கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – ஓரிசா – கந்தமால்: உண்மை அறியும் குழு அறிக்கை.

பெரகாம்பூர், செப்டம்பர் 2, 2008.

கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக பரவலாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கலவரம் ஆகியவற்றின் பின்னணி மற்றும் உண்மைத் தகவல்கள் ஆகியவற்றை நேரில் கண்டு உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு, ஆந்திர மாநிலம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளிகள் கொண்ட ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இது வன்முறையால் பாதிக்கப்பட்ட கந்தமால் மாவட்டத்தின் பகுதிகளைக் கடந்த 2 நாட்களாக சுற்றிப் பார்த்தது.

இக்குழுவில் டாக்டர். ஸ்ரீராமுலு,  கே. பாலகோபால்,  வி.எஸ். கிருஷ்ணா, வி.வசந்த லட்சுமி, கே.முரளி,  ரத்னம்,  ஷேக் காதர் பாபா (மனித உரிமைகள் அமைப்பு – HRF,  ஆந்திரம்),  வி.சிட்டிபாபு, வி.வி.பாலகிருஷ்ணா, ஜி.ரகுராம், என்.சிரீமன் நாராயணா, பா.வெங்கடராவ் (ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைகள் குழு – APCLC),  பேரா. அ.மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் PUHR, தமிழ்நாடு), கே. கேசவன் (சிவில் உரிமைகள் பாதுகாப்பு மையம் – CPCL,  தமிழ்நாடு),  பேராசிரியர் என்.பாபையா (மக்கள் ஜனநாயக அமைப்பு – PDF, கர்நாடகம்), தேபரஞ்சன் சாரங்கி (சமூக ஆர்வலர், ஒரிசா) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இக்குழு தாரங்கபாடி மற்றும் ஜி. உதயகிரியிலுள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டது. மேலும் பலிகுடா, பிராமணிகேயோன், மிதியாகியா, பத்குகியா, தமிகியா, ஜூகபாதர் (நுவாகம்), முகேபாடி, ராய்கியா, கட்டிங்கியா, ஜி. உதயகிரி ஆகிய பகுதியிலுள்ள மக்களையும் சந்தித்துப் பேசியது.

நாங்கள் கண்டவற்றைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன், முகாம்களில் வசிக்கும் மக்களை யாரும் சந்திக்கவிடாமல் செய்கிற நிர்வாகத்தின் கண்ணோட்டத்தை வன்மையாக கண்டிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தாரங்கபாடியிலும், ஜி. உதயகிரியிலுமிருந்த முகாம்களில் நாங்கள் சிறிது நேரத்தை மட்டுமே செலவழிக்க நேரிட்டது. ஜி. உதயகிரி முகாமிலுள்ள நிலைமை, அதிகாரிகள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பறைசாற்றியது. தொடர்ந்த மழையினால் குழம்பிக் கிடந்த வெற்றுத்தரையின் மீது கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் தேங்கியிருந்த மண் தரையில் மக்கள் அமர்ந்திருந்தனர். சமையல் நடந்துக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் உள்ளிட்ட மிருகங்கள் அலைந்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். எந்த நேரமும் அங்கே தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தென்மண்டல அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் திரு. சத்யப்பிரதா சாகுவிடம் இதுகுறித்து நாங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது யாரும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு பதிலை அவர் சொன்னார். ‘பக்கா’ பொதுக்கட்டிடங்களில் முகாம்கள் அமைப்பதை ‘மற்ற’ சமூகத்தினர் எதிர்க்கின்றனர் என்பதே அந்த பதில். இப்படி எதிர்க்கின்ற மற்ற சமூகத்தினரே இன்று கிறிஸ்தவர்கள் தம் சொந்த மண்ணிலேயே அகதிகளாவதற்குக் காரணமாயிருப்பதால் இந்த எதிர்ப்பு பொருட்படுத்த வேண்டிய ஒன்றல்ல. வன்முறையை நிர்வாகம் எவ்வாறு கையாண்டுள்ளது என்பதற்கு இது ஒரு குறியீடு எனலாம்.

