குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.11.2022) விடுத்துள்ள அறிக்கை:

குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குயினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி முதல்வரை வலியுறுத்துகிறோம்.

குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் (Group B Non-Gazetted Posts) பணி நியமனங்களில் புதுச்சேரியில் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை. இதனால், காவல் உதவி ஆய்வாளர், வேளாண் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, புள்ளியல் ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16.11.2022 அன்று கட்சி, சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினோம். இதனைத் தொடர்ந்து குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தக் கூடாது எனத் துணைநிலை ஆளுநர், முதல்வர், உள்துறை அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கும், அரசு உயரதிகாரிகளுக்கும் கட்சி, அமைப்புத் தலைவர்கள் 30 பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பினோம்.

கடந்த 17.11.2022 அன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 18.11.2022 அன்று மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (DP&AR) குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களில் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அரசாணை வெளியிட அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதற்கான குறிப்பினை அனுப்பியுள்ளது. ஆனால், இதன் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிக் கொள்கை முடிவெடுக்கப்படாமல் காலதாமதமாகிறது. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, புதுச்சேரி முதல்வர் இதில் தலையிட்டு இனியும் காலந்தாழ்த்தாமல் குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிக் கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*