கூடங்குளம் போராட்டத்தை திசைத்திருப்பியும், தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

Makkal Urimai Koottamaippu Meeting / மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கூட்டம்மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா.அழகிரி (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கோ.செ.சந்திரன் (தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), கோ.அ.ஜெகன்நாதன் (முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம்), எம்.ஏ.அஷ்ரப் (மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), முகமது சலீம் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), இர.அபிமன்னன் (தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), முனைவர் க. தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம்), பெ.பராங்குசம் (தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்), விக்டர் ஜோசப் ராஜ் (தேசிய இணைச்செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை), அபுபக்கர் (மாவட்ட தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்), கோ.லோகலட்சகன், (தலைவர், மனித நேயம் அமைப்பு), சூ.சின்னப்பா (தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம்), கோ.பிரகாசு (தலைவர், தமிழர் களம்), பா.சரவணன் (செயலாளர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்), மு.நாராயணசாமி (தலைவர், பெற்றொர், ஆசிரியர், மாணவர் நலச் சங்கம்), தே.சத்தியமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர், புதுவை தமிழர் குரல்), கி.கோ.மதிவதணன் (பொறுப்பாளர், முகவரி அமைப்பு) உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுச்சியோடு நடந்து வரும் மக்கள் போராட்டத்தைப் பொய்யான தகவல்களைக் கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களைக் கொச்சைப்படுத்தியும் தொடர்ந்துப் பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து வரும் 22.11.2011 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

2. மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் உடனடியாக மூட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3.அணு உலைகள் ஆபத்து நிறைந்தவை என கற்று தேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ள நிலையிலும், அமெரிக்காவில் மூன்று மைல் தீவு, ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா போன்ற அணு உலை விபத்துகளில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதும், லட்சக்கணக்கானவர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதும் கண்முன் உதாரணங்களாக இருக்கும் போது உலைகள் பாதுகாப்பானவை என தொடர்ந்து மத்திய அரசு பிரச்சாரம் செய்து வருவது கண்டனத்திற்குரியது.

4. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து உறுதியோடு போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் இக்கூட்டம் ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*