பாரதியார் பல்கலைக்கூடத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.10.2018) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசின் நிறுவனமான பாரதியார் பல்கலைக்கூடத்தை இளையராஜா தொடங்க இருக்கும் இசைக் கல்லூரிக்குத் தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம், சிற்பம் ஆகிய நண்கலை, இசை, நடனம் ஆகியவைப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்பக் கழக (AICTE) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் பயின்ற பலர் புகழ்ப் பெற்ற கலைஞர்களாக விளங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையாராஜா புதிதாக இசைக் கல்லூரி ஒன்றை புதுச்சேரியில் தொடங்க இருப்பதாகவும், அதற்குப் பாரதியார் பல்கலைக்கூடத்தைத் தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும், சென்ற வாரம் இளையராஜா நேரில் வந்து பாரதியார் பல்கலைக்கூடத்தைப் பார்வையிட்டு சென்றுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கூடம் 10.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இதில் ஒரு சென்ட் நிலம் வேறு பயன்பாடிற்கு மாற்றப்பட்டாலும்கூட அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE), புதுவைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் ரத்தாகும். இதனால், மாணவர்களின் படிப்பு செல்லாததாகி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

பாரதியார் பல்கலைக்கூடம் பல்கலைக்கழக மானியக் குழுவின் 2 எஃப். 12 (பி) அந்தஸ்து (UGC 2f and 12b Status) பெற்றுள்ள நிறுவனம் என்பதால் மத்திய அரசிடமிருந்து நிதியுதவிப் பெற முடியும். ஆனால், புதுச்சேரி அரசு இதற்கான எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

புதுச்சேரி அரசுப் பாரதியார் பல்கலைக்கூடத்தையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலத்தையும் தனியாருக்குத் தாரை வார்ப்பது ஏற்புடையதல்ல.

எனவே, பாரதியார் பல்கலைக்கூடத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியை கைவிட்டு, போதிய நிதி ஒதுக்கீடு செய்து பல்கலைக்கூடம் மேலும் வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*