புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.10.2020) விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சென்ற 15.09.2020 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீட்டில் தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. இச்சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரையில் தமிழக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மேற்சொன்ன இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைக் குறித்து கவலைத் தெரிவித்ததோடு கண்கலங்கி உள்ளார். மேலும், தமிழக ஆளுநரின் செயலர் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த இடஒதுக்கீடு சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரையில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த போவதில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு கொண்டு வந்த பின்னால் புதுச்சேரியின் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவி மட்டும் நீட்டில் தேர்ச்சிப் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைப் பேர் நீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

புதுச்சேரியில் 2 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1570 மருத்துவ இடங்கள் உள்ளன. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு 50 சதவீத இடங்களைப் பெறுவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து வெறும் 33 சதவீத மருத்துவ இடங்களை மட்டுமே அரசு பெறுகிறது. மேலும், இதில் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு மருத்துவ இடங்களைக்கூட தருவதில்லை. இதனால், புதுச்சேரி மாணவர்கள் பெருமளவில் வஞ்சிக்கப்படுகின்றனர்.

எனவே, தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு நடத்த கூடாது. மேலும், அரசு ஒதுக்கீட்டிற்காக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடம் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வேண்டுமெனவும் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*