தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…

உண்மை அறியும் குழு அறிக்கை:

தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்

தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை), தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19), கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.

தென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.

1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.

பொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.

இதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ளி அமைந்துள்ள இந்த “பஜார் பள்ளிக்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007) நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.

அனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

கையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி, நாகூர் மீரான்.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை கலவரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். “தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.

அதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நிலையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.

தற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, “இதுவே இறுதி அல்ல, விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

இந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, “இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில்லை.

ஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்?

பயங்கரவாதம்எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது? அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.

முஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா? தென்காசியும் கோவை அக வேண்டுமா? அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

சிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.

இரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.

மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.

தென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.

3 Comments

  1. என்னமோ இஸ்லாமியர் மட்டுமே அங்கு அமைதியை விரும்புவது போலவும் இந்து முன்னணி அதை சீர்க்குலைப்பதை போலவும் ஒருதலைப்பட்சமாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் மிரட்டப்பட்டீர்களா அல்லது கவனிக்கப்பட்டீர்களா? உம்மைப் போன்றோர் அதிகாரிகளாக இருப்பதுதான் கலவரங்களுக்கெல்லாம் முக்கிய காரணம். படுகொலை செய்தவர்களை இன்னமும் காவல்துறை கைதுசெய்யவில்லை. வன்முறையில் இறங்குபவன் எவனாக இருந்தாலும் (இந்துவோ இஸ்லாமியனோ) தண்டிக்கப்படவேண்டும். அதுக்குறித்து நீங்கள் ஒன்றையும் எழுதவில்லை. மாற்றாக இஸ்லாமியர்கள் அப்பாவிகள் அமைதியை விரும்புவர்கள் என்று முழுப் பூசணிக்காயை உங்கள் வாய்க்குள் மறைக்கிறீர்கள் இந்தக் கருத்தை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

  2. நடந்த உண்மைகள் அனைத்தும் இந்த கட்டுரையில் மறைக்கபட்டுள்ளது….தென்காசியில் பல இந்து பெண்களின் வாழ்கையை முஸ்லிம்கள் சீரழித்து உள்ளனர்….முஸ்லிம் பெண்களை குறி வைத்து ஹிந்துக்கள் செயல்படுவதில்லை….ஆனால் ஹிந்து பெண்களை குறி வைத்து முஸ்லிம்கள் செயல்படுவதும்…அதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்த்தால் முஸ்லிம் இயக்க பிரமுகர்களை அழைத்து வந்து பிரச்சினை செய்வதும் தென்காசி பகுதியில் நடந்து வரும் உண்மை…தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் வாழும் ஹிந்துக்களுக்கு தான் அந்த வலி தெரியும்…கட்டுரை எழுதும் உன்னை போன்ற மூடர்களுக்கு உண்மை ஒருபோதும் விளங்காது…

  3. தென்காசியில் நடந்த படுகொலைகள் பற்றி ஒரு தரப்புச் செய்திகள் மட்டுமே வெளி வந்துள்ளன. இந்த படுகொலைகளை `இரு குடும்பங்களுக்கு இடையேயான மோதல்’ என்று ஏ.டி.ஜி.பி விஜயகுமார், டி.ஐ.ஜி கண்ணப்பன், எஸ்.பி ஷ்ரீதர் உள்ளிட்ட காவல்துறையினர் அடிக்கடி கூறி வருகின்றனர். இதனை மீடியாக்களும் பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது. ஹிந்து எழுச்சிக்கு பாடுபட்டு வந்ததால்தான் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் 17-12-2006 அன்று இரவு 10 மணிக்கு வெட்டிக் கொல்லப்பட்டார். ஹிந்து மக்கள் பிரதிநிதியின் இந்த உயிர் தியாகம் ஏதோ ஒரு புதிய சம்பவம் அல்ல.

