சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் போராட்டம்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.06.2023) விடுத்துள்ள அறிக்கை:

சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேநிலைப் பள்ளி இடம் மாறுதல் பிரச்சனையில் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் செய்து மாணவிகள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளிய பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் சிவகாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த இரண்டு நாட்களாக புதுவை அரசுப் பள்ளிகளில் நடந்து வரும் பெற்றோர் மாணவர் போராட்டங்கள் அரசு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் செயல்பாடுகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளன. தற்போதுள்ள பிரச்சினை சென்ற ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி. மேனிலைப் பள்ளியில் நடந்த மாணவிகள் போராட்டத்தைப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் குறிப்பாக இணை இயக்குநர் சிவகாமி சரியாக விசாரிக்காமலும் போராட்டத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் வேறு ஒருவரை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதும் மாணவிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மெத்தனமாக இருந்ததே காரணமாகும்.

பழைய சட்டக் கல்லூரிக் கட்டடம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று புதுவைப் பொறியியல் கல்லூரி வல்லுநர்கள் மற்றும் புதுவைப் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிவித்தனர். இதனையொட்டி அக்கட்டடத்தில் இயங்கி வந்த 500 மாணவிகளுக்கு மேல் பயின்ற சுப்பிரமணிய பாரதியார் மேனிலைப் பள்ளியை அப்போதிருந்த கல்வித்துறை இயக்குநர் குருசுகுப்பம் என்.கே.சி மேனிலைப் பள்ளி வளாகத்திற்கு மாற்ற கடந்த 07.09.2022ல் அனுமதி அளித்தார்.

கடந்த 14.09.2022 அன்று அங்கு வந்த இணை இயக்குநர் அப்பள்ளி ஆசிரியர்கள் சிலரை வாய்மொழி உத்தரவாக வேறு பள்ளிகளுக்கு மாற்றியதால் சுமார் 120 மாணவிகள் மட்டுமே பயின்று வந்த என்.கே.சி மேனிலைப் பள்ளியில் தேவைக்கு மேல் இருந்த ஆசிரியர்களில் சிலர் தூண்டியதன் காரணமாக அப்பள்ளியின் மாணவிகள் 15.09.2022 அன்று போராட்டம் நடத்தினர். அப்போது அப்பள்ளி மாணவிகள் மாற்றல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் திரும்பவும் தங்கள் பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், சுப்பிரமணிய பாரதியார் மேநிலைப் பள்ளி தங்கள் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்படக் கூடாது எனவும் கோரினர். மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இணை இயக்குநர் பள்ளிக்கு வந்து பிரச்சைக்கு உரிய தீர்வு காணவில்லை.

பிறகு 19.09.2022 அன்று மாணவிகள் பிரச்சினை வலுத்த போது இணை இயக்குநரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சேர்ந்து சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்களைப் பழைய இடத்திற்கே அழைத்துச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டதின் பேரில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அம்மாணவிகள் வெயிலில் நடந்து செல்ல நேரிட்டது. இந்நிலையில் அவர்களைக் கட்டுக் கோப்பாக பத்திரமாக அழைத்துச் சென்ற சுப்பிரமணிய பாரதியார் பள்ளி அப்போதைய துணை முதல்வர் இணை இயக்குநரால் பழிவாங்கப்பட்டார். ஆனால் என்.கே.சி. மேனிலைப் பள்ளி மாணவிகளைப் போராட்டம் செய்ய தூண்டிய ஆசிரியர், அதாவது 08.09.2022 அன்று இணை இயக்குநரால் என்.கே.சி மேனிலைப் பள்ளிக்கு நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்டவர் சில நாட்களிலேயே பதவி உயர்வு தரப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

இவ்வாறு பழைய சட்டக் கல்லூரி கட்டடத்திற்கே திரும்பிய சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளுக்கு வீரமாமுனிவர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இடம் அளிக்கப்பட்டு நடப்புக் கல்வியாண்டில் அப்பள்ளிக் கட்டடத்திலாவது, திரு.வி.க. உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்திலாவது படிக்க வைக்க பள்ளிக் கல்வி இயக்குநரகம் எடுத்த முடிவே கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் போராட்டங்களின் பின்னணி ஆகும்.

சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் தற்போதைய துணை முதல்வரே மாணவிகளைக் கம்பன் கலையரங்கம் அருகே போராட்டம் செய்ய வைத்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி அனுப்பும் போது ஒரு துணை முதல்வரே மாணவிகளைப் பள்ளியை விட்டு தூரமாக இருக்கும், போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் போராட்டம் நடத்த வைத்திருப்பதும் அதை பள்ளிக் கல்வி இயக்குநரகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும் வேதனையாக உள்ளது.

பள்ளி மாணவிகளை வீதியில் இறங்கிப் போராடும் அளவிற்குப் பணியில் கவனம் செலுத்தாமலும், பள்ளியை ஒழுங்காக நிர்வகிப்பதில் அலட்சியமாகவும், போராட்டத்தைத் துணை முதல்வரே தூண்டியும் உள்ளார். சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் தற்போதைய துணை முதல்வர் மீது இணை இயக்குநர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது பரிசளிப்பாரா என்று தெரியவில்லை.

என்.கே.சி. மேநிலைப் பள்ளியில் தொடங்கி இன்று வரை தொடரும் மாணவர்கள் போராட்டங்கள் அனைத்திற்கும் முழுக் காரணமான பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநரைப் பதவி நீக்கம் செய்ய கோரி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*