ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.12.2012) விடுத்துள்ள அறிக்கை:

காரைக்காலில் ஒருதலைக் காதலால் ஆசிட் வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் இளம் பெண்ணின் மருத்துவ செலவை ஏற்பதுடன், உரிய இழப்பீடு வழங்க புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

காரைக்காலில் உள்ள என்ஜினீயர்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்த வினோதினி (வயது 23). பி.டெக். முடித்து விட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவரை ஒருதலையாக காதலித்த சுரேஷ் என்ற வாலிபர், வினோதினி காதலை ஏற்க மறுத்தவுடன் அவர் மீது வெறுப்புக் கொண்டுள்ளார். சென்ற நவம்பர் 14 அன்று, வினோதினி சென்னை செல்ல காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு தன் தந்தை மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் வந்த போது மேற்சொன்ன சுரேஷ் அவர் மீது ஆசிட் வீசித் தாக்கியுள்ளார்.

இதனால், படுகாயமடைந்த வினோதினி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது இரண்டு கண்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோயுள்ளது. உடல் முழுவதும் காயமடைந்து சுய நினைவு இழந்து உயிருக்குப் போராடி வருகிறார். அவரது தந்தையாரும், அவரது நண்பரும் இதில் காயம்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

வினோதினியின் தந்தையார் ஜெயபாலன் தனியார் பள்ளி ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். மிகவும் வறுமை நிலையிலுள்ள அக்குடும்பத்தினர் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். தங்கள் மகள் உயிர் பிழைக்க மருத்துவ செலவுக்கு நிதிக் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் புழங்கக்கூடிய பேருந்து நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைக்கூட தடுக்க முடியாமல் போலீசார் இருந்துள்ளனர் என்பது இச்சம்பவத்திற்கு அரசு முழுப் பொறுப்பு என்பதைக் காட்டுகிறது.

எனவே, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நவீன வசதிகள் நிறைந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

1 Comment

  1. Please Punish the Guy Similar Style by Blowing Acid on his Face and Boby. He has to Feel typical Pain. Please Vote and write to President of India.

Leave a Reply

Your email address will not be published.


*