ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு நின்றிருந்த அவரை ஆத்தூரைச் சேர்ந்த விபச்சாரம் நடத்தி வரும் கவிதா, ஆனந்தன் என்பவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பிறகு அவர்கள் ரீட்டா மேரியிடம், உன்னை பாதுகாப்பான மகளிர் விடுதியில் சேர்த்து விடுகிறோம் என்று கூறினார்கள். இதை உண்மை என்று நம்பி அவர்களுடன் ரீட்டா மேரி புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் இருந்து பேருந்தில் ரீட்டா மேரியை அவர்கள் திண்டிவனத்துக்கு கடத்திச் சென்றனர்.

திண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி என்ற இரண்டு பெண்கள் விபசார விடுதி நடத்தி வந்தனர். அவர்களிடம் ரீட்டா மேரியை 12 ஆயிரம் ரூபாய்க்கு கவிதாவும் ஆனந்தனும் விற்று விட்டனர். சாந்தி, ஈஸ்வரிக்கு துணையாக ஆனந்தராஜ் என்பவர் இருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.

அங்கு ரீட்டா மேரியை சந்தித்த செஞ்சியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டது. அவர்கள் ரீட்டா மேரியை விபசார கும்பலிடம் இருந்து பிரித்து தப்ப வைத்தனர். இதை அறிந்ததும் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்திக்கும் ஈஸ்வரிக்கும் கடும் கோபம் ஏற்பட்டது. திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்தி, ஈஸ்வரி இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல ரீட்டா மேரி மீது சட்ட விரோதமாக லாட்ஜில் தங்கி இருந்து விபசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரீட்டா மேரியை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். பிறகு செஞ்சியில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சிறைக் காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பலர் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்ததால், ரீட்டா மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்ட பெண் நீதிபதி சந்தேகப்பட்டு, ரீட்டா மேரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனையில் ரீட்டா மேரி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரீட்டா மேரியை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீதும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செஞ்சி கிளை சிறைக் காவலர்கள் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர், முருகேசன் ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரீட்டா மேரியை விபசாரத்தில் தள்ளிய கவிதா, ஈஸ்வரி, சாந்தி, ஆனந்தன், ஆனந்தராஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரீட்டா மேரியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இச்சம்பவம் பற்றி அப்போது ஐ.ஜி.யாக இருந்த திலகவதி விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய  இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்பேரில் ஐ.ஜி. திலகவதி விசாரணை மேற்கொண்டு, ரீட்டா மேரி மீது பாலியல் கொடுமை நடந்ததை உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் ரீட்டா மேரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

2006-ம் ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி தயாளன் ரீட்டா மேரி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சிறை காவலர்கள் 6 பேரில் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற இரு சிறைக் காவலர்களான சேகர், முருகேசன் விடுவிக்கப்பட்டனர்.

விபச்சார கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரில் சாந்தி, ஈஸ்வரி இருவரும் ரீட்டா மேரியை கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கியது உறுதிப் படுத்தப்பட்டது. அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்களுக்கு துணைப் புரிந்த ஆனந்தராஜ், ஆனந்தன், கவிதா மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட போது அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகளை கழித்திருந்தனர். இதனால் அவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவில் நாங்கள் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். எனவே எங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரவணன் ‘ரீட்டா மேரியை 4 சிறைக் காவலர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரீட்டா மேரி அடைக்கப்பட்டிருந்த பக்கத்து அறை கைதி சாட்சியாக உள்ளார். ரீட்டா மேரியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றி அவர் தெளிவாக கூறி உள்ளார். எனவே, நான்கு சிறைக் காவலர்களுக்கும் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனை சரியானது தான். அதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கில் நீதிபதி சுதந்திரம் இன்று (29.10.2010) தீர்ப்பளித்தார். அப்போது 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களில் லாசர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைக் காவலர்கள் ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு ரீட்டா மேரிக்கு நீதிக் கிடைக்கப் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*