அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவு: ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2022) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு:

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான மாகேயில் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மறைந்த சி.எச்.பாலமோகனன் அரசு ஊழியர்களின் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துச் செயல்பட்டவர். அவர் தோற்றுவித்த அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி அரசு ஊழியர்களின் உரிமைகளைக் காத்தவர். பலமுறை சிறை சென்றவர். இடதுசாரி சிந்தனையாளர், செயற்பாட்டாளர்.

சுற்றுச்சூழலைக் காப்பதிலும் முன்னணி செயல்வீரராக திகழ்ந்தவர். துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து தேங்காய்த்திட்டு மக்கள் நடத்திய போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். உச்சநீதிமன்றம் வரை வழக்குத் தொடர்ந்து அத்திட்டம் கைவிட காரணமானவர்களில் ஒருவர். நீர்நிலைப் பாதுகாப்பு, மரம் நடுதல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்டவர்.

சமரசமற்ற போர்க்குணமிக்க போராளி என்பதால் புதுச்சேரி மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர். என் மீது அளவற்ற அன்பும் மதிப்பும் உடைய உற்ற தோழர். அவரின் மறைவு மக்கள் இயக்கங்களுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*