திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், பொருளாளர் மு.நாகராஜன், துணைத் தலைவர் கோ.ஆதிமூலம், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (15.11.2022) விழுப்புரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

திருக்கோவிலூர் அருகேயுள்ள தி.மண்டபம் கிராமத்தில் பெருமாள் மண்டகப்படி உச்சியில் இரண்டு குடிசையில் பழங்குடி இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 22.11.2011 அன்று 6 இருளர் ஆண்களைத் திருக்கோவிலூர் போலீசார் கடத்திச் சென்று கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்கில் சிக்க வைக்கக் கடும் சித்தரவதைச் செய்தனர். அப்போது 4 இருளர் பெண்களையும் கடத்திச் சென்று அப்பகுதியில் உள்ள தைல மரத் தோப்பில் பாலியல் வன்கொடுமைச் செய்தனர். இதில் ஒரு பெண் கர்ப்பினியாவார்.

இதுகுறித்து 26.11.2011 அன்று அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது (குற்ற எண்.887/2011). இதில் அப்போதைய திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன், தனிக் காவல் உதவி ஆய்வாளர் இராமநாதன், தலைமைக் காவலர் தனசேகரன், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக காண்பிக்கப்பட்டனர். இதில் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் பிணைப் பெற்று வெளியே உள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இருளர் பெண்களைக் கடந்த 30.11.2011 மற்றும் 01.12.2011 ஆகிய இரு நாட்களிலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கட்சித் தலைவர் வெ.தங்கமணி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் கடத்த முயன்றார். இதுதொடர்பாக கடந்த 02.12.2011 அன்று பிரபா.கல்விமணி புகார் அனுப்பியுள்ளார். இப்புகாரினை முதல் தகவல் அறிக்கையாக திருக்கோவிலூர் காவல்துறை பதிவு செய்தனர் (குற்ற எண்.982/2011 நாள் 31.12.2011). இப்புகாரினை உண்மைக்குப் புறம்பானது என திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் 03.11.2022 அன்று அறிக்கைக் கொடுத்துள்ளார்.

ஆனால், மேற்படி புகாரை அடுத்து மேற்சொன்ன வெ.தங்கமணி பிரபா.கல்விமணி, பி.வி.இரமேஷ் மீது கடந்த 03.12.2011 அன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில் 30.11.2011 அன்று பிரபா.கல்விமணி, பி.வி.இரமேஷ் ஆகிய இருவரும் மேற்சொன்ன வெ.தங்கமணி மற்றும் அவரது கட்சியினரைச் சாதி சொல்லி இழிவாகத் திட்டிக் கடுமையாக தாக்கியத்காகக் கூறியுள்ளனர். மேலும், அப்புகாரில் “அந்தப் பெண்களை விசாரித்தபோது, அந்தப் பெண்கள் போலீசார் அழைத்துச் சென்று கற்பழித்தாகக் கூறவில்லை. அவர்களை விசாரித்ததாக மட்டுமே கூறினார்கள்” என்று தெரிவித்துள்ளார். இப்புகார் மீது பிரபா.கல்விமணி, பி.வி.இரமேஷ் மீது திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (குற்ற எண்.908/2011 நாள் 03.12.2011).

இப்பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக மூன்று வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ. புலன்விசாரணைக் கேட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி தொடுத்துள்ள பொதுநல வழக்கு (W.P.No.27682 of 2011, நாள் 28.11.2011), பி.வி.இரமேஷ் தொடுத்துள்ள வழக்கு (W.P.No.1361 of 2012 நாள் 11.01.2012), பிரபா.கல்விமணி தொடுத்துள்ள வழக்கு (CRL.O.P.No.14081 of 2016). பிரபா.கல்விமணி, பி.வி.இரமேஷ் மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 ஆண்டுகளாக ஏன் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய்வில்லை என அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை (16.11.2022) விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில்தான் காவல் ஆய்வாளர் சீனிவாசன் நேற்று (14.11.2022) விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இருளர் பெண்களைக் கடத்த முயன்ற வெ.தங்கமணி மற்றும் அவரது கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கில் காவல்துறை குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யவில்லை. ஆனால், பிரபா.கல்விமணி, பி.வி.இர்மேஷ் மீது போடப்பட்ட பொய் வழக்கில் 2016-இலேயே குற்ற அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இந்தப் பின்னணியில், கடந்த 11 ஆண்டுக் காலமாக இருளர் பெண்கள் பாலியல் வழக்கில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யாதது ஏற்புடையதல்ல. எனவே, தமிழக அரசும் காவல்துறையும் தலையிட்டு உடனடியாகக் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் அதைக் கோப்பிற்கு எடுத்து வழக்கு விசாரணையை விரைந்து முடித்து நீதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்ட இருளர் பெண்கள் மற்றும் சித்தரவதைக்கு உள்ளான இருளர் ஆண்கள் என மொத்தம் 15 பேருக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் என மொத்தம் 75 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேற்சொன்ன காவல் ஆய்வாளர் சீனிவாசன் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடைப் பெற்றுள்ளார். இத்தடையை நீக்கி நிவாரணம் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் வரும் டிசம்பர் 14, 2022 அன்று பழங்குடி இருளர்களுக்குச் சாதிச் சான்று, வீட்டு மனைப் பட்டா கேட்டு கடலூரில் இருந்தும், வரும் பிப்ரவரி 4, 2023 அன்று இருளர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள், காவல்துறைச் சித்த்கரவதைகளைத் தடுக்கக் கேட்டு விழுப்புரத்தில் இருந்தும் “சென்னை கோட்டை நோக்கி நடைப்பயணம்” மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

இச்சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*