்மைகளைக் குறைத்துச் சொல்வது அல்லது கண்டுகொள்ளாதது ஆகியவையும் கூட சிவில் உரிமை இயக்கங்களின் நம்பகத் தன்மையைச் சிதைத்துவிடும் நிலைக்கு இட்டுச் செல்லலாம். அதேபோல் தாம் சார்ந்த அரசியல் இயக்கத்தின் அன்றைய அரசியல் நிலைபாடுகளுக்கு இணையான பிரச்சினைகளை மட்டுமே மனித உரிமை இயக்கங்கள் எடுக்கும்போதும் இந்நிலை ஏற்படுகிறது.

இதன் பொருள் சிவில் உரிமை இயக்கங்களுக்கும் சார்பு இல்லை என்பதல்ல. நிச்சயமாக அவை பாதிக்கப்படும் மக்களுக்கும் சார்பானவையே. பெரும் பலத்துடன் இயங்கும் அரசும் ஊடகங்களும் உண்மைகளை மறைக்கும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சார்பாக நின்று அவர்கள் தரப்பு உண்மைகளை வெளிக்கொணர்வதே நமது பணி. மனித மாண்புகளைக் காப்பதும் தக்கவைப்பதும் அதற்காகப் போராடுவதுமே மனித உரிமை இயக்கங்களின் பணி. இவற்றிற்கு எந்தத் திசையிலிருந்து ஊறு வந்தபோதும் அவற்றைக் கண்டிக்கும் திராணி பெற்றவையாக அவை இருக்க வேண்டும்.

மக்கள் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகப்பு அமைப்புகளாக (Frontal organisations)  நாம் இல்லாதபோதும் ஆயுதக் குழுக்கள் உட்பட எல்லா அரசியல் இயக்கங்களும்  தடையின்றிச் செயல்படத் தக்க சிவில் வெளி ஒன்றைத் தக்கவைப்பதிலும் மனித உரிமை அமைப்புகள் முன் நிற்கும்.

சிவில், மனித உரிமைகளுக்கு எதிரான சக்திகள் மிக வலுவாகக் களமிறங்கியுள்ள சூழலில் அவற்றிற்கு எதிரான மனித உரிமைச் செயற்பாடுகளும் மேலும் வலுவடைய வேண்டும் என்பதற்காகவே நாம் இவற்றைப் பேச வேண்டியுள்ளது. இது குறித்த ஒரு விரிவான கலந்துரையாடல் மனித உரிமை அமைப்புகளிடையே இன்று தேவையாகிறது. இன்றைய மீறல்களுக்கு எதிராகத் தீவிரமாகச் செயற்படும்போது இணையாக இந்த உரையாடலையும் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நோக்கில் பன்மாநில அளவில் செயல்படுகிற களப் பணியாளர்கள் மத்தியில் ஒரு உரையாடலை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இரு அமர்வுகளாக ஒரு நாள் முழுவதும் இந்த உரையாடல்கள் நிகழ உள்ளன. முதல் அமர்வில் வெளியிலிருந்து செயல்படுவதை அழைக்கப்பட்டுள்ள பல கருத்தாளர்களும்  தமிழக அளவில் செயல்பட்ட, செயல்படுகிற மனித உரிமை முன்னோடிகளும் பங்கு பெறுவர். இரண்டாம் அமர்வில் தமிழக அளவில் இன்று செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் தம் கருத்துகளை முன்வைப்பர்.

பழங்குடி மக்கள்மீது இன்று இந்திய அரசு ஒரு போரைத் தொடுத்துள்ள நிலையில் அதற்கு எதிரான ஒரு கூட்டறிக்கை வெளியிடுவது, ஒரு பொது வேலைத்திட்டம் உருவாக்குவது குறித்த சாத்தியங்களும் பரிசீலிக்கப்படும்.

நாள்:  30.01.2010 சனி, காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை.

இடம்: இக்சா மையம், அருங்காட்சியகம் எதிர்புறம், எழும்பூர், சென்னை.

பங்குபெறும் வெளி மாநிலத்தின் கருத்தாளர்கள்:

டாக்டர் அபூர்வானந்த், டெல்லி பல்கலைக்கழகம், புதுடெல்லி.
சத்தியா சிவராமன், பத்திரிகையாளர், புதுடெல்லி.
கவிதா ஸ்ரீவத்சவா, பி.யூ.சி.எல், ராஜஸ்தான்.
பேரா. பாபையா, மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), பெங்களூரு.
வி. எஸ். கிருஷ்ணா, மனித உரிமை மன்றம், ஐதராபாத்.

மேலும் பலரும் வர வாய்ப்புகள் உள்ளன.

எஸ்.வி. ராஜதுரை முதலான தமிழ் மாநில முன்னோடிகளும் முக்கிய தமிழ் சிவில், மனித உரிமை இயக்கங்களும் பங்கு பெறுகின்றன.

உங்களின் பங்கேற்பையும் கருத்துகளையும் கோரும்:

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

தொடர்புக்கு:

அ. மார்க்ஸ்

3/5, முதல் குறுக்குத்தெரு, அடையாறு, சென்னை – 600 020.

செல்: 94441 20582, மின்னஞ்சல்: professormarx@gmail.com.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*