ஏனாம் கலவரம்: தென்னிந்திய உண்மை அறியும் குழு விசாரிக்க முடிவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 31.01.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஏனாமில் நடந்த கலவரம் குறித்து தென்னிந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அங்கு நேரில் சென்று விசாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 27ந்தேதியன்று ஊதிய உயர்வு கேட்டு தனியார் நிறுவன தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸ் காவலில் தொழிற்சங்கத் தலைவர் முரளி மோகன் என்பவர் இறந்துள்ளார். இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதனையொட்டி அங்கு பெரும் வன்முறை வெடித்துக் கலவரம் மூண்டது. இதில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சந்திரசேகரன் கொலை செய்யப்பட்டார். இதுவரையில் ஏனாமில் அமைதி திரும்பவில்லை.

இதனிடையே, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் இந்த கலவரம் குறித்து நீதி விசாரணை கோரியுள்ளன. ஆனால், இதுகுறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரி அரசு குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக போலீசாரின் அத்துமீறல்களை மூடிமறைக்க முயற்சிக்கிறது. முதல்வர் ரங்கசாமி இதுவரையில் ஏனாம் கலவரம் குறித்து விளக்கம் அளிக்காதது கண்டனத்திற்குரியது.

இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பிப்ரவரி முதல் வாரத்தில் ஏனாம் சென்று அங்குள்ள உண்மை நிலையைக் கண்டறிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*