சட்டம் ஒழுங்குப் பிரச்சனை குறித்து முதல்வர் ரங்சாமியிடம் சமூக அமைப்புகள் மனு!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மொ.தேவா, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தமிழர் களம் தலைவர் பிரகாசு, முதலியார்பேட்டை வியாபரிகள் சங்கத் தலைவர் திருவேங்கடம் உள்ளிட்டோர் இன்று (13.9.2013) காலையில், முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் சேட்டன் பி சாரங்கி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஐ.ஜி. அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் அவரது செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்:

புதுச்சேரியிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் இம்மனுவை தங்களின் மேலான பார்வைக்கும், உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கிறோம். சென்ற 10.09.2013 அன்று நடந்த கட்சி மற்றும் அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் இக்கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

புதுச்சேரியில் அண்மைக் காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். குறிப்பாக, ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிப்பது, சிறையிலிருந்து ரவுடிகள் கைப்பேசி மூலம் மிரட்டிப் பணம் பறிப்பது எனப் பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடந்து வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தி, ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து நூற்றுக்கணக்கான கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன. கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் மூலம் கைதிகள் யார் யாரிடம் பேசினார்கள் என்ற விவரங்களை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். கைதிகளோடு தொடர்புடைய அனைவரின் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

வீடு, நில அபகரிப்பு, மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டல், சிறையில் இருந்து காவல்துறையை ஆட்டிப் படைக்கும் தாதாக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்த தனி நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும், இப்பிரச்சனைகள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரியில் ரவுடிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் லாபம் அடைந்து, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ள பணியிலுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரிகளின் சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிட வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கும், ரவுடிகளுக்கும் உள்ள தொடர்புக் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரியில் வீடு, நில அபகரிப்பை தடுக்க ஏற்கனவே ஏற்படுத்தி செயல்படாமல் இருந்த ‘வீடு, நிலம் அபகரிப்பு தடுப்புப் பிரிவு’ மீண்டும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இப்பிரிவு பாரபட்சமின்றி செயல்படுவதோடு, இப்பிரிவில் விசாரித்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர மாதந்தோறும் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஆழமாக ஆய்வு செய்து, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரை செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.

எனவே, தாங்கள் மொதுமக்கள் நலன் கருதி இம்மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*