லக்ஷ்மணானந்த சரஸ்வதி கொல்லப்பட்ட நாள் தொடங்கியே கந்தமால் மாவட்டம் முழுவதும் தடைச் சட்டம் அமலில் இருந்து வந்துள்ளது. கலவரங்கள், கொலைகள் எல்லாமே இந்தத் தடைச் சட்டம் இருந்தபோதே நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு தம்மை தற்காத்துக் கொள்வதைத் தடுப்பதற்கு மட்டுமே இந்த தடைச்சட்டம் பயன்பட்டதாக தோன்றுகிறது. பலிகுடாவிலிருந்து ஜி.உதயகிரிக்கு செல்லும் வழியெல்லாமும், பிற இடங்களிலும் நாங்கள் கண்ட எரிந்த இல்லங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஆகியன வன்முறையின் சுவடைத் தாங்கி நின்றன.

அரை இராணுவப் படைகளைக் கொண்டு குவித்த பின்னும், மாநில் அரசு உச்சநீதிமன்றத்திற்கு உறுதி அளித்த பின்னும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்ததை எல்லோரையும் போலவே நிர்வாகமும் அறியும். மிகச் சமீபத்தில், செப்டம்பர் 18 அன்றுகூட ராய்கியா வட்டத்திலுள்ள கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. ராய்கியாவைச் சேர்ந்த மக்களிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே சுகுடபாடி, பதுண்பாடி, குந்தாமி, காமண்டி மற்றும் சிசபங்கா கிராமங்களில் பஜ்ரங்தள அமைப்பினர் அம்மக்களை தாக்கப்போகிற செய்திகள் அவர்களுக்கு வந்துக் கொண்டிருந்தன. இன்று பெரிய அளவில் தாக்குதல் நடக்கப் போகிறது என்கிற செய்திகள் எங்களுக்கு வேறு இடங்களிலிருந்தும் கிடைத்தன. நாளை நடக்கவிருக்கும், கொல்லப்பட்ட விசுவ இந்து பரிசத் தலைவரின் கலச யாத்திரைக்கான ஒரு முன்தயாரிப்பாக ஒருவேளை இது அமையக்கூடும். தென்மண்டல துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் கவனத்தை நாங்கள் இதுகுறித்து ஈர்த்தபோது தேவையான பாதுகாப்புகள் பூரணமாக வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். எனினும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களில் இருந்து கிடைக்கும் உண்மைகள் அந்த வாக்குறுதியின்மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

நாங்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோதெல்லாம் அவர்கள் எதிர்வினை ஏமாற்றம் அளிக்கக்கூடியதாகவே இருந்தது எனப் பாதிக்கப்பட்ட பலரும் எங்களிடம் கூறினர். தாக்கியவர்கள் யாரெனக் குறிப்பாகப் பெயரிட்டுப் புகார் கொடுத்தபோதும் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாகவே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனடித் தாக்குதல் குறித்த தகவல்களைத் தெரிவித்தபோதும், நிலையத் தலைமை அதிகாரி அதற்குரிய அவசரத்துடன் அதை எதிர்கொள்வதில்லை. இவற்றைப் பாதிக்கப்பட்ட மக்களின் பொய்க் குற்றச்சாட்டுகள் எனப் புறந்தள்ளிவிட இயலாது. ஏனெனில் இதே மக்கள்தான் தமது உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாப்பதில் துரித நடவடிக்கைப் படை (RAF) ஆற்றிய பங்கைப் பாராட்டவும் செய்தனர். ராய்கியா வட்டத்திலுள்ள கிரிடபாடாவில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தது.

கிராமங்களைக் கொள்ளையடிக்கும்போதும் எரியூட்டும்போதும் தாக்கியவர்கள் முழங்கிய ஒரே மாதிரியான முழக்கங்களிலிருந்து அவர்கள் பஜ்ரங்தள மற்றும் விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிகிறது. காவல்துறையினர் ஒருசிலரைக் கைது செய்திருந்த போதிலும் இவ்வமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர். அதுமட்டுமின்றி அவர்களில் சிலர் நிர்வாகம் அமைத்துள்ள ‘அமைதிக் குழுக்களிலும்’ பங்கு பெற்றுள்ளனர். கிறிஸ்துவ மதத்தைக் கைவிட்டுவிட்டு இந்து மதத்திற்கு மாறுவேன் என்று உறுதியளிக்காதவரை இடம்பெயர்ந்துள்ள மக்கள் கிராமங்களுக்கு திரும்பிவர இயலாது என அதே அமைப்புகள் இப்போது மிரட்டி வருகின்றன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் குறித்த அடிப்படை உரிமைகளை வெளிப்படையாக மீறுகிற செயல் இது. இத்தகைய அப்பட்டமான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதை நிர்வாகம் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டுள்ளது.