    1925ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியே இந்த சம்பவம். அது பற்றிய விபரங்கள் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.1. 1925ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள வண்டிப் பேட்டை என்ற இடத்தை பட்டா போட்டு கொடுக்குமாறு முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்க்க வழக்கறிஞர் வெங்கட்ரமணன்(தென்காசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர்) என்பவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டிஷ் கலெக்டர் இடத்தை நேரில் பார்வையிட வந்தபோது, முஸ்லிம்கள் இரவோடு இரவாக அங்குக் குடியேறி சமையல் செய்து கொண்டிருந்தனர். கலெக்டரிடம் `நாங்கள் இங்கு நீண்ட காலமாக குடியிருந்து வருகிறோம்’ எனப் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டனர். ஆனால் வெங்கட்ரமணனின் தந்தை அவர்கள் `நேற்று தான் இங்கு குடியேறினார்கள். அனைவரது வீட்டு சமையல் பாத்திரங்களைப் பாருங்கள். அனைத்தும் புதிதாக உள்ளன. பல ஆண்டுகளாக சமைத்த பாத்திரங்கள் என்றால் கரி பிடித்திருக்கும். இங்கு உங்களை ஏமாற்றுவதற்காக ஒட்டுமொத்தமாகத் திட்டமிட்டுக் குடியேறியுள்ளனர்’ என்றார். உண்மையை உணர்ந்த கலெக்டர் அவர்களுக்கு பட்டா வழங்க மறுத்து விட்டார்.
    1952ஆம் ஆண்டு அருள்மிகு காசி விஸ்வநாதர் அனுப்பு மண்டபம் வழியாக மொகரம் சப்பரம் செல்வதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுப்பு மண்டபம் வழியாக மொகரம் சப்பரம் செல்வதை கடுமையாக எதிர்த்த கொழும்பு சங்கரன் பிள்ளை முஸ்லிம்களின் கொலை வெறிக்குப் பயந்து ஊரை விட்டே ஓடிவிட்டார்.
    வாய்க்கால் பாலம் அருகிலுள்ள கொடிமரம் பகுதியில் முஸ்லிம்கள் மிலாது நபி கொண்டாடி வந்தனர்.1972ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் அனுப்பு மண்டபம் முன்பு திருக்கார்த்திகை அன்று சுவாமி எழுந்தருளும் இடத்தை “ஹமீதியா திடல்” என்று பெயர் சூட்டி மிலாது நபி விழா நடத்தினார்கள். ஹிந்துப் பெரியவர்கள் இதனை முறியடிக்கும் விதமாக அந்த இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.இந்த விநாயகர் சிலைக்கு மேலே போடப்பட்டிருந்த பந்தலுக்கு முஸ்லிம்கள் தீ வைத்தனர். அப்போது பெரிய அளவில் கலவரம் வெடித்தது. ஹிந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.ஹிந்துக்கள் விநாயகர் சிலை வைத்ததற்கு போட்டியாக முஸ்லிம்கள் வாய்க்கால் பாலம் கொடிமரம் அமைந்துள்ள பகுதியில் ஒரு மௌல்வி அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி திடீர் கொட்டகை போட்டு பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். தென்காசி நகராட்சிக்கு செந்தமான இந்த இடத்தில்தான் குடிநீர் தொட்டி கட்ட பெருந் தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஹிந்துக்கள் விநாயகர் சிலையை அகற்றினால் நாங்கள் பள்ளிவாசல் கட்டமாட்டோம் என்றார்கள். அதிகாரிகளும் ஒத்துக் கொண்டார்கள். விநாயகர் சிலையை அகற்றுவதற்காக முஸ்லிம்கள் நடத்திய நாடகத்திற்கு வெற்றி கிடைத்தது. விநாயகர் சிலையை அரசு அகற்றியது. ஆனால் இப்போதும் அந்த இடத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என்று கூறி அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.
    1980ல் தென்காசிக்கு அருகில் மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்கள் நடத்திய மதமாற்றம் நாட்டையே உலுக்கியது.
    1982-ல் இந்து முன்னணி கூட்டம் இராம.கோபாலன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல ஹிந்துக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பல ஆண்டுகள் அலைக்கழித்தனர்.
    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையின்போது ஹிந்துக்களைக் கிண்டல் செய்வது போன்ற நிகழ்ச்சியை முஸ்லிம்கள் நடத்தி வந்தனர். 1986ஆம் ஆண்டு மொகரம் சப்பரம் தெற்கு மாசி வீதி வழியாக வந்தபோது தியாகி ராமநாத அய்யர் மீதும், அப்போதைய தென்காசி எம்.எல்.ஏ வெங்கட்ரமணன் மீதும் முஸ்லிம்கள் செருப்பு, கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். முஸ்லிம்களின் இந்த அட்டூழியத்தை துணிவுடன் எதிர்த்து போராடியவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர். ஹிந்துக்களைக் கிண்டல் செய்வதற்காக முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலம் அன்றோடு நின்று போனது. அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் குமார் பாண்டியனும் அவரது சகோகதரர்களும் கொல்லப்பட்டனர் என்ற சந்தேகம் தென்காசி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
    1987ஆம் ஆண்டில் பக்ரீத் பண்டிகை அன்று மாலை 6 மணி அளவில் தெற்கு மாசி வீதியில் இந்து முன்னணி தலைவர் பாரதி சுப்ரமணியம் கத்தியால் குத்தப்பட்டார். அவரை குத்தியவர்கள் இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
    திருக்கார்த்திகை தீபத்திற்கு சுவாமி எழுந்தருளும் இடத்தில் பள்ளிவாசல் கட்ட முஸ்லிம்கள் முயற்சித்து வருகின்றனர்.27-12-1990-ல் தென்காசி நகராட்சியில் பள்ளிவாசல் கட்டுவதை பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தபோதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு பல ஆண்டுகள் நடந்தது.
    14-12-2001 அன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் முடிந்து திரும்பியவர்களை வழிமறித்து குங்குமம் வைக்கக் கூடாது என்று கூறி முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அம்மன் கோயிலில் தவசு திருவிழா நடைபெற்றது. அப்போது பலூன் விற்றுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் ஹிந்துப் பெண்களை ஆபாசமாகக் கிண்டல் செய்ய, கலவரம் மூண்டது.தென்காசியின் உண்மை வரலாறு இப்படி இருக்க இந்த பயங்கரப் படுகொலைகளை இரு குடும்பங்களுக்கிடையேயான மோதல் என்று அப்பட்டமாக கதை அளந்து வருகின்றனர். போலீசார் உண்மையை மறைத்து முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஹிந்துக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    Ratheesh at 8:59 PM

Leave a Reply

Your email address will not be published.


*