மதுரையிலுள்ள கிருஷ்ணய்யர் அரங்கில் இன்று (05.12.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை:
சென்ற அக்டோபர் 27 அன்று மானாமதுரைக்கு அருகில் உள்ள வேம்பத்தூரில் மருதுபாண்டியர் குரு பூஜைக்குச் சென்று வந்த கும்பல் ஒன்றுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட உரசலின்போது குடிபோதையில் இருந்த இளைஞர்கள் தாக்கி சம்பவ இடத்திலேயே திருப்பாச்சேத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொல்லப்பட்ட செய்தி எல்லோரையும் கவலையில் ஆழ்த்திய ஒன்று. சாதித் தலைவர்களின் குருபூஜை என்கிற பெயரில் உருவாக்கப்படும் சாதி உணர்வுடன் கூடிய கும்பல் மனநிலை மற்றும் வன்முறை உளநிலைக்கு ஒரு இளம் காவல்துறை அதிகாரி பலியாக நேர்ந்ததை நாமெல்லோரும் கண்டித்தோம். வேம்பத்தூர் மற்றும் அருகிலுள்ள புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முக்குலத்து (அகம்படியர்) இளைஞர்கள் இக் கொலையில் முக்கிய பங்கு பெற்றிருந்தனர். அவர்களில் பலர் இருபதுகளிலும் அதனினும் குறைந்த வயதுகளிலும் இருந்தவர்கள் என்பது இன்னும் நமக்குக் கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது.
காவல்துறையினர் விரைந்து களம் இறங்கினர். அன்று மாலையே பலர் கைது செய்யப்பட்டனர். நடவடிக்கைக்கு அஞ்சி இக் கிராமங்களிலிருந்த இளைஞர்கள் பலரும் ஓடி ஒளியத் தொடங்கினர். டி.ஜி.பி இராமானுஜம் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் அப்பகுதிக்கு வந்து போயினர். புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் முக்கிய பங்காற்றியதால் காவல்துறையின் கவனம் அதன்மீது திரும்பியது. அவர்கள் அக்கிராமத்தில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தனது துறையைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படுவதை இம்மியும் சகித்துக்கொள்ளாத காவல்துறை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பழிவாங்கும் நோக்குடன் என்னென்ன விதமான அணுகல்முறைகளைக் கையாளுமோ அத்தனையும் இங்கும் செயல்படுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கடும் சித்திரவதைக்குள்ளாயினர். கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இருமுறை இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒருமுறை பொதுவான தாக்குதலும், அடுத்தமுறை குறிப்பான வீடுகள் இலக்காக்கித் தாக்கப்படுதலும் நடந்தது.
இன்னொருபக்கம் காவல்துறை அதிகாரிகள் புதுக்குளத்தைச் சேர்ந்த மூத்தவர்களிடம் நைச்சியமாகப் பேசி இளைஞர்களைச் சரணடையச் செய்தனர். அடக்குமுறைக்கு அஞ்சிய ஊர்ப் பெரியவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் போக, மேலும் எட்டுப்பேரை அவர்களாகவே கொண்டு வந்து ஒப்படைத்தனர். ஆல்வின் சுதனின் கொலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது முறையான வழக்குத் தொடர்வதில் அவர்கள் எல்லாவகையிலும் ஒத்துழைத்துக் கொண்டிருந்த சூழலில், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த இருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வந்தது, சென்ற நவம்பர் 30 அன்று, சிறையிலிருந்த புதுக்குளத்தைச் சேர்ந்த பிரபு (27), பாரதி (20) என்கிற இரு இளைஞர்கள் தமிழ்நாட்டின் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையால் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிக அளவில் கொல்லப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. அதிலும் நீதிமன்றக் காவலில் உள்ளவர்கள் கொல்லப்படுவது என்பது கவலைகுரிய ஒன்றாக உள்ளது. எனவே இந்த என்கவுன்டர் கொலைகள் குறித்த உண்மைகளை அறிய,
பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
பேரா. சே. கோச்சடை. மக்கள் கல்வி இயக்கம் (PEM), காரைக்குடி,
வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்(PUHR), மதுரை,
வழக்குரைஞர் ஏ.எஸ். அப்துல் காதர், மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO), மதுரை.
ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முழுவதும் சம்பவத்துடன் தொடர்புடைய மானாமதுரை, புதுக்குளம், வேம்பத்தூர், என்கவுன்டர் நடந்ததாகச் சொல்லப்படுகிற கால்பிரவு முதலான பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பலரையும் விசாரித்தது. குறிப்பாகக் கொல்லப்பட்ட பிரபு, பாரதி குடும்பத்தினர், புதுக்குளம் கிராம முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பாண்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூடுதல் அரசு வழக்குரைஞர் முத்து முனியாண்டி மற்றும் கிராம மக்களைச் சந்தித்தது. என்கவுன்டர் செய்த டி.எஸ்.பி வெள்ளத்துரையின் மானாமதுரை அலுவலகத்திற்குச் சென்றபோது அவர் அங்கில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டு நாங்கள் அவரைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னபோது, காரணத்தை கேட்டறிந்த அவர் எங்களைச் சந்திக்க இயலாது எனவும், மேற்கொண்டு ஏதும் பேச இயலாது எனவும் மறுத்தார். எனினும் சிவகங்கை காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்திவேலு அவர்களை நாங்கள் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் விரிவாகப் பேசினார்.
எங்களுக்குக் கிடைத்த தகவல்களும் அந்த அடிப்படையிலான அய்யங்களும்:
காவல்துறைக்கும் மக்களுக்கும் முரண்பாடுகள் வரும்போது அவற்றை ஒரு மிகப்பெரிய சவாலாகக் கருதிப் பழிவாங்குவது வழக்கமாக உள்ளது. ஒரு அரசு ஊழியரைத் தாக்குவது, கொல்வது என்பதற்கு அப்பால் ஒருவகையான மத்தியகால மனநிலையுடன் எங்களின் அதிகாரத்திற்கு ஒரு சவாலா என்கிற மமதையுடன் நடவடிக்கை மேற்கொள்வதைக் காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகக் காவல்துறையால் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தப்படுபவரும், என்கவுன்டர் கொலைகளுக்காகவே பதவி உயர்வு கொடுத்து ஊட்டி வளர்க்கப்பட்டு வருபவரும், இதுவரை 12 என்கவுன்டர் கொலைகளைச் செய்தவருமான வெள்ளத்துரையை இரு வாரங்களுக்கு முன் மானாமதுரையில் உதவிக் கண்காணிப்பாளராக நியமித்தபோதே இப்படி நடக்கும் என்பது எல்லோரும் ஊகித்ததுதான். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அடுத்து என்கவுன்டரில் யார் கொல்லப்படுவார்கள் என முன்கூட்டியே சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரில் புகுந்து கடுமையாகத் தாக்கியதில் சுமார் எட்டு வீடுகள் பெரிய அளவில் சேதமடைந்திருந்ததை எங்கள் குழு கண்டது. கொல்லப்பட்ட பிரபு, பாரதி ஆகியோரின் வீடுகள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பாத்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் முதலியனவும் உடைக்கப்பட்டிருந்தன, பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தைக் காவல்துறையினர் கொள்ளையடித்துச் சென்றதாகவும், டி.ஜி.பி இராமானுஜம் அப்பகுதிக்கு வந்து சென்ற பின்பே இத்தகைய தாக்குதல் தொடரப்பட்டதாகவும் மக்கள் கூறினர். பெரிய அளவில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். சுட்டுக் கொல்லப்பட்ட பாரதியின் வீட்டில் போலீசார் செய்த அட்டூழியத்தின் விளைவாக அவரது பாட்டி ஒருவரும் சில நாட்கள் முன் இறந்து போயுள்ளார். போலீசார் தள்ளியதில் மண்டையில் அடிபட்டதாலேயே அவர் இறந்ததாக அவ்வீட்டர் குற்றம்சாட்டுகின்றனர்.
உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதனைக் கொன்ற கும்பல் இரு சுமோக்களில் வந்துள்ளது. அதிகபட்சம் அவர்கள் 20 பேர்கள் இருக்கலாம். ஆனால் தேடுதல் வேட்டையில் சுமார் 37 முதல் 40 பேர்கள் வரைக் கைது செய்யப்பட்டு இன்று கொல்லப்பட்ட இருவர் போக மீதி 24 பேர்கள் சிறைகளில் உள்ளனர். இவர்களில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தோர். இவர்களில் இருவர் தஞ்சையிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ளதாக அறிகிறோம். இன்னும் பலரும்கூட குறைந்த வயதுடையவர்கள்தான் எனவும், வயதைக் கூட்டிச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டு இன்று சிறையில் உள்ள சக்திவேலு மற்றும் மதியரசன் ஆகியோருக்கும் ஆல்வின் சுதன் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள மற்றவர்களின் சாதியச் சேர்ந்தவர்களுமல்ல. விருதாசலத்திலிருந்து கரும்புவெட்ட வந்திருந்தவர்கள் அவர்கள்.
