போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.11.2022) விடுத்துள்ள அறிக்கை:

போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகங்களுக்குப் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் 60 போலீஸ் எஸ்.ஐ.க்கள் பணி நியமனத்திற்கான அறிவிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது. இது குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பதவி என்பதால் புதுச்சேரியில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீடான 27 சதவீதக் கணக்குப்படி 60 பணியிடங்களில் 19 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம், மீனவர்களுக்கு 2 சதவீதம், முஸ்லிம்களுக்கு 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 0.5 சதவீதம் என நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படவில்லை. போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறைதான் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூக மக்கள் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மத்திய அரசு 6ஆவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி குரூப் சி பிரிவைச் சேர்ந்த அலுவலர்களைப் பி பிரிவாக மாற்றியது. இதனால் குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்கள் நியமனம் செய்யும் போது மத்திய அரசின் இடஒதுக்கீட்டையே பின்பற்ற வேண்டியுள்ளது.

புதுச்சேரி மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 22.12.2011 அன்று தனது 45ஆவது அறிக்கையில் குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களில் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றும் வகையில் அமைச்சரவையில் முடிவெடுத்து அரசாணை வெளியிட வேண்டுமென அரசிற்கு அறிவுறுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர்கூட அரசுக்கு மீண்டும் நினைவூட்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

சமூக நலத்துறை சார்பில் மேற்சொன்னபடி அரசாணை வெளியிட அனுப்பப்பட்ட கோப்பும் தலைமைச் செயலகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் கிடப்பில் உள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சமூக ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சித்து வருகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிக் கொண்டு வரப்பட்ட 103ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு போலீஸ் எஸ்.ஐ. பணியிட நியமனத்தில் 60 இடங்களில் 6 இடங்களைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு ஒதுக்கியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் சமூக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். அதுவரையில், போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.

இல்லையேல், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*