பழ.நெடுமாறன் மீது போலிசார் அத்துமீறல் – கண்டனம்

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிப்பதன் மூலம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இலங்கை அரசு கொழும்பு தலைநகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையை மூடியதின் விளைவாக அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர். இதையொட்டி, தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசும் அனுமதி பெற்றுதர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 12-09-2007 அன்று, சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முயற்சித்த போது, தமிழகப் போலிசார் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை நாகப்பட்டினம் கடற்கரையில் கைது செய்தனர். இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்கும் வரை பழ.நெடுமாறன் சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு நேற்றைய தினம் (13-09-2007) உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் கையைப் பிடித்து இழுத்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழக முதல்வரால் “நேருவின் மகளே” என்று வர்ணிக்கப்பட்ட இந்திரா காந்தியால் “என் மகன் நெடுமாறன்” என்று அழைக்கப்பட்டவர். பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற சீடராவார். கன்னட நடிகர் இராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது, கடும் நெருக்கடியில் அப்போதைய தி.மு.க. அரசு திணறிய போது, தன் உடல்நிலையைப் பற்றிக்கூட கவலைப்படாமல் காட்டிற்குச் சென்று நடிகர் இராஜ்குமாரை மீட்டவர். தமிழ், தமிழர் நலனுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்.

இதுபோன்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பழ.நெடுமாறன் அவர்களிடம் தமிழகப் போலிசார் அத்துமீறி நடந்ததை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வேடிக்கைப் பார்ப்பது அழகல்ல. உடனடியாக இந்த அத்துமீறலில் ஈடுபட்ட போலிசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமேனக் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க இந்திய, தமிழக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்கள் துயர் துடைக்க தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 14-09-2007 அன்று வெளியிட்ட அறிக்கை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*