என்கவுன்டரில் கொல்லப்பட்ட இருவரில் பிரபு மீது மட்டுமே முன்னதாக ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது தவிர இருவர் மீதும் பி.சி.ஆர் வழக்கு ஒன்றும் உள்ளது. இவை இரண்டையும் தவிர மற்றபடி பெரிய வழக்குகள் ஏதுமில்லை. என்கவுன்டர் செய்யப்பட்ட அன்று மதியம் இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் அதற்குரிய ஆணை கொடுக்கப்பட்டுக் கட்டாயமாகக் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் என்கவுன்டரில் கொல்வது எனத் தீர்மானித்த பின்பே அவசரமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு சுமோக்களில் வந்தவர்கள்தான் ஆல்வின் சுதனைக் கொன்றனர் என்றபோதும் இவர்களில் யார் தாக்கியதில் அவர் இறந்தார் என்பதை உறுதி செய்ய இயலாத சூழலில், ஏற்கனவே வழக்குகள் உள்ள இந்த இருவரும் தேர்வு செய்யப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இவர்கள் இருவரில் பாரதியை சுதன் கொல்லப்பட்ட அன்றே அவரது வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர். மூன்று நாள் வரை சட்ட விரோதக் காவலில் வைத்துக் கடும் சித்திரவதை செய்த பின்னர் வேறோர் இடத்தில் பிடிபட்டதாகச் சொல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். கொல்லப்பட்ட பிரபுவும் இன்னும் இருவரும் திருப்பூரில் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள். இவர்கள் இருவரும் தப்பித்தோடும் மனநிலையில் இல்லை. தாங்கள் கொல்லப்படப் போவதாக காவலர்கள் மூலம் அறிந்த அவர்கள் தங்களைப் பார்க்க வந்தவர் உறவினர்களிடம் அழுதுள்ளனர். தங்களைக் காவல் நீட்டிப்பிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், வீடியோ கான்ஃபெரென்சிங் மூலமாகக் காவல் நீடிப்பு செய்ய வேண்டுமெனவும் கெஞ்சியுள்ளனர். பிரபுவின் மனைவி ரோஜா (20) சென்ற 29 அன்று தன் கணவரின் உயிருக்குப் பாதுகாப்புக் கோரி முதல்வர், உள்துறைச் செயலர் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். எனினும் காவல்துறையினர் தாம் நினைத்ததைச் சாதித்துள்ளனர்.
என்கவுன்டர் செய்யப்பப்பட்டதைப் பற்றிக் காவல்துறையினர் சொல்கிற கதைப்படி, நவம்பர் 30 அன்று மதுரைச் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு இருவரையும் கொண்டு செல்லும்போது, மதுரை லேக் ஏரியா நடையாளர் கழகத்திற்கருகில் இருவரும் “தப்பி ஓடியுள்ளனர்”. ஏதோ ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று, எங்கெல்லாமோ ஓடி இறுதியில் அன்று இரவு கால்பிரவு கிராமத்தில் அகப்பட்டதாகக் காவல்துறை சொல்வது இம்மியும் நம்பும்படியாக இல்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அப்பகுதியில் யாரும் சொல்லவில்லை. அந்த மோட்டர் சைக்கிள் எப்படி அவர்கள் கையில் கிடைத்தது, அதன் சொந்தக்காரர் யார், அவர் விசாரிக்கப்பட்டாரா என்பது குறித்தும் காவல்துறையிடம் பதிலில்லை. இரண்டு பேர்களையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல ஓட்டுநர் தவிர ஒரு எஸ்.