பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முதல்வரைக் கைது செய்ய டிஜிபிக்கு மனு!

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 சாலையில் உள்ள செவன்த்டே மேல்நிலைப் பள்ளியல் பயின்ற +2 மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியான செய்திகளை வாட்சாபில் அனுப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அம்மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ சட்டப் பிரிவுகள் 10, 12 ஆகியவற்றின்கீழ் முதலியார்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குற்றமிழைத்த ஆசிரியர் டோனி வளவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேற்சென்ன ஆசிரியர் மாணவிக்கு பாலியல் செய்திகள் அனுப்பியதை அறிந்தவுடன், அம்மாணவி படிக்கும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அந்த ஆசிரியரின் செல்போனைப் பறித்துப் பள்ளி முதல்வரிடம் ஒப்படைத்து புகார் கூறியுள்ளனர். அப்புகாரின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பள்ளி முதல்வர் செல்போனில் இருந்த செய்திகளை அழித்துள்ளார். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில் குற்றமிழைத்த ஆசிரியரைக் காப்பாற்றும் நோக்கத்தோடு செல்போனில் இருந்த ஆதரங்களை அழித்த பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென கோரி டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரிவு எஸ்.எஸ்.பி. ஆகியோரை நேரில் சந்தித்து சமூக அமைப்புத் தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் பி.பிரகாஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் பு.கலைப்பிரியன் ஆகியோர் கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*