புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து கட்சி, இயக்கங்களின் கருத்தறிந்து முடிவெடுக்க வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (06.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப் பகுதியில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்குத் தடைச் சட்டம் அமுலில் இருந்தது.

இந்நிலையில், கடந்த 04.05.2020 அன்று ஊரடங்கைப் புதுச்சேரி அரசு தளர்த்தியுள்ளது. இதனால் இயல்பான நிலையைவிட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நகரின் வீதிகளில் சமூக விலகல் மற்றும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஒரே நேரத்தில் குவிந்தனர். புதுச்சேரி அரசு தற்போது வரையிலும் ஊரடங்கை தளர்த்தினாலும் சமூக விலகல் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றாதது கவலைக்குரியது ஆகும்.

இத்தகையச் சூழலில் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை அரசு திறப்பது மேலும் ஆபத்தினை விலை கொடுத்து வாங்கும் செயலாகும். அரசின் மதுக் கொள்கை ஏற்கனவே வயது வரம்பின்றி விற்பனைச் செய்யும் கொள்கையாக உள்ளது. இதனால் மது விற்பனை என்பது புதுச்சேரியின் கலாச்சார நடைமுறையாக மாறிவிட்டது.

புதுச்சேரி ஆட்சி பரப்பில் மதுவிலக்கு முழுமையாக தளர்த்தப்பட்ட மாநிலம் என்பதால் தமிழகப் பகுதிகளில் இருந்து அதிகளவில் இங்கு மது பிரியர்கள் வருவது நடைமுறையில் உள்ளது. தற்போது புதுச்சேரியின் அண்டை மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியுள்ளன.

மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு குறுக்கு பாதைகள் மற்றும் வயல்வெளிப் பாதைகள் வழியாக புதுச்சேரி பகுதி மதுபானக் கடைகளுக்கு மது அருந்த மக்கள் வந்தால், புதுச்சேரியில் அபாயகரமான நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

எனவே, புதுச்சேரி அரசு தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு முன்னதாக புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மக்கள் நலன் கருதி எடுக்கக்கூடாது என அரசை வலியுறுத்துகிறோம்.

மேலும், புதுச்சேரி அரசு தற்போதுள்ள நோய்த் தொற்று நெருக்கடி தருணத்தில் மதுக் கடைகள் திறப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு எடுக்க வேண்டுமெனவும் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.