அய், இரு காவலர்கள் என மூன்று எஸ்கார்ட்களே கூடச் சென்றதாக காவல்துறைக் கண்காணிப்பாளர் கூறினார். இப்படிக் கைதிகள் தப்புகையில் உடனடியாக எஸ்கார்ட்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இன்றுவரை அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இருவரும் என்கவுன்டர் செய்யப்பட்ட நேரம் இரவு 8.45 மணி எனக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் மாலை 6 மணி வாக்கிலேயே காட்சி ஊடகங்களில் என்கவுன்டர் செய்தி வந்துவிட்டது, என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திற்கருகில் வீடுகள் இல்லை. அப்படியான ஒரு இடத்தை இரண்டு நாட்கள் முன்னதாகவே வெள்ளத்துரை தேடி இப்பக்கத்தில் அலைந்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு சிலர் கூறினர். அப்பகுதியின் தலையாரி ஓட்டனேந்தல் பாண்டியை எம் குழுவினர் விசாரித்தபோது, தனக்குக் காலையில்தான் செய்தி தெரிவிக்கப்பட்டதாகவும், தான் உடல்களைப் பார்க்கவில்லை எனவும் கூறினார். அந்த இடத்தை நாங்கள் சென்று பார்வையிட்டபோது, தலையாரி காட்டிய இடத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கான எந்தத் தடையமும் இல்லை. தவிரவும் கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் உடனடியாக எரிக்குமாறு காவல்துறையினர் உறவினர்களை வற்புறுத்தியதும் நமக்கு அய்யத்தை ஏற்படுத்துகிறது. எனினும் இந்த வற்புறுத்தலை மீறி இருவர் உடலும் எரிக்காமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட இருவரும் கடும் சித்திரவதைகளால் படுகாயமடைந்திருந்தனர். அவர்கள் ஆள் நடமாட்டமுள்ள பகுதி ஒன்றில் நான்கு காவலர்களைச் சமாளித்து, அங்குள்ள யாருக்குமே தெரியாமல் தப்பினர் என்பதைச் சிறு குழந்தைகள் கூட நம்பமாட்டார்கள்.
எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 9 என்கவுன்டர் கொலைகள் நடந்துள்ளன. இவை அனைத்துமே போலியானவைதான். எல்லோருமே பிடித்துச் சென்று கொல்லப்பட்டவர்கள்தான். அதிலும் இவ்விருவரும் நீதிமன்றக்காவலில், நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்தவர்கள். இப்படி நீதிமன்றத்தை மட்டுமே நம்பி இருந்தவர்களைக் கொல்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது எனலாம். மணல்மேடு சங்கர், தமிழ்த் தேசியப் போராளிகளான ராஜாராம், சரவணன் உள்ளிட்டோர் இப்படி ஏற்கனவே கொல்லப்பட்டவர்கள். தன் மகன் கொல்லப்படப் போவதாக சங்கரின் தாய் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று முறையிட்டபோதும் கூடப் பயனில்லை. தங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி நாயைச் சுடுவதுபோலக் கொல்லப்படுவதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் பொருளென்ன? மனச்சாட்சியுள்ள நீதிபதிகள் இவற்றைச் suo moto வாக எடுத்துக்கொண்டு தலையிட்டிருக்க வேண்டாமா? நீதிமன்றங்கள் என்ன செய்துகொண்டுள்ளன?
தற்போது இ.த.ச 176 பிரிவின்படி நடைபெறும் மாஜிஸ்ட்ரேட் விசாரணையால் எந்தப் பயனுமில்லை. என்கவுன்டர் என்ற பெயரால் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைகளை சி.பி.ஐ விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசின் பிடியிலிருந்து இருவரும் தப்பிச் சென்றது மற்றும் என்கவுன்டரில் இருவரும் கொல்லப்பட்டது ஆகிய இரு வழக்குகளும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
புதுக்குளம் ஊர்ப் பெரியவர்கள் காவல் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மானாமதுரைக்குப் புதிதாக மாற்றலாகி வந்துள்ள வெள்ளத்துரையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஊர்ப் பெரியவர்கள் எழுந்து வணக்கம் சொன்னபோது இதுவரை 12 என்கவுன்டர் கொலைகளைச் செய்துள்ள வெள்ளத்துரை, அவர்களின் கண்களைச் சந்திக்க இயலாமல் குனிந்து அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். தான் செய்யப் போகிற காரியம் அவரை ஏறெடுத்துப் பார்க்கும் திறனை இழக்கச் செய்துள்ளது.
