மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.08.2024) விடுத்துள்ள அறிக்கை:
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டிற்கு எதிராகச் செயல்பட்ட அரசு சார்புச் செயலர்கள் கண்ணன், ஜெயசங்கர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18%, மிக மிக பிற்படுத்தப்பட்டோர் (மீனவர்) 2%, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் 2%, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 0.5% என இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
2015ஆம் ஆண்டு அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பதவிகளான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என மொத்தம் 529 பதவிகள் நிரப்ப கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிட்டது.
அப்போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலராக இருந்த கண்ணன் 529 ஆசிரியர் பதவிகளுக்கு மேற்சொன்ன வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என அறிவிப்பாணை வெளியிட்டார்.
2022ஆம் ஆண்டு துறைமுகத் துறையில் இளநிலைப் பொறியாளர், காவல்துறையில் உதவி ஆய்வாளர், போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளர், பொருளாதார மற்றும் புள்ளியல் துறையில் புள்ளியல் அதிகாரி, தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் தொழில்நுட்ப அதிகாரி, போக்குவரத்துத் துறையில் உதவி வாகன ஆய்வாளர், வேளாண் துறையில் வேளாண் அதிகாரி, வேளாண் நீரியல் அதிகாரி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் திட்ட அதிகாரி ஆகிய 9 அரசுத் துறைகளில் மொத்தம் 183 அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது.
தற்போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலராக இருக்கும் ஜெயசங்கர் 183 பதவிகளுக்கு மேற்சொன்ன வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என அறிவிப்பாணை வெளியிட்டார்.
இந்த இரு அதிகாரிகளும் 70 சதவீத மக்களின் சட்ட உரிமையான இடஒதுக்கீட்டைப் பறித்துச் சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைத்துள்ளனர். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தற்போது விஜிலன்ஸ் துறையில் சார்புச் செயலராக இருக்கும் கண்ணன் ஊழல், முறைகேட்டில் ஈடுபடும் தனக்கு வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகிறார். இது சட்டப்படியான கடமையில் இருந்து தெரிந்தே தவறுவதாகும்.
இரு அதிகாரிகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே துறையில் சார்புச் செயலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மட்டும் விதிகளை மீறி இச்சலுகை அளிக்கப்படுவது ஏன்?
எனவே, அரசு சார்புச் செயலர்கள் கண்ணன், ஜெயசங்கர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். இரு அதிகாரிகளையும் உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
Leave a Reply