கிறிஸ்துவ மிஷனரிகள் இப்பகுதியில் கட்டாய மதமாற்றம் செய்வதாக விசுவ இந்து பிரிஷத் (வி.இ.ப) குற்றம்சாட்டுகிறது. மாறாக வி.இ.ப.தான் கட்டாய மதமாற்றம் செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். விரைவில் வெளிவர உள்ள விரிவான எங்கள் அறிக்கையில் இதுகுறித்து விளக்குவோம். இப்போதைக்கு நாங்கள் சொல்லவிரும்புவது என்னவெனில் எந்தக் கட்டாய மதமாற்றமும் சட்டத்தின் பார்வையில் குற்றச் செயலாகும். தகுந்த புகாரளித்து இதை எதிர்கொள்ள வேண்டும். கட்டாய மதமாற்றம் என்கிற பெயரில் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த பெருந்திரள் மக்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. மாறாக, கடந்த ஒருமாத காலமாக கிறிஸ்துவ சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் எடுப்பார் கைப்பிள்ளையாக உள்ள சில பழங்குடியினரைப் பயன்படுத்தி கிறிஸ்துவ மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதலே என நாங்கள் கருதுகிறோம்.

துப்பாக்கி, பெட்ரோல் மற்றும்பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளமை, லக்ஷ்மணானந்தாவின் சவ ஊர்வலத்திற்காக ஜாலேஸ்பேடாவிலிருந்து சக்கபாடா வரையிலான ஒரு நீண்ட பாதையை, அதுவும் கிறிஸ்துவ மக்கள் வசிக்கும் பகுதிகளாகத் தேர்வுசெய்தமை, பெருமரங்களை வெட்டிவீழ்த்திப் போக்குவரத்தைத் தடுத்தமை ஆகியன முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கு சான்றுகளாக அமைகின்றன. லக்ஷ்மணானந்தாவின் கொலை அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. வி.இ.ப தலைவரின் கொலையை நாங்கள் ஆதரிக்காதபோதும் அவரது ஆதரவாளர்களுக்கு இத்தகைய பெருந்திரள் பழிவாங்கு வன்முறையில் இறங்குவதற்கு உரிமையில்லை. நிர்வாகம் வெறும் பார்வையாளராகவும் இருக்க இயலாது.

அரசின்முன் கீழ்கண்ட கோரிக்கைகளை வைக்கிறோம்:

1. அகதி முகாம்களிள் உள்ளோரைச் சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

2. முகாம்கள் ‘பக்கா’ கட்டிடங்களில் அமைக்கப்பட வேண்டும். சுத்தமான சூழல், மழை வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றுடன் அவை இருக்க வேண்டும்.

3. விரைவில் தங்கள் கிராமங்களுக்கு திரும்புமாறு முகாம்களில் உள்ளவர்கள் மீது வற்புறுத்தலும் அழுத்தமும் அளிக்கப்படுவது போன்ற தோற்றமுள்ளது. கிராமங்களிலுள்ள சூழல்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் முகாம்களில் உள்ளோர் குறித்த அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை 27,000த்திலிருந்து 13,000ஆக குறைந்துவிடும். கிராமங்களில் இம்மக்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய நிலை ஏற்படும்வரை முகாம்கள் தொடரவேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

4. பல தனித்தனியான முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும் தாக்குதல்கள் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் முதலான அமைப்புகளின் சதியின் விளைவே என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இவ்வமைப்புகளின் தலைவர்கள் மீது கிரிமினல் சதிக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

5. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் உடனடியான, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கிறிஸ்துவ மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*