என்கவுன்டர் கொலை நடந்தவுடன் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும், என்கவுண்டர் கொலை செய்த அதிகாரிகள் வழக்கு விசாரணையில் தாங்கள் தற்காப்புக்காகத்தான் கொலை செய்ய நேர்ந்தது என்பதை நிறுவிய பின்னரே வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள நெறிமுறை. என்கவுண்டரில் சம்பத்தப்பட்ட காவலர்களுக்கு வீரப் பரிசுகள் (gallantry awards) வழங்கப்படக் கூடாது எனவும், முறை மீறிய பதவி உயர்வு (out of turn promotions) தரக்கூடாது எனவும் இந்த நெறிமுறைகள் கூறுகின்றன. தமிழக அரசும் இந்நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு சிறைத் துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நெறிமுறை வழங்கியுள்ளது (தலைமைச் செயலரின் கடிதம் ஆகஸ்ட் 8, 2007). ஆனால் தன் ஆணையத் தானே மீறுவதிலும், சட்டங்களைக் காலில் போட்டு மிதிப்பதிலும் முன்னுக்கு நிற்கும் காவல்துறை இவற்றை மதிப்பதே இல்லை. கீழ்நிலையில் இருந்த வெள்ளத்துரை இன்று உதவிக் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளது, அவரது என்கவுன்டர் கொலைச் சாதனைகளுக்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
என்கவுன்டர் கொலைகளை அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளே விசாரிக்கக்கூடாது என்பதும், என்கவுன்டர் செய்யப்பட்டவ்ர்களின் உறவினர்கள் இது தொடர்பாக முன்வைக்கும் அய்யங்கள் விசாரணையில் முக்கிய கவனம் பெறவேண்டும் என்பதும் தேசிய மனித உரிமை ஆணையம் அளித்து, தமிழக அரசு ஏற்றுக்கோண்ட இதர நெறிமுறைகள். இந்த அடிப்படையிலேயே நாங்கள் சி.பி.ஐ விசாரணை கோருகிறோம். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இது அப்பட்டமான கொலை எனச் சொல்வதால், திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்து, மாஜிஸ்ட்ரேட் விசாரணையுடன் அதை முடித்துவிடாமல் உறவினர்களின் குற்றச்சாட்டைக் கணக்கில் எடுத்து விசாரிக்க வேண்டும். இதற்கு ஏதுவாக வெள்ளத்துரை மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையில் இது போலி என்கவுன்டர் எனத் தெரியும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
புதுக்குளம் கிராமத்தில் எட்டு வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டது, சொத்துக்கள் அழிக்கப்பட்டது மற்றும் களவாடப்பட்டது தொடர்பான புகார்களும் இவ் விசாரணையில் விசாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கொல்லப்பட்ட பிரபுவின் மனைவி இருபதே வயது நிரம்பிய சிறு பெண். ஒரு வயதில் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. தனது பொறுப்பிலிருந்தபோது கொல்லப்பட்ட பாரதி, பிரபு இருவருக்கும் நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக இழப்பீடு வழங்க ஆணையிட வேண்டும். உடனடி உறவினர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
இந்த என்கவுன்டர் கொலைகளை ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்த்துள்ளன. எனினும் இதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய ‘தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை’ச் சேர்ந்த காளைலிங்கம், தேவதாஸ் என்கிற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் இரண்டும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
இந்த என்கவுன்டரை வெள்ளத்துரை செய்தபோதும் மொத்தத் தமிழகக் காவல்துறைக்கும் இதில் பொறுப்புண்டு. தமிழகக் காவல்துறை தன் என்கவுன்டர் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டும். இந்தியாவெங்கும் இப்படிப் போலி என்கவுன்டர்களுக்காக ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்படப் பலர் இன்று சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த என்கவுன்டர் கொலைகளை நாங்கள் கண்டிப்பதென்பது எந்த வகையிலும் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதனின் கொலைக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பதன் பொருளில் அல்ல. சுதனின் கொலையை மட்டுமல்ல, அதன் பின்னணியாக உள்ள சாதீயக் கும்பல் வன்முறைக் கலாச்சாரத்தையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சுதனைக் கொன்றவர்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு அதிகபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் சட்டத்தைக் காவல்துறை தன் கையில் எடுத்துக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தாகிவிடும். எவ்வகையிலும் சனநாயக ஆட்சி முறைக்கு இது ஏற்புடையதல்ல.
excellent. but can be explained in detail about the condemnation of killing a S.I his death also a severe human rights violation.
http://www.youtube.com/watch?v=M42WWPWKHRk
A discussion with A.Marx on fact finding report by human rights group on the brutal police killing of accused Prabhu and Bharathi.