தீபாவளிக்கு தரமற்ற, அளவுக் குறைந்த துணி வாங்க முயற்சி: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (31.10.2018) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு தீபாவளிக்கு இலவச துணிக் கொள்முதல் செய்வதில் தரமற்ற, அளவுக் குறைந்த துணிகளை வழங்க முயற்சிப்பது குறித்து துணைநிலை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு தீபாவளிக்கு ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய மக்களுக்கு சேலை, கைலி, சட்டை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போதைய அரசுப் பதவி ஏற்றதில் இருந்து இலவச துணி வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு இலவச துணி வாங்குவதில் ஊழல் செய்ய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முயன்றதால் இலவச துணி வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு இ-டெண்டரில் குறிப்பிட்ட கம்பெனிகள் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக புதிய நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதேபோல், குறிப்பிட்ட கம்பெனிகள் மட்டுமே இ-டெண்டரில் கலந்துக் கொண்டன. கம்பெனியின் தகுதி, துணி நூற்பு, நெய்தல் மற்றும் சோதனைக்கூடம், சாயப்பட்டறை ஆகிய அனைத்தையும் ஒரே கம்பெனி செய்தால் விலைக் குறைந்த தரமான துணிக் கிடைக்கும் என்ற காரணம் காட்டி டெண்டரில் போட்டியைக் குறைத்து அதிக விலைக்கு டெண்டர் விட்டுள்ளனர்.

அதாவது தமிழ்நாடு கோஆப்டெக்ஸ், சட்டிஸ்கர் மாநிலத்தில் துணி வாங்கிய விலையைவிட பல மடங்கு அதிக விலைக்கு அதே நிறுவனங்கள் டெண்டர் போட்டுள்ளனர். அனைத்து வசதிகள் கொண்ட கம்பெனி என்று டெண்டரில் தேர்வு செய்த கம்பெனி கொடுத்த மாதிரிகளின் தரத்தை ஆய்வு செய்ததில் கைலி, சட்டை தரம் குறைந்தது எனத் தேர்வாகவில்லை. புடவை மட்டுமே தேர்வாகி உள்ளது.

இதுவரை கைலி, சட்டை புதுச்சேரியின் தட்பவெப்ப நிலைக்குக் காட்டன் துணிகளே வழங்கப்பட்டன. தற்போது பாலியஸ்டர் துணி வழங்க முடிவெடுத்து காட்டன் துணியைவிட அதிக விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர்.

தற்போது வாங்கப்படும் துணியும் அளவுக் குறைத்து வாங்கப்படுகிறது. ஜாக்கெட் 80 செ.மீ. அகலம், லுங்கி 1.18 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால், அகலத்தின் அளவைக் குறிப்பிடாமல் டெண்டர் கோரியுள்ளனர். லுங்கியின் அளவை 1.12 மீட்டராக குறைத்துள்ளனர். சேலை, சட்டை, லுங்கியில் மொத்தம் 20 சதவீத அளவைக் குறைத்துள்ளனர். ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக விற்பனை ஆகாமல் உள்ள துணிகளை வாங்குவதற்காக அதற்கேற்ப டெண்டர் நிபந்தனைகளை உருவாகி உள்ளனர்.

எனவே, தீபாவளிக்கு இலவசமாக வழங்க மேற்கண்டவாறு ஊழல், முறைகேடு செய்யும் நோக்கில் தரமற்ற, அளவுக் குறைந்த துணி வாங்க முயற்சிப்பது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*